தஞ்சாவூர் அருகே பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர் தன் மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக வளர்த்து வந்த இரண்டு கன்றுக்குட்டிகளை விற்று ரூ.6,000 பணத்தை கொரோனா பரவல் தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடுக்க உள்ள தகவல் வெளியாக, அது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான இவர் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். இவரின் மனைவி மகேஷ்வரி (42). இவர்களுக்குக் கல்லூரியில் படிக்கும் பிரசாந்த், 12-ம் வகுப்பு முடித்துள்ள சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் 100 நாள் வேலைசெய்து வருகிறார். அதில் வரக்கூடிய சம்பளம், மாதந்தோறும் கிடைக்கும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1,000 என இந்த சொற்ப வருமானமே அவரது குடும்பத்திற்கான மொத்த ஆதாரம்.
பார்வைக் குறைபாடு ஒரு பக்கம், போதிய வருமானம் இல்லாத நெருக்கடி மறுபக்கம் எனத் தன்னையும், தன் குடும்பத்தையும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கும் போதிலும், தன்னைப்போல் கஷ்டப்படும் பிறருக்குத் தன்னால் முடிந்த உதவிகளையும், அரசு சார்பில் கிடைக்கக்கூடிய சலுகைகளையும் பெற்றுத் தந்து வறியவர்களின் வழிகாட்டியாகவே வாழ்ந்து வருகிறார். தன் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களை தட்டிக்கேட்கவும் துளியும் தயங்காதவர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நீர்நிலைகளை மீட்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு அவர் நடையாக நடந்து மனுக்கள் கொடுத்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக பல ஏக்கர் கொண்ட இரண்டு ஏரி மீட்கப்பட்டிருப்பதுடன், தூர் வாரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தன் இளைய மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக 100 நாள் வேலையின் மூலம் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தில் இரண்டு கன்றுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். மகன் சஞ்சய்யை கல்லூரியில் சேர்க்கும்போது பணம் இல்லாமல் அவனது படிப்பு தடைபட்டு விடக்கூடாது எனபதற்காக, அந்தச் சமயத்தில் கன்றுக்குட்டிகளை விற்று அந்தப் பணத்தின் மூலம் மகனை கல்லூரியில் சேர்த்து விடலாம் என்ற முன்னேற்பாடாகவே இதனை செய்துள்ளார்.
இச்சூழலில் கொரோனா பெரும்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தது ரவிச்சந்திரனை கவலைகொள்ள வைத்தது. கொரோனா தடுப்புப் பணிக்கு பயன்படுத்துவதற்காக பலரும் முதலமைச்சரிடம் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். ரவிச்சந்திரனும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். இதற்காக கொஞ்சமும் யோசிக்காமல் மகனின் படிப்பிற்காக வாங்கிய இரண்டு கன்றுக்குட்டிகளையும் விற்று ரூ.6,000 கையில் வைத்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மூலமாக அந்தப் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுக்க இருக்கிறார்.
ஊர்ப்பெரியவர்கள், ``மகன் படிப்புக்காக வச்சிருந்த கன்றுக்குட்டியை வித்து நிதி கொடுக்குற உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா? உனக்கே ஆயிரம் கஷ்டம் இருக்கு, இந்த நேரத்துல இது தேவையா?" என்று கடிந்துகொள்ள, தன்னைப்போல் துயரத்தில் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் யாருக்காவது அந்தப் பணம் உதவினால் தன் மனது நிறையும், மகன் படிப்புக்கு வேறு ஏதாவது வழிபிறக்கும் எனக் கூறியிருக்கிறார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரவிச்சந்திரன் பணம் கொடுக்கும் தகவல் தெரிய வர, பலரும் அவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
ரவிச்சந்திரனிடம் பேசினோம்.
``நான் பி.எஸ்சி, பி.எட் படிச்சுட்டு தனியார் பள்ளியில ஆசிரியராக வேலைபார்த்து வந்தேன். எல்லாம் நல்லா போய்க்கிட்டிருந்த நேரம் அது. 20 வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு கண் பார்வையில கோளாறு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமா பார்வை குறைய ஆரம்பிச்சு, சுத்தமா மங்கிப் போயிருச்சு. கண் தெரியாததால ஆசிரியர் வேலையை விட வேண்டியதா போச்சு. பிறகு என்னோட சேர்ந்து என் மனைவி, பிள்ளைகள்பட்ட கஷ்டத்தை வார்த்தைகளால சொல்லவே முடியாது.
பகல் நேரத்துலகூட ஒருத்தரோட உதவி இல்லாம என்னால எங்கேயும் வெளிய போகமுடியாது. இரவு நேரத்துல நிலமை இன்னும் மோசம். முட்டிக்கிட்டு அழுகை வரும். நான் அழுதா குடும்பமே அழும்னு எல்லா வலிகளையும் மனசுக்குள்ள போட்டு அமுக்கிடுவேன். அதிலிருந்து கொஞ்ச கொஞ்சமா தேறி, சமூகப் பணிகள்ல கவனம் செலுத்தத் தொடங்கினேன். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காம தவிச்ச 20 பேருக்கு உதவித்தொகை வாங்கிக் கொடுத்திருக்கேன். மனநலம் குன்றிய மூணு பேருக்கு மாதம்தோறும் கொடுக்கப்படும் பராமரிப்புத் தொகை ரூ.1,500 பெற்றுக் கொடுத்திருக்கேன்.
50க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கக் காரணமா இருந்திருக்கிறேன். விழி இல்லாத நான் பலருக்கு வழிகாட்டியா இருக்கேன். அதனால குறைகள் மறந்து மனசும் நெறயுது. கொரோனா தடுப்புப் பணியின் நிவாரண நிதிக்கு என்னால முடிஞ்சதை செய்ய நெனச்சேன். கையில பணம் இல்ல. உடனே, என் மகனை காலேஜ்ல சேர்க்குறதுக்காக வளர்த்துவந்த கன்றுக்குட்டிகளை வித்துட்டேன். அதன் மூலம் கிடைச்ச ரூ 6,000 பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண நிதிக்குக் கொடுக்குறேன். நான் தி.மு.க அனுதாபி. கட்சியில உறுப்பினராவும் இருக்கேன். ஆனா அதுக்காகப் பணத்தை கொடுக்கலை. என்னைப்போல பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் யாருக்காவது நான் கொடுக்குற பணம் உதவணும்ங்கிற உணர்வுடன் கொடுக்குறேன்.
என் மகனை எப்படிக் கல்லூரியில சேர்க்குறதுனு கவலை ஒரு பக்கம் தொடருது. ஆனாலும், உலகத்தை பெரும் துயரம் சூழ்ந்திருக்கும்போது நம்மால முடிஞ்ச உதவியை செஞ்சிருக்கோமே என்ற மனதிருப்திக்கு ஈடேது. கண் தெரியாத என்னை வீட்டிலேயே இருந்தா என்னனு எல்லோரும் பேசுவாங்க. ஆக்கிரமிப்புல இருக்கும் புறம்போக்கு இடத்த மீட்டு, வீடில்லாம தவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கணும். நீர்நிலைகள்ல தடுப்புகள் அமைச்சு, பலன் தரக்கூடிய மரங்களை ஊன்றி வளர்க்கணும். எங்க பகுதியில வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி மையத்தை அமைக்கிறது உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டு வர்றேன். மண் நல்லாயிருந்தா மக்கள் நல்லா வாழலாம். அதுக்கு நீர்நிலைகள், மரங்கள் அவசியம். அதை நோக்கியே என் பயணம். என் பாதையில வெளிச்சம் இல்லைன்னாலும் மத்தவங்களுக்கு வெளிச்சம் கிடைக்க நான் ஓடிட்டேதான் இருப்பேன்'' என்கிறார் ரவிச்சந்திரன் உறுதியுடன்.
நல்ல மனம் ஒன்று!
source https://www.vikatan.com/news/tamilnadu/thanjavur-differently-abled-person-donates-to-covid-relief-fund-from-his-savings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக