தஞ்சை மாவட்டத்தில் 1960-ம் ஆண்டு மே 20-ம் தேதி பிறந்தவர் ஜெயரஞ்சன். சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்.சி பட்ட மேற்படிப்பையும் சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி ஆய்வுப்பட்டத்தையும் பெற்றவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பணியாற்றியவர்.
அதன் பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி ஆய்வுப்பட்டத்தை முடித்தார். தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்காக பொருளாதாரம் சார்ந்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார்.
குறிப்பாக, கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பொருளாதார மாற்றங்கள் குறித்து 60-க்கும் மேற்பட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற பல ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. டெல்லியிலிருந்து வெளிவரும் ‘எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி’ உள்பட முக்கிய இதழ்களில் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார்.
‘திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன்?’ என்கிற கேள்வி கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சில இயக்கங்களாலும் சில தலைவர்களாலும் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொழில், கல்வி, பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் தமிழ்நாடு எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை புள்ளிவிவரங்களுடன் ஆதாரபூர்வமாக ஜெயரஞ்சன் முன்வைத்துவருகிறார். இதைத் தொடர்ந்து, திராவிட இயக்கங்களால் தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை என்று முன்வைக்கப்பட்ட வாதங்கள் எடுபடாமல் போயின என்பது குறிப்பிடத்தக்கது.
‘தலித்களும் பழங்குடியின மக்களும் நான்கு தென் மாநிலங்களில் இழந்தது’ என்ற தலைப்பில் இவர் மேற்கொண்ட ஆய்வு முக்கியமானது. வேளாண்துறை மற்றும் அதன் பொருளாதார உறவுகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் காவிரி பிரச்னை தீவிரமடைந்திருந்த சூழலில், காவிரி ஆற்றும் தமிழக விவசாயத்துக்குமான தொடர்புகள் குறித்து அய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் நிலை குறித்து பற்றி டெல்லியில் உள்ள வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனத்துக்காக (VV Giri National Labour Institute) ஆய்வுக்கட்டுரை அளித்தார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியும் இவர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.
மத்திய அரசின் தொழிலாளர்அமைச்சகத்தின் சார்பாக தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்துக்கு தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வுப்பணி செய்திருக்கிறார். தமிழகத்தில் உப்புத் தொழில்களின் கட்டமைப்பு குறித்து டெல்லி ஆய்வு நிறுவனத்துக்காக ஆய்வு மேற்கொண்டு கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பெண்கள் வளர்ச்சிக் கழகத்துக்காக வாழ்வாதார மதிப்பீட்டு அறிக்கையையும், யூனிசெஃப் நிறுவனத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் குடிநீர் மற்றும் துப்புறவு தொடர்பான ஆய்வறிக்கையையும் அளித்துள்ளார். குறைந்தபட்சக் கூலியும் கூலி நிர்ணயமும் என்ற தலைப்பில் தினக்கூலித்தொழிலாளர்களின் சிக்கல்கள் குறித்து இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை முக்கியமானது.
மிகவும் சிக்கலான, புரிந்துகொள்ள முடியாத பொருளாதாரப் பிரச்னைகளை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துவைக்கும் முறையால், தமிழக மக்களிடையே பிரபலமடைந்திருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/economist-jayaranjan-to-head-tamilnadu-policy-panel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக