கல்குவாரி ஒன்றில் தேங்கியிருந்த மழைநீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுமிகளில், நீச்சல் தெரியாததால் இரண்டு சிறுமிகள் தண்ணீரில் சிக்கி இறந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சி அருகில் உள்ள சிறிய கிராமம் பொரணி. இந்தக் கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மகள் காவ்யா. அதேபோல் மேற்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமியின் மகள் ஸ்ருதி. இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் முறையே 3-ம் மற்றும் 8-ம் வகுப்புகள் படித்து வந்தார்கள்.
Also Read: கரூர்: சிறுவர்கள் சண்டை; தட்டிக் கேட்கப்போன தாய்! - கொலையில் முடிந்த சோகம்
அதேபோல், இதே ஊரைச் சேர்ந்த சிறுமிகள் தர்ஷினி, கஸ்தூரி. இவர்கள் நான்கு பேரும் அரசுப் பள்ளி அருகில் உள்ள கல்குவாரி ஒன்றில் தேங்கியிருந்த மழைநீரில் குளிக்கச் சென்றனர். இந்தக் கல்குவாரி கரூர் ஜவகர் பஜாரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கல்குவாரி என்று சொல்லப்படுகிறது.
அந்தக் கல்குவாரியில் இறங்கி நான்கு சிறுமிகளும் குளிக்க முயல, ஆழம் அதிகமாக இருந்ததால் நான்கு பேரும் நீரில் மூழ்கத் தொடங்கினர். அவர்கள் நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாததால், 'எங்களைக் காப்பாத்துங்க' என்று அலறியிருக்கிறார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்ட, அருகில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சரோஜா என்ற பெண், கல்குவாரிக்குள் இறங்கி தர்ஷினியையும் கஸ்தூரியையும் காப்பாற்றினார்.
ஆனால், அதற்குள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்ட காவ்யாவையும் ஸ்ருதியையும் அவரால் காப்பாற்றமுடியவில்லை. இதனால், ஊருக்குள் சென்று சரோஜா தகவல் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு, பதறியடித்துக்கொண்டு வந்த ஊர்மக்கள், நீருக்குள் இறங்கி இரண்டு சிறுமிகளையும் தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, கல்குவாரியின் அடியில் பிணமாகக் கிடந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். அதற்குள், இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கல்குவாரி நீரில் சிக்கி இறந்த காவ்யா, ஸ்ருதி ஆகிய இரண்டு சிறுமிகளின் உடலையும் உடற்கூறாய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி தண்ணீரில் மூழ்கி இரண்டு அரசுப் பள்ளி மாணவிகள் இறந்த சம்பவம், பொரணி பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/two-girl-children-died-in-karur-quarry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக