சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி. இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருவல்லிகேணியைச் சேர்ந்த பழனி என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் லேத் பட்டறை நடத்தி வருகிறார். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நான் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கும் என் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவருகிறோம். அதனால் மூத்த மகன் பழனியுடனும் இரண்டாவது மகன் என்னுடனும் வசித்து வருகின்றனர்.
எனக்கும் என் கணவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்தநிலையில் எனது அம்மா அமுதபிரியாவுக்கும் (51) தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் (52) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனால் என்னுடைய அப்பா ராஜாவைப் பிரிந்த அம்மா அமுதபிரியா, ராஜேஷ் என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நான் எனது கணவரைப்பிரிந்ததை தெரிந்து கொண்ட ராஜேஷ், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசினார். அதை என்னுடைய அம்மாவிடம் நான் சொல்லவில்லை.
இந்தநிலையில் ராஜேஷின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நான் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகாரளித்தேன். அதன்பேரில் போலீஸார் விசாரணைக்காக ராஜேஷை அழைத்தபோது அவர் காவல் நிலையத்துக்கு வரவில்லை. அதன்பிறகும் ராஜேஷ் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதன்பேரில் போலீஸார் ராஜேஷ், என்னுடைய அம்மா அமுதபிரியாவை விசாரணைக்காக அழைத்தனர். விசாரணையின்போது கோபத்தில் அப்படி பேசி விட்டதாக ராஜேஷ் தெரிவித்தார்.
Also Read: சென்னை: 'பிறந்தநாள் பார்ட்டி;சிறை வைக்கப்பட்ட ஃபைனான்ஸியர்?! விசாரணையில் சினிமாவை விஞ்சிய ட்விஸ்ட்!'
இதையடுத்து ராஜேஷ் என்னுடைய அம்மா அமுதபிரியா ஆகியோர் சமூகவலைதளத்தில் என்னைப் பற்றி தவறான பதிவுகளை பகிர்ந்திருக்கின்றனர். அந்தத் தகவல் என்னுடைய நண்பர்கள் மூலம் எனக்கு தெரியவந்தது. இதுகுறித்து அமுதபிரியாவிடம் கேட்டபோது அவரும் ராஜேஷும் சேர்ந்து அவதூறாக பேசினார்கள். அப்போது ராஜேஷ் என்னுடைய துப்பட்டாவைப் பிடித்து இழுத்து அடித்தார். எனவே என்னைப்பற்றி அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்த அமுதபிரியா, ராஜேஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து அமுதபிரியாவையும் ராஜேஷ்யையும் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து துர்கா தேவி கூறுகையில், ``என்னுடைய அம்மா அமுதபிரியா சமூகவலைதளத்தில் பிரபலமாக இருந்தவர். டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவு செய்திருக்கிறார். அவரை அமுதா அம்மா என்றுதான் அவரின் ரசிகர்கள் அழைப்பார்கள். டிக்டாக் மட்டுமல்லாமல் யூடியூப், இன்ஸ்ட்ராகிராம், முகநூல் ஆகியவற்றில் வீடியோக்களைப் பதிவு செய்து வருகிறார். இந்தநிலையில் பெற்ற மகள் என்றுகூட பாராமல் என்னைப்பற்றி அவதூறாக அம்மாவும் அவரின் ஆண் நண்பரும் சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
இவர்கள் இருவரால் அதிகளவில் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதனால்தான் காவல் நிலையத்தில் புகாரளித்தேன்" என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``துர்காதேவி புகாரின்பேரில் அமுதபிரியா, ராஜேஷிடம் விசாரித்தோம். புகாரோடு துர்காதேவி சில வீடியோக்களையும் ஆதாரமாக கொடுத்திருந்தார். அந்த வீடியோவில் துர்காதேவியைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் இருவரும் பேசியிருந்தனர். அதனால் இருவரையும் கைது செய்திருக்கிறோம். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 294(b),323,354,பெண்கள் வன்கொடுமை சட்டம், தகவல் தொழிற்நுட்ப சட்டம் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.
பெற்ற மகளைப் பற்றி அவதூறாக விமர்சித்த குற்றச்சாட்டில் தாய், அவரின் ஆண்நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-mother-of-women-and-her-friend-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக