Ad

புதன், 21 ஜூலை, 2021

திருவள்ளூர்:நிர்வாண படங்கள்; மிரட்டல்! -விவாகரத்துக்காக வந்த பெண்ணுக்கு வழக்கறிஞரால் நேர்ந்த கொடூரம்

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகப் பிரிந்து வாழ்ந்துவந்திருக்கிறார். இந்தநிலையில், அந்தப் பெண்ணின் கணவரும், அவரின் வீட்டாரும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதால் திருமண உறவை முறித்துக்கொள்வதற்காக விவாகரத்து பெறுவதென முடிவெடுத்திருக்கிறார்.

அதற்காக, திருவள்ளூரில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வழக்கறிஞர் டார்ஜன் (வயது 44) என்பவரை அந்தப் பெண் அணுகியிருக்கிறார். தொலைபேசியில் பெண்ணிடம் விவாகரத்து விவகாரம் குறித்துப் பேசிய வழக்கறிஞர் டார்ஜன், திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேரில் வருமாறு அழைத்திருக்கிறார். டார்ஜனின் அழைப்பின் பேரில் அந்தப் பெண்ணும் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணிடம் பேசிய வழக்கறிஞர் டார்ஜன், பெண்ணின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு வழக்கை தானே கட்டணம் ஏதும் வாங்காமலேயே நடத்துவதாகக் கூறியிருக்கிறார். டார்ஜனின் பேச்சை நம்பி அந்தப் பெண்ணும் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

பாலியல் அத்துமீறல்

பின்னர், சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசிய வழக்கறிஞர் டார்ஜன், விவாகரத்து பெறுவதற்கு சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படுவதாகவும், அதைத் தானே நேரில் வந்து வாங்கிச் செல்வதாகவும் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் அதற்குச் சம்மதிக்கவே, டார்ஜன் அடுத்த சில மணி நேரங்களில் பெண்ணின் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார். வழக்கறிஞரை அழைத்து உட்கார வைத்துவிட்டு தேவையான ஆவணங்களைக் காண்பித்திருக்கிறார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

உடன் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட டார்ஜன், அவர் ஏற்கெனவே மயக்க மருந்து கலக்கி வைத்திருந்த ஜூஸை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அதை வாங்கி குடித்து, அடுத்த சில நிமிடங்களில் மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் டார்ஜன், மயக்கமடைந்த பெண்ணை நிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்துவிட்டு, அத்துமீறியிருக்கிறார். பின்னர், மயக்கம் தெளிந்து வழக்கறிஞர் தன்னிடம் அத்துமீறியிருப்பதை அறிந்து அதிர்ந்துபோன அந்தப் பெண் ஆத்திரத்தில் டார்ஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டதால் பதிலுக்கு ஆத்திரமடைந்த டார்ஜன், நடந்ததை வெளியில் கூறினால் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். மேலும், புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருப்பதற்கு 7 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். அந்தரங்கப் புகைப்படங்கள் டார்ஜனிடம் இருப்பதால் அந்தப் பெண்ணும் 3 லட்சம் ரூபாயை ரொக்கமாக அளித்திருக்கிறார்.

இந்தநிலையில், பணம் கொடுத்த அடுத்த சில நாள்களுக்குப் பிறகு டார்ஜன் மீண்டும் அந்தப் பெண்ணைப் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். தான் கேட்ட பணத்தைத் தராவிட்டால் ஒவ்வொரு புகைப்படமாக தினமும் இணையத்தில் வெளியிடுவேன் என்று டார்ஜன் மீண்டும் மிரட்டியதால் அந்தப் பெண் டார்ஜனின் மனைவியைச் சந்தித்து நடந்ததைக் கூறி முறையிட்டிருக்கிறார். ஆனால், டார்ஜனின் மனைவியும் சேர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதனால், மனமுடைந்துபோன அந்தப் பெண், இறுதியாகக் காவல் நிலையக் கதவுகளைத் தட்டியிருக்கிறார்.

மிரட்டல்

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட மகளிர் போலீஸார் ஆய்வாளர் ராஜாமணி உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். போலீஸாருக்கு விஷயம் தெரிந்துவிட்டதை அடுத்து, வழக்கறிஞர் டார்ஜன் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில், வழக்கறிஞர் டார்ஜன் திருவள்ளூரிலிருந்து தப்பியோடி கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் கொடைக்கானலில் பதுங்கியிருந்த வழக்கறிஞர் டார்ஜனைக் கைதுசெய்து நேற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூரில் நேற்று முன்தினம் திருமணத்தை மீறிய உறவு முறை விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அத்துமீறிவிட்டு, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் கைதாகியிருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: திருவள்ளூர்: கணவரைப் பிரிந்த பெண்; ஆத்திரத்தில் குடும்பத்தினர்! - வழக்கறிஞர் கொலையில் நடந்தது என்ன?



source https://www.vikatan.com/news/crime/an-advocate-arrested-for-sexually-harassed-a-woman-client-in-tiruvallur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக