Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

சென்னை: `கிரேன் டயர் பஞ்சர்!' - 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த தொழிலாளி

பீகார் மாநிலம் கோபால்கன்ச் பாட்தாபர் பகுதியைச் சேர்ந்தவர் மதுபண்டி புர்த்தாஷ். இவரின் மகன் பலீந்தரா பாண்டித் (26) இவர் ஆவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆவடி பருத்திப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராகத் தங்கி வேலை செய்து வருகிறேன்.

டயர்

நான் கடந்த ஜனவரி 2020-ல் 20 நாள்கள் விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றேன். திரும்ப வரும்போது என் நண்பர் ராசுசிங் மூலமாக சந்தீப் தாக்குர் என்பவரை வேலைக்காக சென்னைக்கு அழைத்து வந்தேன். கடந்த பிபர்வரி 2020 முதல் என்னுடன் தங்கியிருந்து சந்தீப் தாக்குர், கிரேன் ஹெல்பராக வேலை செய்து வந்தார். 11.7.2020-ல் காலை 9.30 மணியளவில் எங்கள் சூப்பர்வைஸர் என்னையும் சந்தீர் தாக்குரையும் கிரேனில் உள்ள டயரைக் கழற்றி பஞ்சர் பார்க்கும்படி கூறினார்.

அதன்பேரில் அவர் பார்வையிட நானும் சந்தீப் தாக்குரும் டயர்களுக்கு காற்று நிரப்பிக்கொண்டிருந்தோம். அப்போது நான் வேறு வேலையாகப் பக்கத்தில் உள்ள கிரேனை பழுது பார்க்கச் சென்றேன். அப்போது சந்தீப் தாக்குர் டயர்களுக்கு காற்றை நிரப்பியுள்ளார். திடீரென டயர் வெடித்து அவரை சுமார் 10 அடி தூரம் தூக்கி வீசியது. நாங்கள் பதறிப்போய் பார்த்தபோது அவனது வாய், மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

Also Read: திருச்சி: அடுத்தடுத்த புகார்கள்; திடீர் ஆய்வு! - விதிகளை மீறிய அமைச்சர் விஜயபாஸ்கர்?

அங்கு சந்தீப் தாக்குர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பிரேதப் பரிசோதனை முடித்து சடலத்தை அவரின் பெற்றோர்கள் வர முடியாத சூழ்நிலையில் என்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் இந்தியில் சொன்னதை எனக்கு தெரிந்த நண்பர் மூலமாக தமிழில் எழுதி இந்தப் புகாரை உங்களிடம் கொடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் எஸ்.ஐ கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இந்தச் சம்பவம் ஆவடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/crane-vehicle-helper-death-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக