Ad

புதன், 21 ஜூலை, 2021

கொரோனா பேரிடரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2.30 கோடி குழந்தைகள்! - தமிழகத்தின் நிலை என்ன?

கொரோனா பேரிடர் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்கத்தினால் அனைத்து துறைகளும் பாதிப்பைச் சந்தித்த போதிலும் பெரும் பாதிப்பைச் சந்தித்தது சுகாதாரத்துறை தான். கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் வழங்கியதால் மற்ற மருத்துவ செயல்பாடுகள் மந்தமாகவே நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் உலகளவில் 2.3 கோடி குழந்தைகள் தங்களின் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

Dr Tedros Adhanom Ghebreyesus

இந்த ஆய்வின் முடிவில், கடந்த 2019-ம் ஆண்டு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டு 1.7 கோடி குழந்தைகள் எந்த ஒரு தடுப்பூசியும் போடவில்லை. 30 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அவர்களின் முதல் தட்டம்மை தடுப்பூசியைத் தவறவிட்டுள்ளனர். 35 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் முதல் டிப்தீரியா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை. கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டில் தான் ஒரு வயதுக்குள்ளன குழந்தைகளில் 2.3 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 60 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் குழந்தைகள் இந்தியா, பிரேசில், பாகிஸ்தான், அங்கோலா, காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து நாடுகளைச் சார்ந்தவர்கள் ஆவர். `சமூகமும், சுகாதார அமைப்புகளும் தற்போது கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாததினால் ஏற்படும் நோய் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும். இப்போது குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் கிடப்பதை உறுதி செய்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது' என்று உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளத் தமிழக பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் பேசினோம், ``கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நேரத்திலும் தமிழகத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியை கண்காணிக்கத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்களின் குழந்தைகளைத் தடுப்பூசி போட அழைத்து வரவில்லை என்றாலும், சுகாதாரப் பணியாளர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தினர். தற்போதைய நிலவரப்படி 98-99 சதவிகித குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசி போடும் பணியும் விரைந்து முடிக்கப்பட்டும்' என்று கூறினார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்

குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது எவ்வளவு அவசியம், தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்ற எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனை மருத்துவர் சீனிவாசனிடம் பேசினோம். ``பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கால அளவில் தவறாமல் அந்தந்த மாதத்திற்கான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதின் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். குறிப்பாக அந்த நாட்களைத் தவறவிடாமல் குழந்தைகளுக்குத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அப்போது தான் முழுமையான பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் பெரும்பாலான தடுப்பூசி அரசு அமைப்புகள் மூலம் தான் போடப்படுகிறது. அடுத்ததாக, தனியார் மருத்துவமனையில் போடப்படுகிறது. கடைசியாகத் தான் கார்ப்பரேட் மருத்துவமனைகள். அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை தடுப்பூசி போடும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் தனியார் கிளினிக்களை எடுத்துக்கொண்டால், கொரோனா காலகட்டத்தில் பல கிளினிக்கள் செயல்படாததை நாம் பார்த்தோம். அப்படியே திறந்திருந்தாலும் கொரோனா அச்சத்தினால் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைந்திருந்தது'' என்றார்.

மருத்துவர் சீனிவாசன்

தொடர்ந்து பேசியவர், ``கொரோனா காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தச் சில பெற்றோர்கள் தயக்கம் காட்டினார். உதாரணத்திற்கு சாதாரண நேரத்தில் என்னுடைய கிளினிக்கில் இரண்டு அல்லது மூன்று தடுப்பூசி போடப்படும். அதுவே கொரோனா அதிகரித்திருந்த நேரத்தில் ஒன்று அல்லது ஒரு ஊசி கூட போடப்படவில்லை. அந்த சூழல் தற்போது தான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தாதது நிலைமையை மோசமடைய செய்யும் என்று அஞ்சப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளை வெளியில் எங்கும் வராததினால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டிலிருந்தார்கள். உதாரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு தான். 650 படுக்கைகளில் சிகிச்சைக்காகக் கிட்டத்தட்ட 150 படுகைகளில் தான் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போதைய நிலைப் படி சுமார் 450 படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கோ, இயல்பு நிலையோ எந்த சூழலிலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதைத் தவறவிடக்கூடாது. தடுப்பூசி மிக அவசியம்" என்று கூறினார்.

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா?

குழந்தைகள் தடுப்பூசி தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியம் தொடர்பாக யுனிசெஃபின் தொடர்பு நிபுணர் சுகதா ராவ்விடம் பேசினோம். `குழந்தைகளை ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்பாற்றலுடனும் இருக்கத் தடுப்பூசிகள் செலுத்தவேண்டியது மிக அவசியம். யுனிசெஃப் தடுப்பூசி மட்டுமில்லாது, குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் தடுப்பூசி போடும் திட்டமானது இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான திட்டம். இந்தியாவின் பல மாநிலங்களில் தமிழகத்தின் செயல்திட்டம் தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதைப் பொருத்தவரை பெற்றோர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் முக்கிய பணி. சமூகத்தில் உள்ள ஒரு குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தியும், இன்னொரு குழந்தைக்கும் செலுத்தாமல் இருக்கக் கூடாது. அது சமநிலையைப் பாதிக்கும். சமூகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தி ஒரு சமநிலையை உருவாக்க வேண்டும். தற்போது தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டதற்கு கொரோனா மட்டுமில்லாது, பல்வேறு காரணங்கள் உள்ளது. சில நாடுகளில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி, பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தாத நிலையும் உள்ளது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கிறது. அந்த இடங்களிலும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க யுனிசெஃப் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குழந்தைகளை நிமோனியா, போலியோ போன்ற பல்வேறு நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள அவர்களுக்குக் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தவேண்டும்" என்று பேசினார்.

தடுப்பூசி

எந்த சூழலாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டியது அவசியம். குழந்தைகளுக்குச் சுகாதாரமான சூழலை உருவாக்குவதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் போலியோ பதிவாகவே இல்லை. இதற்கு ஒரே காரணம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போலியோ சொட்டுமருந்து முகாம்கள் தான். இதுபோலவே குழந்தைகளுக்கு வரும் பல்வேறு நோய்களும் இந்தியாவிலிருந்து மறைந்துகொண்டு இருக்கிறது. அதற்குக் காரணமும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாகத் தடுப்பூசி செலுத்தப்படுவது தான். இந்நிலையில், கொரோனா போன்ற காரணங்களுக்காகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தவறினால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பாக அமைப்பும்…



source https://www.vikatan.com/government-and-politics/healthy/230-crore-children-not-vaccinated-what-is-the-situation-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக