பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சபரிநாதன். இவரது அம்மா ஈஸ்வரி, சபரிநாதன் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே இறந்துவிட்டார். அவரது அப்பா நீலகண்டன் மரதச்சு வேலைசெய்து வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். தனது ஒரே ஆதரவா தந்தையும் கொரோனாவால் இறந்த நிலையில் வாழ வழியின்றி 60 வயதான தனது பாட்டி லெட்சுமியுடன் தவித்து நிற்கிறார் சபரிநாதன். மகன் இறந்த துக்கம், பேரன் சிறு வயதிலேயே அப்பா,அம்மா இரண்டு பேரையும் இழந்து நிற்கும் வேதனை இரண்டும் பாட்டி லெட்சுமியின் கண்களில் ஓயாமல் கண்ணீராகக் கரைகிறது.
லெட்சுமி பாட்டியிடம் பேசினோம், "என் மருமக என் பேரன் ஒரு வயசு புள்ளையா இருக்கும் போதே என் கையில கொடுத்துட்டு மகராசியா போய் சேர்ந்துட்டா, அதுக்கு பெறவு என் மகன் நீலகண்டன் குடும்பத்தை கவனிப்பதற்காக அடிக்கடி வெளியூர் வேலைக்கு போயிடுவான். நான்தான் சபரியை வளர்த்தேன். நீலகண்டன் தன் மகன் மேல உசுரையே வச்சிருந்தான். அம்மா இல்லாத குறையே தெரியாம பார்த்துக்கிட்டான். அவன் அம்மா இல்லாத புள்ளைய அவனை ஒரு வார்த்தைகூட திட்டி பேசிராதம்மானு அவனுக்காகத்தான் நான் வாழுறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பான். அவனை படிக்க வச்சு பெரிய ஆளாக்கி நல்ல வேலையில சேர்க்கனும்னு ஆசைப்பட்டான். ஆனால் அதுக்குள்ள போய் சேர்ந்துட்டான்.
எனக்கும் உடம்புக்கு முடியல. இருக்குற இந்த சின்ன ஓட்டு வீடுதான் எங்களோட சொத்து. அதைச் சுற்றி சுவர் எடுக்க முடியாத அளவிற்கு கஷ்டம் எங்கள பாடாபடுத்துது. காசு வரும்போது சுவர் எடுத்துக்கலாம்மானு தார் பாயை சுவர் போல் கட்டி தொங்கவிட்டிருக்கான். ராத்திரி நேரத்துல பூச்சி பொட்டெல்லாம் வீட்டுக்குள்ள வந்துடும். என் மகன் வேலைக்கு போய் காசு கொண்டாந்து கொடுப்பான் எத்தனை குறை இருந்தாலும் சபரிக்காக அதை மறந்து நிம்மதியா கஞ்சி குடிச்சி வாழ்ந்துக்கிட்டிருந்தோம். இப்ப அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்ல. பாதுகாப்பா இருக்க நல்ல வீடுல்ல. இந்த சூழலுல என் பேரன் 11-ம் வகுப்பு போறான் வேலை செய்ய என் உடம்புலயும் தெம்பில்ல. இனி இவன வளர்த்து ஆளாக்க நான் என்ன பண்ணப்போறேனு நெனச்சாலே ராவெல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது என கலங்குகிறார் லெட்சுமி பாட்டி.
சபரிநாதனிடம் பேசினோம், "அப்பா,அம்மா ரெண்டு பேருமா எனக்கு இப்ப எங்க பாட்டிதான் இருக்கு. என்னைய நெனச்சு பாட்டி அழுதுட்டே இருக்கு. அழாத பாட்டினாலும் எப்படி அழாம இருக்குறது இனி நாம என்ன பண்ணப்போறோம்னு கேட்குது. என்னால எதுவும் பேச முடியல.அப்பா இருந்த வரைக்கும் எந்த குறையும் தெரியாம வளர்த்தார். அவர் இல்லாத இந்த சில நாளிலேயே பல சுமைகளை தாங்க வேண்டியிருக்கு. நல்லா படிக்கனும்கிற ஆசை இருக்கு. கடன் வேற இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணணும். என்ன பண்றதுனு தெரியல எல்லா வழியும் அடைப்பட்டு கிடக்கு" என கண் கலங்கினார்.
களத்தூரை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் பேசினோம், "எங்க பகுதில ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில், கொரோனா லாக்டெளனால் உணவின்றி தவிக்குறவங்களுக்கு தொடர்ந்து சாப்பாடு கொடுத்தாங்க. அதுல நான், சபரிநாதனோட அப்பா நீலகண்டன் எல்லாம் சேர்ந்து சர்வீஸ் செஞ்சோம். யாரும் பட்டினியாக இருக்க கூடாதுனு ஒரு நாள் கூட தவறாம சாப்பாடு கொடுக்க வருவார். பல இடங்களுக்கு போய் சாப்பாடு கொடுத்துட்டு வருவோம். "பசிச்ச வயித்துக்குத்தான் தெரியும் அதோட அருமைனு" நீலகண்டன் சொல்லிக்கிட்டே இருப்பார். இப்போ அவரது மகனை எந்த ஒரு ஆதரவும் இல்லாத நிலையில விட்டுட்டு போயிட்டார். அவர் மறைவை எங்களாலேயே தாங்க முடியல. அவரையே நம்பியிருந்த மகன்,வயசான அம்மா இவங்க ரெண்டு பேரோட எதிர்காலம் கேள்வி குறியாகிருச்சு. அரசு அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். " என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/in-pattukottai-11-th-student-sabarinathan-lost-his-dad-for-corona
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக