தமிழகம் முழுவதும் இருக்கும் பழைமையான கோயில்களின் பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய பெஞ்ச் வழங்கியது. 209 பக்கங்கள் கொண்ட இந்த விரிவான தீர்ப்பில் மொத்தம் 75 பரிந்துரைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் கடந்த முறை திருக்கோயில்களின் நிலை குறித்து அறநிலையத்துறையின் சார்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மொத்தம் 44,121கோயில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் அவற்றில் 8,450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என்றும் தெரிவித்தது.
44,121 கோயில்களில் 32,935 கோயில்கள் மிகவும் நல்ல நிலையில் பராமரிக்கப்படுவதாகவும் 6,414 கோயில்களில் சிறு பராமரிப்புப் பணிகள் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் 530 கோயில்களில் பாதிக்குமேல் சிதிலமடைந்திருப்பதாகவும் 716 கோயில்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்தனர். சிதிலமடைந்த கோயில்களை யுனெஸ்கோ விதிகளின் படி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை தகவல் தெரிவித்தது.
இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
“தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அதிகாரிகள் பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்பதோடு மட்டுமல்லாமல் கோயில் கட்டமைப்புகள் இடிக்கப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பண்டைய நினைவுச் சின்னங்கள், கோயில்கள் மற்றும் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் விதிகள் இருந்தபோதும் அரசு அவ்வாறு செய்யவில்லை” என்று வருத்தம் தெரிவித்ததோடு உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய 75 உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
அவற்றின் படி, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து உரிய வாடகை பாக்கிகளை வசூலிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அர்ச்சகர்கள், ஓதுவார்கள், ஸ்தபதிகள், இசைக்கலைஞர்கள், திருக்கோயில் ஊழியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். மாமல்லபுரம் போன்ற உலகப் பாரம்பர்யச் சின்ன மேலாண்மையை தக்க வழிகாட்டல்களுடன் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பராமரிப்பதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். அவர்களின் சம்பளத்தை நிர்ணயித்தல், கோயிலின் நிதியைப் பயன்படுத்துதல் தொடர்பான வழிகாட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதவிவகாரங்கள், கோயில்நிலங்கள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றின் பட்டில் தயாரிக்க வேண்டும். கோயில் சிலைகளைப் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கோயில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மத்திய சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்.
மாமல்லபுரத்தில் இயங்கும் கட்டட மற்றும் சிற்பக் கலை சார்ந்த படிப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தையும் பன்னிரண்டு வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருக்கோயிலின் பிரச்னைகள் அனைத்தையும் குறிப்பிட்டு வெளியாகியிருக்கும் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறார்கள் ஆன்மிக அன்பர்கள். நம் வரலாற்றுப் பாரம்பர்யச் சின்னங்களான கோயில்களைப் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் என்பது அவர்கள் கருத்து.
source https://www.vikatan.com/spiritual/temples/high-court-orders-to-act-on-protecting-temples
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக