Ad

திங்கள், 12 ஜூலை, 2021

`தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பும் எல்.முருகனும்..' திருமா கொதிப்பது ஏன்?

''பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு. பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்டப் பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கருத்துத் தெரிவித்திருப்பது தமிழக பா.ஜ.கவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன், அந்தக் கட்சியின் சார்பில் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் அலுவலகத் திறப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சி விழாக்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறார். அந்தவகையில், நாகப்பட்டிண எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸின் அலுவலகத்தைத் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன்

''தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்தபோது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்தான், பா.ஜ.க 4 எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றிருக்கிறது. இதற்காக, எல்.முருகனைப் பாராட்டியிருக்க வேண்டும். அவர் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அவர் தலைவராக நீடிப்பதை பா.ஜ.கவின் தேசிய தலைமையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.கவினரும் விரும்பவில்லை.

எல்.முருகனை வெறுமனே அப்புறப்படுத்த முடியாது என்பதால், ஒப்புக்கு அமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள். அவருக்கு, அமைச்சர் பதவியை தந்திருப்பது, அவரை பெருமைப்படுத்துவதற்காக அல்ல. எல்.முருகனை தலைவர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களை கவர்வதற்காக, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை புதிய தலைவராக நியமித்துள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து பா.ஜ.கவினர் காய்நகர்த்தி வருகின்றனர். இதனால்தான், கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்'' என்கிற கருத்துக்களைத் தெரிவித்தார்.

திருமாவளவனின் இந்தக் கருத்தை தமிழக பா.ஜ.கவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேசும்போது,

'' எங்களுடைய உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதற்கு திருமாவளவன் அவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. ஒரு இளைஞரைத் தமிழக பா.ஜ.கவின் தலைவராக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. அவருடைய தலைமையில் நாங்கள் பல விஷயங்களைச் சாதித்துக் காட்டியிருக்கிறோம். கூடுதலாக, அவர் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைக்கூட விமர்சனம் செய்வது, அவருடைய மலிவான அரசியலைத்தான் காட்டுகிறது. திருமாவளவன் தன்னுடைய கட்சியைப் பார்த்துக்கொண்டு சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் கூட நிற்க முடியாதவர்கள், எங்கள் கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவது விமர்சனம் செய்வது தேவையற்றது என நான் நினைக்கிறேன்'' என்றார் கடுமையாக.

நாராயணன் திருப்பதி

பா.ஜ.கவின் இந்த விமர்சனங்கள் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்,

'' பா.ஜ.கவின் தலைவராக இருந்த எல்.முருகனை, மிகக் குறுகிய காலத்தில் அந்தப் பதவியில் நீக்கியிருக்கின்றனர். அந்தக் கோணத்தில்தான் எங்கள் தலைவர் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். தலித் ஒருவரை கட்சியின் மாநிலத் தலைவராக்கியிருக்கிறோம் என பா.ஜ.கவினர்தான் அரசியல் செய்தார்கள். தற்போது அவரை நீக்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கான நோக்கத்தையும் நாம் பார்க்கவேண்டும். உட்கட்சி விவகாரம் என்றால் தலித் ஒருவரைத் தலைவராக்கிவிட்டோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்திருக்கக்கூடாது. தமிழக பா.ஜ.கவினர் முருகனைத் தலைவராக்கியதை அரசியலாகக் கொண்டு போனதால்தான் அவரை நீக்கியதும் அரசியல் விவகாரமாக மாறுகிறது. திட்டமிட்டுதான் அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. விமர்சனங்கள் எழாமல் இருக்க ஒப்புக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள்.

Also Read: மனுநூல் சர்ச்சை: பா.ஜ.க - வி.சி.க தொடர் மோதல்... தேர்தலில் பாதிப்பு யாருக்கு?

வன்னி அரசு - வி.சி.க

தமிழ்நாட்டுக்காக ஆக்கபூர்வமான எந்த வேலையையும் பா.ஜ.க இதுவரை செய்ததில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காகவும் அவர்கள் போராடியதும் இல்லை. சொல்லப்போனால், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நீட் தேர்வு விஷயத்தில் நீதிமன்றத்துக்குச் சென்றவர்கள் பா.ஜ.கவினர். தமிழர்களுக்கு இரண்டகம் செய்யக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. ஆனால், நாங்கள் எந்தச் சின்னத்தில் நின்றால் என்ன, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தமிழ்நாட்டின் அடையாளங்களுக்காகவும்தான் தொடர்ந்து போராடி வருகிறோம். எங்கள் தலைவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில்தான் நின்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், எங்கள் கட்சியின் சார்பில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டோம். அதில் நான்கு பேர் வெற்றியும் பெற்றிருக்கிறார். எந்தச் சின்னத்தில் நின்றாலும் எங்கள் தனித்துவத்தை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கிற விஷயத்தில் எந்தவித சமரசத்தையும் செய்துகொண்டதில்லை'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/murugan-removed-from-tn-bjp-chief-is-an-insult-to-him-says-thirumavalavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக