Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

`அன்புமணியிடம் மாற்றம் தெரிகிறது!’ - சொல்கிறார் தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார்

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் சில ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர் கூறிய கருத்துகள், கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகத்திறன் குறித்த கேள்விக்குப் பதிலளித்திருந்த அன்புமணி, ‘‘தி.மு.க ஆட்சியில், முதலமைச்சரைச் சார்ந்து நியமனம் செய்யப்பட்டிருக்கிற நான்கு அதிகாரிகளுமே நேர்மையானவர்கள், திறமையானவர்கள். அதேசமயம், அமைச்சர்கள் நியமனம் விமர்சனத்துக்குரியது.

அன்புமணி

அமைச்சரவையில், துரைமுருகனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். கலைஞர் காலத்து ஆள் என்பதால், துரைமுருகனுக்குத் துணை முதலமைச்சர் பதவியைக்கூட கொடுத்திருக்கலாம்’’ என்றவர், ‘‘2016 சட்டமன்றத் தேர்தலில் முழங்கிய ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற வசனம், 2026 சட்டமன்ற தேர்தலிலும் நிச்சயம் ஒலிக்கும்’’ என்று கூறி பா.ம.க-வினரை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

அன்புமணியின் கருத்து குறித்து தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘தன்னுடைய சொந்த கருத்தைப் பகிர்கிறேன்’’ என்று குறிப்பிட்டு பேசிய எம்.பி செந்தில்குமார், ‘‘அன்புமணியின் பேட்டிகளை நானும் பார்த்தேன். எந்தவொரு அரசியல் கட்சியையும், தலைவர்களையும் விமர்சிக்கவில்லை. கமல், சீமான் போன்றோரையும் பாராட்டிதான் பேசியிருந்தார். திருமாவளவனையும் எதிர்க்கவில்லை என்று சொல்லி அனைத்து ஆப்ஷன்களையும் ஓப்பனாக வைத்திருக்கிறார் அன்புமணி.

துரைமுருகன்

துரைமுருகனுக்கும், ராமதாஸ் தரப்புக்கும் எப்போதுமே எந்தவொரு விமர்சனமும் இருந்ததில்லை. அதனால், அவர் அந்த கருத்தினைக் கூறியிருக்கலாம். பா.ம.க-வால், அ.தி.மு.க-தான் பலனடைகிறது. இப்போதைய சட்டமன்ற தேர்தலிலும்கூட பா.ம.க-வின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழுந்துள்ளது. ஆனால், அ.தி.மு.க-வுக்கான வாக்குகள் பா.ம.க-வுக்குக் கிடைக்கவில்லை. அன்புமணி பேசுவதைப் பார்க்கும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராவது போல் தெரிகிறது. இதனால்தான் என்னவோ, யாரையும் அவர் விமர்சிக்கவில்லை. அதிக சீட்டுகளை வாங்கிக்கொண்டு ஒன்றிரண்டில் வெற்றி பெறுவதற்குப் பதிலாக, குறைவான தொகுதிகளாக இருந்தாலும் அவற்றை தக்க வைத்துவிட வேண்டும் என நினைக்கிறார் என்பது போல் தெரிகிறது. வழக்கமாக ஏதோ ஒரு கதவை அடைத்துவிடுவார்கள். இப்போது, அன்புமணியிடம் மாற்றம் தெரிகிறது. முன்பிருந்ததைவிட ஒரு சேஞ்சஸைப் பார்க்கிறேன்’’ என்கிறார் செந்தில்குமார் எம்.பி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/anbumani-seems-to-have-been-changed-says-dharmapuri-dmk-mp-senthilkumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக