Ad

வெள்ளி, 25 ஜூன், 2021

உ.பி : `வங்கிக்கு மாஸ்க் அணியாமல் வந்த நபர்; துப்பாக்கியால் சுட்ட காவலாளி' - அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம், பரோலி மாவட்டத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை இயங்கி வருகிறது. பரோலி ஜங்க்சனில் அமைந்துள்ள இந்த வங்கிக்கு நேற்றைய தினம் அதே பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான ராஜேஷ் குமார் என்பவர் பணப் பரிவர்த்தனைக்காக வந்திருக்கிறார். அப்போது, ராஜேஷ் குமார் முகக்கவசம் அணியாமல் வந்ததாகக் கூறப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் வங்கிக்குள் நுழைய முயன்ற ராஜேஷை வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஷ்ரா தடுத்து நிறுத்தி, முகக்கவசம் அணியாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால், ரயில்வே ஊழியர் ராஜேஷுக்கும் வங்கி காவலாளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, ராஜேஷ் குமாரின் மனைவி அவரை சமாதானப்படுத்தி அருகிலிருந்த கடைக்குச் சென்று முகக்கவசம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ராஜேஷும் முகக்கவசத்தை அணிந்துகொண்டு மீண்டும் வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

சம்பவம் நடந்த வங்கி

ஆனால், வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ரா முகக்கவசம் அணிந்து வந்த போதும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி ராஜேஷ் குமாரை அவமதித்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. வங்கி வாயிலில் ஒருவரை ஒருவர் அவதூறான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்துள்ளனர். அதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றிய நிலையில், வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ரா திடீரென ராஜேஷ் குமாரை கீழே தள்ளிவிட்டு தனது துப்பாக்கியால் அவரின் காலில் சுட்டார். பலத்த சத்தத்துடன் ராஜேஷ் குமாரின் காலை துளைத்த குண்டுகள் வங்கியில் குழுமியிருந்தோரைக் கண நேரத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் குமாருக்கு அவரது மனைவி கதறி அழுதபடி முதலுதவிகள் செய்து கொண்டே 'என் கணவரை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டீர்களே..!' என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். அதனையடுத்து, துப்பாக்கிச் சூடு குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம், பரோடா வங்கியில் நடந்தவை எல்லாம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ரயில்வே ஊழியர் ராஜேஷ் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஸ்ராவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

சம்பவம் குறித்து ராஜேஷ் குமார் உடன் வந்திருந்த அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், "முதலில் ராஜேஷ் வங்கிக்குள் நுழையும் போது அவர் மாஸ்க் அணியவில்லை. அதனால், காவலாளி மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிப்பேன் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து ராஜேஷ் குமார் மீண்டும் மாஸ்க் அணிந்து கொண்டு வங்கிக்கு வந்தார். ஆனால், காவலாளி அப்போதும் அனுமதிக்கவில்லை. வேண்டும் என்றே மதிய உணவு இடைவேளை அதனால் பிறகு வாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பினார். அப்போது தான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பேசிக்கொண்டிருக்கும் போதே காவலாளி ராஜேஷை கீழே தள்ளி துப்பாக்கியால் காலில் சுட்டு விட்டார். வங்கி வாடிக்கையாளரைக் காவலாளி துப்பாக்கியால் சுடும் வரையிலும் வங்கி ஊழியர்கள் யாரும் வந்து என்னவென்று கூட கேட்கவில்லை" என்றார்.

வாடிக்கையாளரை வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, பரோலி மாவட்ட காவல்துறையினர் வாக்குவாதத்தால் ஆத்திரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடா? அல்லது முன் விரோதத்தின் காரணமாக நடந்த தாக்குதலா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/bank-guard-opens-fire-at-customer-trying-to-enter-without-a-mask-in-uttar-pradesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக