புதுச்சேரியில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை அடுத்த ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்திருக்கிறது அரசு. இதுகுறித்து புதுவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டிருக்கும் உத்தரவில், ’புதுவையில் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்றின் பாதிப்பு குறைந்திருப்பதால் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.
தினமும் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். பூங்காங்கள், தியேட்டர்கள், கருத்தரங்கக் கூடங்கள், அருங்காட்சியகம், பொழுதுபோக்கு இடங்கள், நூலகம் மற்றும் அரசியல் கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், திருவிழா உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளிர்சாதன வசதியின்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழ கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.
பெரிய மார்க்கெட்டிலுள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். உணவகங்கள், தேநீர் மற்றும் ஜூஸ் கடைகள் மாலை 5 மணி வரை இயங்கும். ஆனால் அங்கு அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. பார்சல் உணவுகள் மற்றும் வீட்டுக்கு சென்று உணவை விநியோகிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். சில்லறை மதுக்கடைகள், கள் மற்றும் சாராயக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். கூட்ட நெரிசலின்றி கொரோனா விதிகளை கடைப்பிடித்து மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை கலால் துறை மற்றும் காவல் துறைகள் கண்காணிக்க வேண்டும். சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து, பேருந்து, கார் மற்றும் ஆட்டோக்கள் மாலை 5 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்படும்.
மேலும் மருத்துவம், திருமணம், முக்கிய உறவினர்களின் மரணம், நேர்காணல், தேர்வு ஆகியவற்றுக்கு எல்லா நாட்களிலும் வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படும். அந்த சூழல்களில் உரிய ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள் விதிமுறையை பின்பற்றி இயங்கலாம். கடற்கரை சாலை காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் மாஸ்க் அணிந்து நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 25 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள் கட்டுமானப் பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க அனுமதி அளிக்கப்படும்.
அனைத்து விவசாயப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். பெட்ரோல் நிலையம், ஏ.டி.எம் மையங்கள், தொலைத்தொடர்புகள், இணைய சேவை, ஒளிபரப்பு, கேபிள் சேவை, ஊடகம், தகவல் தொழில்நுட்ப சேவை, குடிநீர் விநியோகம், துப்புரவு, மின்வினியோகம், குளிர் சாதன பொருட்கள் பாதுகாப்பகம், தனியார் செக்யூரிட்டி சேவை, நகராட்சி, தீயணைப்பு நிலையங்கள் ஆகியவை செயல்படலாம். அனைத்து மின்னனு வணிக நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். அதேபோல அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 15 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Also Read: புதுச்சேரி: ’அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3,000!’ கொரோனா நிதியை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி
அதேபோல அனைத்து விதமான மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை ஆணையர் சுதாகர் தலைமையில் நேற்று மாலை மதுக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது மதுக்கடைகளில் அனைவரும் சமூக இடைவெளியை கடடைப்பிடிக்க வேண்டும், மது வாங்க வருபவர்கள் இடைவெளிவிட்டு நிற்பதோடு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்து அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/due-to-decreasing-corona-permission-to-open-all-the-shops-including-liquor-shops
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக