Ad

புதன், 21 ஜூலை, 2021

சார்பட்டா பரம்பரை: விளையாட்டில் அரசியல், அரசியலில் விளையாட்டு! பா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணி வென்றதா?

எமர்ஜென்ஸி கால மெட்ராஸில் பாக்ஸிங் விளையாட்டை தன் கௌரவமாக நினைக்கும் சார்பட்டா, இடியப்ப பரம்பரைகளுக்கு இடையேயான பகை தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. இடியப்ப பரம்பரையின் கை ஓங்கியிருக்க, இழந்த புகழை மீட்க இறுதி சவாலுக்குத் தயாராகிறது சார்பட்டா. யாருமே எதிர்பாரா வண்ணம், பாக்ஸிங் அனுபவமே இல்லாத கபிலன் (ஆர்யா), சார்பட்டாவின் சாம்பியனாக வந்து நிற்க, எதிர்புறம் பலரை வீழ்த்திய இடியப்ப பரம்பரையின் அனுபவசாலி பாக்ஸரான வேம்புலி (ஜான் கொக்கன்). ஊரே இறுதிப் போட்டிக்குத் தயாராக, பாக்ஸிங் ரிங்குக்குள் அரசியலும் புகுந்துவிட இறுதியில் அரசியலை விளையாட்டு வென்றதா என்பதே படத்தின் திரைக்கதை.

ஸ்போர்ட்ஸ் டிராமாவாக பரபரப்பான சுவாரஸ்ய காட்சிகளுடன் நகர்கிறது முதல் பாதி. குறிப்பாக, அந்தக் கால பாக்ஸிங் முறை, அதிலிருக்கும் நுணுக்கங்கள், ஒவ்வொரு வீரருக்கும் விதவிதமான கேம் பிளான்கள் என நிறையவே மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்கள். அதிரடி திருப்பங்களுடன் நகரும் முதல்பாதியில் வரும் பாக்ஸிங் மேட்சுகள் தொடங்கி அதன் முன், பின் வரும் காட்சிகள் அனைத்துமே படத்தைச் சீரான வேகத்தில் எடுத்துச் சென்றிருக்கின்றன.

சார்பட்டா பரம்பரை

இரண்டு குழுக்களுக்கிடையே மட்டுமே மோதல் என்றாலும், அவர்களுக்குள்ளும் பாகுபாடு இருப்பதாகக் காட்டி அதன் மூலம் எண்ணற்ற பாத்திரங்களை உள்ளே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். அவரவர் தரப்பு நியாயங்கள், வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அங்கங்கே புலப்படும் சாதிய ஒடுக்குமுறை எனப் படம் பல அடுக்குகளில் கதை சொல்ல முயன்றிருக்கிறது.

அதுவே ஒரு கட்டத்தில், இது இரண்டு பரம்பரைக்கும் இடையேயான போட்டியைக் காட்டும் ஸ்போர்ட்ஸ் படமா, கபிலன் என்னும் ஒற்றை மனிதனின் எழுச்சியையும் சரிவையும் காட்டும் படமா, 70-80-களின் அரசியல் சூழலைக் காட்சிப்படுத்தும் படமா, ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கும் அநீதியைக் காட்டும் படமா என்று குழம்ப வைத்திருக்கிறது. இதனாலேயே கதை பல இடங்களில் பாக்ஸிங் ரிங்கைவிட்டு விலகி, மெட்ராஸின் எல்லைகளையெல்லாம் தாண்டி, நீண்டு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ரிங்கிற்குள்ளே இருக்கும் வரை இருக்கை நுனியில் கட்டிப்போடுகிறது படம். ரிங்கிற்கு வெளியே கதை நகர்ந்ததும் படம் இன்னும் சூடுபிடிக்கப்போகிறது என்று நாம் நிமிர்ந்து உட்காரும் நேரத்தில் படம் ரிவர்ஸ் கியர் எடுத்து மீண்டும் முதலில் இருந்து கதை சொல்கிறோம் எனச் சோதிக்கிறது.

அத்தனை பலமான முதல் பாதியை தாங்கிக் பிடிக்கும், தூக்கி நிறுத்தும் அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்பது 'சார்பட்டா'வின் சுவாரஸ்யத்தை மொத்தமாக குறைத்துவிடுகிறது.

படத்தின் பெரும்பலம் நடிகர்களின் கதாபாத்திர தேர்வு. கபிலனாக ஆர்யா முறுக்கேறிய உடம்புடன் வந்து நிற்கிறார். கதையின் தேவைக்கேற்ப உடல்வாகை மாற்றும் அவரின் அர்ப்பணிப்பு ஈர்க்கிறது. உடல்வாகு மாறி, உடல்மொழியும் மாறினாலும் கோபம், ஆக்ரோஷம், ஆற்றாமை போன்றவை யதார்த்தமாக வெளிப்பட்டு ஆர்யாவை ஒரு தேர்ந்த நடிகராக நம் கண்முன் நிறுத்துகிறது. வாழ்த்துகள் கபிலா. ஆனால், அழுவதும், வருத்தப்படுவதும் மட்டும் இன்னமும் செயற்கையாகத் தெரிகிறதே தோழா!

ஆர்யாவுக்கு அடுத்து படத்தில் அதிக கவனம் ஈர்ப்பவர் பட பட பட்லர் இங்கிலீஷில் அடித்து நொறுக்கும் ஜான் விஜய். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் இந்த முதிர்ச்சியான பாத்திரம் 'சார்பட்டா'வின் கதையை நகர்த்த அதிகம் உதவியிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை

'சார்பட்டா பரம்பரை' பாக்ஸிங் வாத்தியார் ரங்கனாகப் பசுபதி பக்காவாகப் பொருந்தியிருகிறார். தன் பரம்பரை மானத்தைக் காக்க, அவர் எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும்தான் முதல் பாதியைத் தீர்மானிக்கின்றன. ஆனால், இத்தனை முக்கியமானதொரு பாத்திரம் இரண்டாம் பாதியில் காணாமல் போவது படத்துக்கு பெரும் பின்னடைவு.

மாரியம்மாளாக துஷாரா விஜயன் தான் வரும் காட்சிகளில் எல்லாம் திரையை ஆக்கிரமிக்கிறார். நாயகி என்ற பிம்பத்தின் பின் ஒளியாமல், அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு பிரச்னையைச் சந்திக்கும் பெண் என்ன செய்வாளோ அதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

டான்சிங் ரோஸாக வரும் ஷபீர், கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார். அவருடனான அந்த பாக்ஸிங் மேட்ச் மிரட்டல் ரகம். இப்படி ஒவ்வொரு பாக்ஸிங் மேட்சையும் பிரமிக்கும்படி, ரியலாக வடிவமைத்திருக்கும் அன்பறிவ் டீமுக்குப் பெரிய அப்ளாஸ்!

பாக்ஸிங் ரிங்கை வட்டமிடும் முரளியின் கேமரா, பழைய மெட்ராஸை கண் முன் நிறுத்தும் த.ராமலிங்கத்தின் கலை இயக்கம் போற்றத்தக்கது. பாடல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் சண்டைக் காட்சிகளில் வரும் பின்னணி இசை மற்றும் இறுதியில் வரும் அந்த ராப் பாடல் மூலம் அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

சார்பட்டா பரம்பரை

கிட்டத்தட்டப் படத்தின் கதை முழுவதும் முதல் பாதியிலேயே முடிந்துவிட்ட உணர்வு வந்துவிடுவதால், இரண்டாம் பாதியில் வரும் அரசியல், கள்ளச் சாராய பிசினஸ், பழிவாங்கும் படலம், குடிக்கு அடிமையாகும் காட்சிகள் என எதுவும் ஒட்டாமல் தனிப்படமாகத் தெரிகிறது. அதிலும் பாக்ஸிங் மேட்ச் முடிந்ததும் நீளும் ஜம்ப் கட் காட்சிகள் தெளிய வைத்துத் தெளிய வைத்து அடித்த கதையாகவே இருக்கிறது. ஆர்யா ஏன் குடிக்கு அடிமையாகிறார், கலையரசன் பாத்திரத்தின் கிராஃப் என்ன என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். இறுதிவரை கலையரசன் யார் பக்கம் நிற்கிறார், என்ன செய்கிறார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

சமகாலத்தில் தி.மு.க, அ.தி.மு.க என இருபெரும் கட்சிகளின் பெயர்களைத் தெளிவாக அதனதன் அரசியல் பின்புல வரலாற்றுடன் பயன்படுத்திய படம் இதுவாகத்தான் இருக்கும். இருந்தபோதும் இயக்குநர் பா.இரஞ்சித் அரசியல் ரீதியாக என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பதிவு செய்யவில்லை என்பது படத்தை இலக்கற்ற ஒன்றாக மாற்றியிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை
பாகுபாடுகளை உடைத்தெறியும் வலிமை விளையாட்டுக்கு உண்டு என்ற கருத்தியலை முன்வைத்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' அதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்!


source https://cinema.vikatan.com/tamil-cinema/pa-ranjith-aryas-sarpatta-parambarai-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக