Ad

திங்கள், 12 ஜூலை, 2021

வேப்ப மர வேரில் பிரமாண்ட சிவலிங்கம்; விளைநிலத்தில் வீற்றிருந்து அருள் புரியும் ஆவுடையப்பன்!

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த பெரிய மடியூர் கிராமத்தில் ஸ்ரீதர் என்ற விவசாயிக்குச் சொந்தமான விளை நிலத்தில் அமைந்துள்ள வேப்பமரத்தின் வேர்ப் பகுதியில் புதைந்து காணப்பட்ட சிவ லிங்கத்தைச் சிவனடியார்கள் கிராம தேவதையான முத்துமாரி அம்மனிடம் உத்தரவு வாங்கித் தோண்டி வெளியில் எடுத்துள்ளனர்.

3 அடி உயரத்தில் சதுர வடிவில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் அந்த சிவ லிங்கத்தை மீஞ்சூர் கிராம மக்கள் மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து மிகுந்த ஆச்சர்யத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இறைவன் ஆவுடையப்பனைத் தரிசிக்கச் சென்றிருந்தோம். மீஞ்சூர் - வண்டலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரிய மடியூர் கிராமத்தில் சிவ லிங்கம் எடுக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்றோம். சுற்றி பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் தனித்து நின்று கொண்டிருந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் மண்ணிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த மாணிக்க ஈசனைக் கண்டு பரவசமடைந்தோம்.

சிவலிங்கம்

உற்சவ குடையின் கீழ் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்த இறைவனை வேண்டிவிட்டு கிராம மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம். வேப்ப மரத்தடியில் இருந்து சிவலிங்க சிலை எடுக்கப்பட்டது குறித்து கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு நம்மிடம் பேசினார்.

"இந்த வேப்பமரத்துக்கு அடியில் பல ஆண்டுகாலமாக இந்த சிவலிங்கம் புதைந்த நிலையில் காணப்பட்டு வந்தது. முன்பு எங்கள் ஊர் பெரியவர்கள் சிலையைத் தோண்டி எடுக்க முற்பட்ட போது மரத்தை யாராலும் வெட்ட முடியவில்லை. அதனால், ஈசனுக்கு வெளியில் வருவதற்குச் சித்தமில்லை என்பதை அறிந்து கொண்டு நாங்கள் அப்படியே வேப்பமரத்துக்குப் பூஜைகள் செய்து வந்தோம்.

நாளடைவில் வெளியில் நன்றாகத் தெரியும்படி இருந்த சிலையானது வேப்பமரத்தின் வேரால் ஆட்கொள்ளப்பட்டு மண்ணுக்குள் புதைந்து போய்விட்டது. தோண்ட முற்பட்டால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் அப்படியே விட்டுவிட்டோம். இந்நிலையில், கடந்த வாரம் எங்கள் கிராமத்தின் காவல் தெய்வமான மாரியம்மன், கோயில் பூசாரியின் கனவில் வந்து லிங்கத்தைத் தோண்டி எடுக்கலாம் என்று உத்தரவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியார்கள் வந்து விளை நிலத்தைத் தோண்டி சிலையை வலுவாகச் சுற்றியிருந்த வேர்களை வெட்டி பல மணி நேர முயற்சிக்குப் பிறகு வெளியில் எடுத்தார்கள். அதற்குப் பிறகு சிவனடியார்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு இறைவனுக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.சிவலிங்கத்துக்கு பூஜை

வேப்பமரத்தின் அடியில் சிவலிங்கம்
சிவலிங்கத்துக்கு பூஜை
சிவலிங்கத்துக்கு பூஜை
வேப்பமரம்
சிவலிங்கத்துக்கு பூஜை

இது சுமார் 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பல்லவர் காலத்து லிங்கம் என்று கூறப்படுகிறது. வேப்பமரத்திலிருந்து சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ள தகவல் ஆன்மிக அன்பர்களைச் சென்றடைந்ததை அடுத்து தற்போது திருவள்ளூர், சென்னை எனப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து இறைவனைத் தரிசித்துச் சென்று கொண்டிருக்கின்றனர். ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான இந்த விளை நிலத்தில் ஈசனுக்குக் கோயில் எழுப்ப அவரே தேவையான இடம் ஒதுக்கித் தருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், எங்கள் கிராம மக்களிடம் இந்தச் சூழலில் கோயில் கட்டும் அளவுக்குப் பணமில்லை. அதனால், தற்காலிக குடில் அமைத்து தற்போது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். சதுர வடிவில் ஆவுடையாராகக் காட்சி தரும் இந்த லிங்கத்திற்கு மூத்த சிவனடியார்கள் 'காசி விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டியிருக்கின்றனர்" என்றார்.



source https://www.vikatan.com/spiritual/news/1000-yrs-old-shiva-lingam-excavated-from-a-neem-tree-near-meenjur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக