கருத்து கூறி பொதுவெளியில் பஞ்சாயத்து செய்து பல நாள்கள் ஆகிவிட்டதாலோ என்னவோ, இந்த வாரம் மீண்டும் கோதாவில் குதித்துவிட்டார் சஞ்சய் மஞ்ரேக்கர். என்ன இப்போது ஜடேஜாவில் இருந்து அஷ்வின் பக்கம் வந்திருக்கிறார். சமீபத்தில் நடந்த உரையாடலின்போது, "அஷ்வின் ஆல் டைம் கிரேட் என்று யாரேனும் குறிப்பிடும்போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரு இன்னிங்ஸில்கூட அவர் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை" என்று கூறியிருந்தார். சமூக வலைதளங்களில் இது விவாதத்தைக் கிளப்பியது.
தொடர் விமர்சனங்களைச் சந்தித்த மஞ்ரேக்கர், நேற்று ஆல் டைம் கிரேட்டுக்கு இலக்கணம் வேறு கொடுத்திருந்தார். "கிரிக்கெட் உலகின் உச்சபட்ச மரியாதை கௌரவம்தான் ஆல்டைம் கிரேட் என்பது. என் புத்தகத்தில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்கள் ஆல்டைம் கிரேட்கள். அஷ்வின் இன்னும் அவர்களின் உயரத்தில் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கும் பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்துகொண்டிருக்க, இதற்கு அஷ்வின் ரிப்ளை கொடுத்திருக்கிறார். முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் காரசாரமாக பதிலளிக்கும் அஷ்வின், இப்போது காமெடி ரூட்டைக் கையில் எடுத்திருக்கிறார். 'அந்நியன்' படத்தில் விவேக்கிடம் விக்ரம் சொல்லும், "அப்டி சொல்லாதடா சாரி, மனசு வலிக்கிறது" என்ற மீம் மூலம் பதிலளித்திருக்கிறார். அஷ்வினின் இந்த காமெடி ரிப்ளை வைரலாகிக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் உள்பட பலரும் சினிமா வசனங்களால் ரிப்ளை செய்துகொண்டிருக்கிறார்கள்.
source https://sports.vikatan.com/cricket/ashwins-funny-reply-to-manjrekars-all-time-great-comment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக