Ad

திங்கள், 7 ஜூன், 2021

WTC இறுதிச்சுற்று - 2 : இலங்கையில் கேப்டன் கோலியின் முதல் வெற்றி… எப்படியிருந்தது அந்த முதல் டெஸ்ட்?

தொடக்க வீரராக 23 வயதே நிரம்பிய கே.எல்.ராகுல், மிடில் ஆர்டரில் டெஸ்ட் ஃபார்மேட்டிற்கு புதியவரான ஸ்டூவர்ட் பின்னி, தோனி என்னும் தலைசிறந்த கீப்பரின் இடத்தில் விரித்திமான் சாஹா, ஜாகிர் கான் இல்லாமல் வேக பந்துவீச்சு கூட்டணி... இப்படியாகத்தான் அமைந்தது விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணி பெற்ற முதல் வெற்றியும் இதுதான்.

தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பால் சிட்னியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட்டில் கேப்டனாகிறார் விராட் கோலி. ஏற்கெனவே அந்த தொடர் இந்திய அணியின் கையை விட்டு போயிருந்தாலும் இப்போட்டிக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. தோனியின் கேப்டன் பொறுப்பை எப்படி கையாளப்போகிறார் இளம் கோலி என்பதே அதற்கான காரணம். அவை அனைத்திற்கும் தனது பேட்டால் பதில் சொன்னார் கோலி.

147 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் இமாலய ஸ்கோருக்கு அருகில் சென்று போட்டியை டிரா செய்தது இந்தியா. இதற்கடுத்ததாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் இலங்கைக்கு பயணப்பட்டது இந்திய அணி. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இது. ஆஸ்திரேலியாவில் அவசர அவசரமாக கேப்டன்சி பதவியேற்ற கோலிக்கு அதன் பிறகான முதல் சவாலான வெளிநாட்டு தொடர் இதுவே. இடையில் வங்கதேசம் சென்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி டிரா செய்திருந்தது.

Ranagana Herath

பொதுவாக துணைக்கண்ட ஆடுகளங்களைவிட இலங்கை ஆடுகளங்கள் சற்று மெதுவாக இருக்கும். இது வேகப்பந்து வீச்சுக்கு மிக சவாலாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் அமையும். எனவே முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உட்பட ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது இந்தியா. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் சாய்க்க, மீதமுள்ள அனைத்து விக்கெட்டுகளையும் அஷ்வின்-மிஷ்ரா கூட்டணி தங்களின் சுழலால் வீழ்த்தி 183 ரன்களுக்குள் இலங்கையை ஆட்டமிழக்க செய்தனர்.

பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் கோலி சதமடிக்க 375 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழலில் சுருண்ட இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாகவே சுதாரித்துக் கொண்டது. தினேஷ் சண்டிமல் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 367 ரன்கள் குவித்தது இலங்கை. கடைசி இன்னிங்ஸில் 176 எனும் எளிய இலக்கை இந்திய அணி மிக சுலபமாக எட்டிவிடும் என்றே அனைவரின் நினைக்க யாரும் எதிர்பாராத வகையில் அந்த எண்ணத்தில் மண் அள்ளி போட்டார் இலங்கையின் ரங்கனா ஹெராத். இந்திய விக்கெட்டுகள் பத்தில் ஏழை ஹெராத் தூக்க மீதி மூன்றை கௌஷல் என்னும் ஆஃப் ஸ்பின்னர் சாய்க்க வெறும் 112 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தது இந்தியா. இரண்டு டிராக்களுக்கு பிறகு தனது கேப்டன்சியில் முதல் தோல்வியை சந்தித்தார் விராட் கோலி.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இரண்டாவது டெஸ்ட். அணியின் லோயர் ஆர்டர் பேட்டிங்கை பேலன்ஸ் செய்ய கடந்த ஆட்டத்தில் சோபிக்காத ஹர்பஜனுக்கு பதில் ஆல்ரவுண்டர் பின்னியை கொண்டுவந்தார் கோலி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ராகுல் சதமடிக்க கோலி, ரோஹித் மற்றும் சாஹா முறையே அரைசதமடிக்க 393 ரன்கள் குவித்தது இந்தியா. மேத்யூஸின் சதத்தால் இலங்கை அணியும் தாக்குபிடித்து 306 ரன்களில் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் ராகுல் செய்ததை இப்போது ரஹானே சதம் அடித்து நிகழ்த்த இந்திய அணி மறுபடியும் 300 ரன்களைத்தாண்டி டிக்ளர் செய்தது.

413 எனும் இமாலய இலக்கை துரத்தத் தொடங்கும் இலங்கை அணியின் முதல் மூன்று விக்கெட் உட்பட ஐந்தை அஷ்வின் வீழ்த்த மற்ற பேட்ஸ்மேன்கள் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் ஆட்டமிழக்க வெறும் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது இலங்கை. 278 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியுடன் தன் தலைமையில் வெற்றிக்கணக்கை இப்போட்டியில் இருந்து தொடங்கினார் கோலி.

kohli win

தொடரை நிர்ணயம் செய்யும் மூன்றாவது போட்டியில் விஜய்க்கு பதில் உள்ளே வந்த அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான செதேஷ்வர் புஜாரா 289 பந்துகள் சந்தித்து 145 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 312 ரன்கள் குவித்தது. பேட்டிங்கில் இருந்த அதே பாய்ச்சலுடன் பெளலிங்கிலும் இந்திய அணி அசத்த நல்ல முன்னிலையில் இருந்த ஸ்கோரை இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல இலக்காக மாற்றினர் இந்திய பேட்ஸ்மேன்கள். 386 என்னும் இலக்கை நிர்ணயித்து இலங்கை அணியை 117 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கோலியின் படை.

wtc2021

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேற்கிந்திய மண்ணில் வென்ற டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் தொடரும் இதுவே. அந்நிய மண்ணில் தனக்கு வைக்கப்பட்ட முதல் டெஸ்ட்டை வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற கோலிக்கு அடுத்து தன் சொந்த மண்ணிலேயே காத்திருந்தது மிகப்பெரிய சவால்.

உலகின் எந்த மூலையிலும் தனது அசுர பலம் படைத்த வேகப்பந்துவீச்சாளர்களால் எதிரணியை சுருட்டி விடும் தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர்தான் அது. துணை கண்டத்தில் அசைக்கமுடியாத இந்திய அணியின் சுழலா, எம் மண்ணிலும் வேகம் குறையாத தென்னாப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சா....

நாளை இறுதிச் சுற்று 3-ல் அலசுவோம்!



source https://sports.vikatan.com/cricket/kohlis-first-test-win-as-captain-in-sri-lanka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக