Ad

திங்கள், 12 ஜூலை, 2021

‘கொங்கு நாடு' அரசியல் பின்னணியில் இயங்குவது யார், யார்?

தமிழ்நாட்டில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைப் பிரித்து ‘கொங்கு நாடு’ எனத் தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய அரசியல் சூழலில் ஹாட் டாப்பிக்கா இருக்கிறது. ஜூன் 8-ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கான அறிமுக விவரக் குறிப்பில் ‘கொங்கு நாடு’ என்று இடம்பெற்றதிலிருந்துதான் இந்தச் சர்ச்சை உருவானது. இதற்குப் பதிலளித்த எல்.முருகன் “கொங்கு நாடு என்ற வார்த்தை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதுதான். அதில் தவறு எதுவும் இல்லை" என விளக்கம் அளித்தார். “தமிழ்நாட்டைப் பிரிக்கும் திட்டம் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை. ஆனால், மக்களின் எண்ணம் எதுவோ அதையொட்டி மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கும்” என பா.ஜ.க மூத்த தலைவர்களான கரு.நாகராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். ‘கொங்குநாடு என்பது ஊடகங்களில் வெளியான செய்தியே தவிர அது பா.ஜ.க-வின் கருத்து இல்லை’ எனத் தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். ஒன்றியம் என்ற சொல்லை தி.மு.க மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவே கொங்கு நாடு என்ற கருத்தியலை பா.ஜ.க உருவாக்கியுள்ளது என பா.ஜ.க ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் உலாவுகின்றன.

எல்.முருகன் பயோ

“கொங்கு நாடு என்பது வரலாறு. அன்றைய சிறு குறு நில மன்னர்கள் ஆண்ட பல்வேறு பகுதிகளை இதுபோன்ற அழைப்பது உண்டு. ஆனால், இன்றைய சூழ்நிலையில் ‘கொங்குநாடு’ உருவாக வேண்டும் என்பது பாஜக கருத்து அல்ல. வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்பது தான் பாஜகவின் லட்சியம்” என பா.ஜ.க தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உண்மையில் ‘கொங்கு நாடு’ என்ற சர்ச்சையை உருவாக்கியது யார்? அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன என்பது குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துகளை அறிய முயன்றோம்.

Also Read: ‘கொங்கு நாடு’ சர்ச்சை... நோக்கமும் பின்னணியும் என்ன?

தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன்

“கொங்கு நாடு என்ற சர்ச்சையை பா.ஜ.க எடுக்கவே இல்லை. எல்.முருகன் விவரத்தில் கூட ஓர் அடையாளத்துக்காகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொங்கு நாடு இந்தியா என்றிருந்தால் கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், கொங்கு நாடு தமிழ்நாடு என்று தானே இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு தேவையில்லாத சர்ச்சை கிளப்பியிருக்கத் தேவையில்லை. கொங்கு தேசியக் கட்சி, கொங்கு மன்றங்கள், கொங்கு தொழிலதிபர்கள் எனப் பல அமைப்புகள் இருக்கின்றன. அப்பகுதி மக்கள் தங்களைக் கொங்குப் பகுதியினர் என அழைத்துக் கொள்வதைச் சிறப்பாகக் கருதுகிறார்கள். அதற்காகவெல்லாம் மாநிலமாகப் பிரித்து விட முடியுமா என்ன? கொங்குப் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரிக்கும் எண்ணம் மத்திய அரசிடமும் இல்லை. அந்தக் கருத்தை முன்னெடுத்துச் சொல்லத் தமிழக பா.ஜ.க அனுமதிக்கவும் செய்யாது. தமிழகத்தைப் பிரிக்கும் சிந்தனையோ எண்ணமோ துளிகூட பா.ஜ.க-வுக்குக் கிடையாது. ஒன்றிய அரசு எனத் தி.மு.க சொன்னதை நியாயப்படுத்த இந்தச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். அது ஒரு பத்திரிகை செய்தி. அதை பா.ஜ.க-வின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பா.ஜ.க-தான் இதை முன்னெடுத்தது என்றெல்லாம் எழுதுவது தேவையில்லாத அரசியல்.

கரு.நாகராஜன்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கொங்கு ஈஸ்வரன் போன்றவர்கள்தான் தொடர்ச்சியாக வன்னியர் பகுதியை, கொங்குப் பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்கள். பா.ஜ.க-வின் மாநாட்டிலோ தேர்தல் அறிக்கையிலோ இப்படி எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. தற்போதுகூட தி.மு.க தலைவர் திராவிட நாடு எனப் பேசியிருக்கிறார். இவர்கள்தான் பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை எப்போதும் ஒரே நாடு ஒரு சட்டம் என்பதுதான் எங்கள் கொள்கை. கொங்கு நாடு என்ற ஒரு பேச்சே இல்லாத போது அதை எதிர்க்கிறோம் என்று சொல்வதெல்லாம் எதற்கு” எனக் கொங்கு நாடு என்ற பேச்சிற்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

“கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள், அமைப்பு என யாரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை. போலோ லாண்ட், குர்கா லாண்ட் கேட்கிறார்கள் என்றால் அதில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் வாழ்கிறார்கள். அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் அப்படி ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. கொங்கு வேளாளர் ஒரு பகுதியினர் அங்கு இருக்கிறார்கள் என்றாலும் முக்குலத்தோர், ஒக்கலிகர், வன்னியர், நாடார் என எல்லோரும் கலந்த பகுதி. அதுமட்டுமல்ல வட மாநிலத்தவர்களையும் உள்ளடக்கிய தொழில் நகரம் அது. அப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்கள். அரசின் நலத்திட்டங்கள் போய்ச் சேருவதில்லை என்றால் அவற்றை முன்னேற்ற வேண்டும் என்றால்தான் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும். எந்த ஒரு தனிப்பட்ட தேவையும் இல்லாமல் அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கொங்கு நாடு என்று எல்.முருகன் எழுதுவது போல முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஊரை ஒரத்தநாடு என்று எழுதுவார். அப்போ ஒரத்தநாட்டைத் தனி மாநிலமாக அறிவித்துவிடலாமா?

டி.கே.எஸ்.இளங்கோவன்

கொங்கு நாடு என்று எழுதிய எல்.முருகனே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய, மாநில அரசுகள் பேசவில்லை. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. எந்தவித சட்டதிட்டத்திற்கும், வரன்முறைக்கும் ஒத்துவராத கோரிக்கை. அதைப் பா.ஜ.க-வே ஏற்றுக்கொள்ளாது. அரசியல் தெளிவில்லாதவர்கள் வேண்டுமானால் இது குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். மற்றபடி கொங்கு நாடு என்ற பேச்சு அர்த்தமற்றது” எனக் கொங்குநாடு என்பதே தேவையற்ற விவாதம் என விளக்கினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-and-who-is-behind-the-kongu-nadu-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக