உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இயங்கி வரும் பராஸ் மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகரத்தின் சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பராஸ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு போதியளவில் தொடர்ந்து இருந்து வருவதால், ஏராளமான கொரோனா நோயாளிகள் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இணையத்தில் சமீபமாகப் பரவிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றில், பராஸ் மருத்துவமனையின் உரிமையாளர் ஜெயின் என்பவர், "நகரத்தில் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மோடி நகர் முழுவதும் எங்கும் ஆக்ஸிஜன் இருப்பே இல்லை என்று நிலை வந்துவிட்டது. அதனால் நோயாளிகள் அனைவரையும் வெளியேறி விடுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், பெரும்பாலானோர் சிகிச்சையிலிருந்து வெளியேற மறுத்து விட்டனர்.
அதனால் நான், சோதனை முறையில் ஒன்றினை செய்தேன். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் யார் யார் உயிர் பிழைப்பார்கள் என்பதனை அறிந்துகொள்ளச் சோதனை முறையில் ஏப்ரல் 26-ம் தேதி காலை 7 மணியளவில் சுமார் 5 நிமிடங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தினேன். அப்போது சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 22 பேர் மூச்சு திணறித் துடித்தனர். அதன் மூலம் அந்த நோயாளிகளால் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை அறிந்தேன். அதனையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையிலிருந்த மற்ற 74 நோயாளிகளின் உறவினர்களை அழைத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சொந்தமாக எடுத்து வருமாறு வலியுறுத்தினேன்" என்று அந்த வீடியோவில் கூறுகிறார். உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருக்கும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து மருத்துவமனை உரிமையாளரின் பேச்சு சர்ச்சையானது. ஆக்ரா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பாண்டே இது குறித்து விளக்கமளிக்கையில், 'நாங்கள் வெளியாகியிருக்கும் வீடியோ குறித்து விசாரித்து வருகிறோம். தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது வீடியோவில் கூறப்பட்டுள்ள சம்பவம் உண்மை என்று உறுதியாகும் பட்சத்தில் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்" என்றார்.
ஆனால் இது குறித்து வீடியோவில் பேசியிருக்கும் பராஸ் மருத்துவமனை உரிமையாளர் ஜெயின் கூறுகையில், "நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நாங்கள் சோதனை முறையில் ஆக்ஸிஜனை நிறுத்தியது உண்மை தான். ஆனால், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு இன்னும் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கவே அவ்வாறு செய்தோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 26-ம் தேதி 4 நோயாளிகளும், 27-ம் தேதி 3 நோயாளிகளும் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஒரு வேளை வீடியோவில் கூறியிருந்தது தான் உண்மை என்றால் 22 நோயாளிகள் அல்லவா உயிரிழந்திருக்க வேண்டும்" என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
மேலும், சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட தலைமை நீதிபதி பிரபு சிங், "வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனை மிகப்பெரிய மருத்துவமனையாகும். அங்கு கொரோனாவை தவிர்த்து பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற நோய்ப் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வந்தவர்களும் ஒருவேளை உயிரிழந்திருக்கலாம். மாவட்ட சுகாதாரத்துறையின் தரவுகளின் படி பார்க்கையிலும், அந்த மருத்துவமனையில் குறிப்பிட்ட தேதியில் 22 பேர் உயிரிழந்ததாகத் தெரியவில்லை. வீடியோ குறித்து முழுமையாக விசாரித்த பின்னர் அது உண்மையாக இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
source https://www.vikatan.com/news/india/did-22-patients-die-due-to-an-oxygen-mock-drill-in-a-private-hospital-in-up
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக