Ad

வியாழன், 1 ஜூலை, 2021

காட்டுப்பன்றிக்கு அவுட்டுக்காய் வைத்த இளைஞர்கள்; தலை சிதறி உயிரிழந்த நாய்; எச்சரிக்கும் வனத்துறை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் பூச்சியூர் அருகே, கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, வனத்துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்றனர்.

கோவை வனப்பகுதி

Also Read: கோவை: கொரோனா நோயாளி உறவினர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மோதல்!-அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

அப்போது, அங்கு தலை சிதறிய நிலையில், ஒரு நாயின் சடலம் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியைக் கடித்ததில் நாயின் தலை சிதறியது தெரியவந்தது.

இதனால் வனத்துறையினர் தங்களது சோதனையை மேலும் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாகச் சென்ற இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் முருகேசன் என்பது தெரியவந்தது.

சுரேஷ் - முருகேசன்

காட்டுப் பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்த ஐந்து அவுட்டுக்காய்களை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், அவர்களை துடியலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சுரேஷ் மற்றும் முருகேசன் மீது சட்டவிரோதமாக வெடி வைத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

``அவுட்டுக்காயைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடியது தொடர்பாக கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மற்றும் துடியலூர் காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தொடர்புடைய 9 நபர்களை கைது செய்து, 14 அவுட்டுக் காய்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவுட்டுக்காயை வைத்த இளைஞர்களை கைது செய்த வனத்துறை

Also Read: மலை உச்சியில் சமையல் வீடியோ, காப்புக்காட்டில் அத்துமீறிய யூடியூபர்கள்; நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

மேலும், ``அவுட்டுக் காய் தயாரிப்பதும் அதைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதும் சட்டப்படி குற்றம். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு வெடி தயாரிப்பது குறித்த தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்” என்றும் காவல்துறை கூறியுள்ளது.



source https://www.vikatan.com/news/animals/forest-dept-officials-arrested-2-members-for-killing-dog-with-crude-bomb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக