சென்னை அடையாறு காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் 17 வயது மகளைக் கடந்த 29.4.2021-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கண்ணகிநகர் காவல் நிலையத்தில் அந்தச் சிறுமியின் அம்மா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கண்ணகி நகரைச் சேரந்த சுதாகர் (30) என்பவர் காதலித்து வந்தது தெரியவந்தது. சிறுமி காணாமல் போனதிலிருந்து சுதாகரும் மாயமாகியிருந்தார். அதனால் சிறுமியை அவர்தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர். அதன்பேரில் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சுதாகர் சிக்கினார். அவருடன் இருந்த சிறுமியை போலீஸார் மீட்டனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய சுதாகர், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர் சிறுமிக்கு சுதாகர் பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது.
Also Read: சென்னை: சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை - போக்சோ வழக்கில் 3 பேர் கைது
அதனால் கண்ணகி நகர் காவல் நிலையத்திலிருந்து இந்த வழக்கு கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. கிண்டி அனைத்து மகளிர் போலீஸார் சுதாகரைக் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ``ஊரடங்கு காலக்கட்டத்தில் பெண் குழந்தைளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளன. சைல்டு லைன் உதவி நம்பரான 1098-க்கு புகார்கள் வழக்கத்தைவிட அதிகளவில் வருகின்றன. புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கு வரும் புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீடுகளிலிருக்கும் சிறுமிகளிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி அவர்களைத் திருமணம் செய்து பாலியல் தொல்லைக் கொடுக்கும் சம்பவங்களும் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. அதனால் குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க தமிழக சமூகநலத்துறையும் காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. பாதிக்கப்படும் குழந்தைகள் தைரியமாக காவல் நிலையங்களில் புகாரளிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை திருமணங்களைத் தடுக்க முடியும். சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொல்லைக் குறித்த புகாரின்பேரில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கின்றன" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-pocso-act-in-lock-down-pocso-cases-increased
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக