கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எது சிறந்த தடுப்பூசி என்ற விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களிடம் ஓர் ஆய்வு (COVAT) நடைபெற்றுள்ளது. இந்தியாவில் 13 மாநிலங்களில் 22 நகரங்களில் பணியாற்றும் 515 பேரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 325 பேர் ஆண்கள், 227 பேர் பெண்கள். ஆய்வு முடிவில் இரண்டு தடுப்பூசிகளுக்கும் இரண்டாவது தவணைக்குப் பிறகு நேர்மறையான விளைவுகள் தென்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பாக, கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு விஷயங்களில் கோவாக்சினைவிட சிறப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் நோய்க்கு எதிரான ஆன்டிபாடி கோவாக்சினைவிட கோவிஷீல்டில் 10 மடங்கு அதிகமாக உருவாகியிருக்கிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கோவாக்சினைவிட கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களுக்கு 6 மடங்கு ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வானது முதல்நிலை ஆய்வு என்பதால் இதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு பொதுமக்களிடம் அமல்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் ஏ.கே சிங் கூறுகையில், ``இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறும். தடுப்பூசிக்குப் பிறகு, உருவான ஆன்டிபாடிக்களின் அளவு எப்போது குறையத் தொடங்குகிறது என்பதைப் பற்றிய ஆய்வைத் தொடர வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஆய்வின்படி கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்தியவர்களுக்கு ஆன்டிபாடி அதிகமாகக் காணப்படுவது ஏன் என்று குழந்தைகள் நல மருத்துவர் சஃபி சுலைமான் விளக்குகிறார்.
``கோவிட்-19 தொற்றைத் தடுப்பதற்காகச் செலுத்தப்பட்ட தடுப்பூசியை உடல்கள் ஏற்றுக்கொண்டு வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடியை உருவாக்கியிருக்கிறதா என்பதற்காக இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தடுப்பூசிக்குப் பிறகு, உடலில் உருவான ஆன்டிபாடியின் அளவு (Seropositivity) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சினைவிட கோவிஷீல்டில் அதிகம் இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் குறிப்பிட்ட மில்லி ரத்தத்தில் ஆன்டிபாடி எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறியும் பரிசோதனை இருக்கிறது. ஆன்டிபாடியின் அளவை `ஆர்பிட்ரரி யூனிட்ஸ்' (Arbitrary units - AU) என்று கணக்கிடுவார்கள். அந்த வகையில் கோவிஷீல்டு எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒரு மில்லி ரத்தத்தில் 115 - 127 AU இருந்திருக்கிறது. கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களுக்கு 51 AU தான் இருந்திருக்கிறது.
கோவிஷீல்டு புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி. கொரோனா வைரஸில் காணப்படும் முள்போன்ற அமைப்பான ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிராகச் செயலாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி. வைரஸை செயலிழக்க வைத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி கோவாக்சின். பொதுவாகத் தடுப்பூசி செலுத்தப்படும்போது Neutralizing Antibody மற்றும் Binding Antibody ஆகிய இரண்டு வகையான ஆன்டிபாடி உடலில் உருவாகும். ஆய்வில் எந்த வகை ஆன்டிபாடி காணப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசியில் ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிரான ஆன்டிபாடி அடினோவைரஸின் மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிரான ஆன்டிபாடி மற்றும் அடினோவைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி இரண்டும் சேர்ந்தும் `பைண்டிங் ஆன்டிபாடி' உருவாகும். கோவிஷீல்டு செலுத்தியதால் இந்த வகை ஆன்டிபாடி அதிகளவில் உடலில் காணப்பட்டிருக்கலாம்.
ஏற்கெனவே நடைபெற்ற பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சுமார் 150 நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பலதரப்பட்ட நாடு, இன மக்களிடையே ஆய்வுகளையும் செய்துள்ளனர். கோவாக்சின் 9 நாடுகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு பற்றிய ஆய்வுகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன. கோவாக்சின் பற்றிய ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே நடைபெறுகின்றன. அதில் எந்தவித முன்னேற்றமும் தெரிவிக்கப்படவில்லை. கோவாக்சின் பற்றிய தரவுகளை முழுமையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் அதுபற்றிய நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
இப்போது பரவி வரும் உருமாறிய வைரஸ் அனைத்தும் முழுவதுமாக உருமாற்றம் அடையவில்லை. அதன் டி.என்.ஏ வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. எனவே, தற்போது உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 9 வகையான தடுப்பூசிகளுமே உருமாறிய அனைத்து வகையான வைரஸ்களுக்கும் எதிராகவும் செயலாற்றும்.
கோவிஷீல்டு மட்டும்தான் போட வேண்டுமா?
இந்த ஆய்வுக்கு உட்படுத்தியவர்களில் 27 பேருக்கு லேசானது முதல் மிதமான கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 25 பேருக்கு லேசான பாதிப்பும் 2 பேருக்கு மட்டுமே மிதமான பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். எனவே, இரண்டு தடுப்பூசிகளையுமே போட்டுக்கொள்ளலாம்.
இரண்டு தடுப்பூசிகளிலுமே பாதகம் என்ற அம்சம் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் வழக்கமாக ஏற்படும் ஒவ்வாமையோ, பக்கவிளைவோ ஏற்படலாம். சாதாரணமாக அடிபட்டால்கூட நாம் போட்டுக்கொள்ளும் டெட்டனஸ் (டிடி) தடுப்பூசிக்குக்கூட கை வீங்குவது, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
இப்போதைய சூழலில் அந்தத் தடுப்பூசிதான் சிறந்தது, அது கிடைக்கும் வரை காத்திருப்போம் என்ற அணுகுமுறை தவறானது. கிடைக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது சிறந்த தடுப்பு நடவடிக்கை. மாறாக, தேர்வு செய்துகொண்டிருந்தால் இரண்டாம் அலையும் முடிவுக்கு வர முடியாது. மூன்றாம் அலையையும் தடுக்க முடியாது. நம் நாட்டில் 75% மக்கள் எவ்வளவு வேகமாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறோமோ அவ்வளவு வேகமாக இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்" என்கிறார்.
அனுமதி மறுப்பு
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாடு என்ற பட்டியலின் கீழ் இடம்பெறாததால் பல்வேறு நாடுகள் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைத் தங்கள் நாடுகளுக்குள் அனுமதிப்பதில்லை. பல்வேறு நாடுகளில் கோவிட்-19 தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால் சர்வதேச பயணங்களைத் தொடங்க அவை திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்களை மட்டும் அவை தங்கள் நாடுகளுக்கு அனுமதிக்கும்.
Also Read: Fact Check: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு வருடங்களில் மரணமா... வதந்தியும் உண்மையும்!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் கோவாக்சினை அங்கீகரிக்கவில்லை. இதனால் வெளிநாடுகளில் படிக்கும், படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், தொழில்முனைவோர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் அவர்களால் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. உலகம் முழுவதுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் அவை அமைந்துள்ள நாடுகளில் புழக்கத்திலுள்ள கோவிட்-19 தடுப்பூசி அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலிலுள்ள தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கும். அந்த வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கு தடையிருக்காது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள், மாநகராட்சி போன்றவை ஓர் அட்டையில் தடுப்பூசி செலுத்தியதாகப் பதிவுசெய்து கொடுக்கின்றனர். அதை ஆதாரமாக சர்வேதச பயணங்களுக்கோ, தடுப்பூசி சான்று கேட்கும் இடங்களிலோ சமர்ப்பிக்க முடியாது. அரசின் CoWIN ஆப்பில் பதிவு செய்து அதில் ஜெனரேட் செய்யப்படும் சான்றிதழ் மட்டுமே உரிய சான்றாக அங்கீகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/health/healthy/new-study-says-covishield-produces-more-antibodies-than-covaxin-what-it-means
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக