தமிழக - கேரள எல்லையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஓர் அடர்ந்த வனத்துக்குள் இருக்கிறது அந்தப் பழங்குடி சிறுமியின் வீடு. மின்சாரம் இல்லை, செல்போன் டவர் கிடைக்காது. யாரிடமாவது போனில் பேச வேண்டுமென்றால்கூட, வீட்டில் இருந்து சில கி.மீ தூரம் வெளியில் வர வேண்டும். பேருந்துக்கு சுமார் 8 கி.மீ தூரம் நடக்க வேண்டும். யானைகள், புலிகள் போன்ற வனவிலங்குகள் நடமாடிக் கொண்டிருக்கும் பாதையைக் கடந்துதான், தினசரி அவர்கள் வீட்டுக்கும் சாலைக்கும் பயணிக்க வேண்டும்.
Also Read: பிர்சா முண்டா... பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரே பழங்குடி இனத்தவரின் புகைப்படம்... யார் இவர்?
படிப்பதற்கு தரமான ஓர் பள்ளிக்கூடம் இல்லை. அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் அந்தக் கிராமத்துக்குள் வர முடியாது. இப்படி அடிப்படை வசதிகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் இருப்பதால் அந்தக் கிராமத்தில் உள்ள பழங்குடி சிறுமிகளின் பள்ளிப் படிப்பு கானல் நீராகத்தான் இருந்து வந்தது.
வால்பாறை அருகே, முதுவர் பழங்குடி மக்கள் வசிக்கும் பூச்சிக் கொட்டாம்பாறை என்ற கிராமத்தில்தான் இந்த நிலைமை. இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லமுத்து என்பவரின் மகள் ஶ்ரீதேவி, சுமார் 100 கி.மீ தூரம் பயணித்து கேரளா சென்று படித்து 10-ம் வகுப்பு தேர்வில் ஏ ப்ளஸ் கிரேடு (95 சதவிகிதம்) எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
மாநிலத்திலேயே முதன்மை மதிப்பெண் பெற்றதால், கேரள அரசு ஶ்ரீதேவியைப் பாராட்டி பரிசு வழங்கிய, அவரின் உயர்கல்விக்கான செலவையும் ஏற்றுள்ளது. தமிழக வனத்துறையும் ஶ்ரீதேவியைப் பாராட்டி பரிசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஶ்ரீதேவியின் தந்தை செல்லமுத்து, `கருமுட்டிதான் எங்க சொந்த கிராமம். அங்க விவசாயத்துக்கு வழியில்லாததால பூச்சி கொட்டாம்பாறைக்கு வந்துட்டோம். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன். எங்க முதுவர் இனத்துல பெண் குழந்தைகள படிக்க வைக்க மாட்டாங்க. ஆனா, பசங்களும் எங்கள மாதிரி ஆகிடக்கூடாதுனு அவங்கள கேரளா, சாலக்குடிக்கு அனுப்பி படிக்க வெச்சுட்டு இருக்கேன்.
என் பெரிய பொண்ணு ப்ளஸ் டூ முடிச்சுருக்கா. இப்ப சின்ன பொண்ணு ஜில்லாலயே ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிருக்கா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க சமுதாயத்துல யாருமே இப்படி ஒரு சாதனையைப் பண்ணதில்ல. என் பொண்ணு என்ன ஆசைப்படறாளோ அதைப் படிக்க வைப்பேன்” என்கிறார் உறுதியான குரலில்.
Also Read: பிர்சா முண்டா... பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரே பழங்குடி இனத்தவரின் புகைப்படம்... யார் இவர்?
மாணவி ஶ்ரீதேவி கூறுகையில், ``1-ம் வகுப்புல இருந்து 10-ம் வகுப்பு வரை சாலக்குடில படிச்சேன். அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு என்னய படிக்க வெச்சுட்டு இருக்கார். லாக்டௌன் நேரத்துல கொஞ்ச தூரம் நடந்தும், கொஞ்ச தூரம் அப்பாகூட பைக்லயும் கேரள எல்லை வரை போயிட்டேன். அங்க இருந்து கேரள அரசாங்கம் ஏற்பாடு பண்ண பஸ்ல போய் பரீட்சை எழுதினேன். என்னோட சேர்ந்த மூணு பேர் ஏ ப்ளஸ் கிரேடு எடுத்துருக்காங்க.
ப்ளஸ் ஒன்ல சயின்ஸ் க்ரூப் படிக்கணும்னு ஆசைப்படறேன். எனக்கு ஆட்டியா, பாட்டிய விளையாட்டுல ஆர்வம் அதிகம். அதுல ஜெயிச்சு நல்ல ஸ்போர்ட்ஸ் டீச்சரா இல்லாட்டி ஒரு டாக்டரா ஆகணும்னு ஆசை” என்று தன் கனவுகளை விவரித்தார்.
பழங்குடி மக்களுக்காக இயங்கி வரும் ஏக்தா பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தனராஜ், ``முதுவர் பழங்குடி மக்கள் சற்று இறுக்கமானவர்கள். வெளி ஆண்களுடன் பேசினால், அவர்களது பெண்களை வீட்டைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அது மட்டுமல்ல, மாதவிடாய் காலம், பிரவசம் போன்ற காலகட்டங்களில் வீட்டைவிட்டு ஒதுங்கி ஓர் குடிசையில்தான் தங்க வேண்டும்.
அங்கு போதிய பராமரிப்புகூட இருக்காது. கடுமையான உழைப்பாளிகள் என்பதால், மாதவிடாய் காலகட்டத்தில் உழைப்பை வீணாக்கக் கூடாது என்பதற்காகச் சில தன்னார்வலர்கள் மூலம் அந்த மக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதை உண்டதால் பல பெண்களுக்கு குழந்தை பிறப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Also Read: பிர்சா முண்டா... பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரே பழங்குடி இனத்தவரின் புகைப்படம்... யார் இவர்?
வெளியாட்கள் அங்கே சென்றால்கூட, ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள சமூகக் கூடங்களில்தான் தங்க வேண்டும். அடிப்படை கல்வியே அந்தப் பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாகத்தான் இருந்தது. செல்லமுத்து சற்று முற்போக்கானவர். அதனால், தன் மகள்களை படிக்க வைத்துள்ளார்.
ஶ்ரீதேவியின் இந்தச் சாதனை முதுவர் பழங்குடி மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக, அந்த இனத்தின் மற்ற குழந்தைகள் கல்வி கற்கவும் உதவும். எனவே, தமிழக அரசு இதுபோன்ற பழங்குடி குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/tn-tribal-student-scores-95-marks-in-kerala-class-10th-exam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக