Ad

சனி, 3 ஜூலை, 2021

கான மயில்களை ஆபத்தில் தள்ளும் இந்தியாவின் பசுமை திட்டம்; அழியும் உயிர்களைப் பற்றி யோசிக்குமா அரசு?

காலை 9 மணியிருக்குமென்று நினைக்கிறேன். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில், தார் பாலைவனத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் பாலைவன தேசியப் பூங்காவில், ஒரு பாறைமீது அமர்ந்து, தொலைநோக்கிகளில் கண்களை நுழைத்து கான மயில்கள் ஏதேனும் கண்களில் தென்படுகிறதா என்று துழாவிக் கொண்டிருந்தேன்.

அதிகாலையில் பாலைவன தேசியப் பூங்காவுக்குள் நுழைந்தபோதே பார்த்த அந்த ஒற்றை ஆண் கான மயில் கண்களுக்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. 1969-ம் ஆண்டு கணக்குப்படி 1,260 என்ற எண்ணிக்கையில் வாழ்ந்த இந்த பறவைகளின் இன்றைய மொத்த எண்ணிக்கை 150. அழிவின் விளிம்பில் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றன இந்திய கான மயில்கள் (Great Indian Bustard).

Great Indian Bustard

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கான மயில்களைப் பார்ப்பதற்காகவே தார் பாலைவனத்துக்குச் சென்றிருந்தேன். அதிகாலையில் இருநூறு மீட்டர் தூரத்திலேயே ஆண் பறவை ஒன்று காட்சியளித்தது. அதற்குப் பின்னர், தலைக்கு மேலே இரண்டு பறந்து சென்றன. அவற்றின் உருவ அமைப்பைப் பார்த்தால் இவற்றால் பறக்க முடியாதென்றே நினைக்கத் தோன்றும். அவ்வளவு உயரமான, தடித்த உருவம். நன்கு வளர்ந்த கான மயில் மூன்று அடிக்குக் குறையாத உயரம் இருக்கும். இறக்கைகள் இரண்டையும் விரித்தால் சுமார் இரண்டு மீட்டர் வரை அகலமாக இருக்கும். தேசியப் பறவையான மயில்களைவிட இரண்டு மடங்கு அளவில் பெரியதாக இருக்கும்.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் முன்னர் பரவலாக இவை காணப்பட்டன. இன்று எண்ணிக்கையில் மிகவும் குறைந்து, பார்ப்பதே மிகவும் அரிது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இப்போது, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாழும் 150 கான மயில்களில், 122 பறவைகள் ராஜஸ்தானில்தான் வாழ்கின்றன. புல்வெளி நிலத்தைச் சார்ந்து வாழும் இவற்றின் பாதுகாப்பில், தார் பாலைவனத்தின் புல்வெளி நிறைந்த சூழலியல் கட்டமைப்பின் பாதுகாப்பு முதன்மைப் பங்கு வகிக்கிறது.

தார் பாலைவனம்

Also Read: மூடப்படும் அபாயத்தில் சென்னை பாம்புப் பண்ணை; காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன?

இந்தப் பறவைக்கு நேர்ப்பார்வை கிடையாது. அதன் கண்கள் பக்கவாட்டில் அமைந்திருக்கும். அதோடு, தனது பெரிய உடலைத் தூக்கிக்கொண்டு இவற்றால் மிக உயரமாகப் பறக்க இயலாது. குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் கான மயில்கள் நாம் நிறுவியிருக்கும் மின் கம்பிகளில் சிக்கி அடிபடுவதாலும் மின்சாரம் பாய்ந்தும் இறக்கின்றன. இவை மிகவும் மென்மையான, அச்சம் மிகுந்த குணம் கொண்டவையாக இருப்பதால், சிலநேரங்களில் மின் கம்பிகளில் மோதியதால் ஏற்படும் அதிர்ச்சியாலும் இறக்கின்றன. இப்படிப்பட்ட அபாயங்களை அவற்றுக்கு ஏற்படுத்தக்கூடிய மின்கம்பிகளை, ராஜஸ்தான் மின்வாரியம் அவற்றின் வாழ்விடம் முழுக்க அளவின்றி அமைத்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில், கான மயில்களின் வாழ்விடத்தைச் சுற்றி, குறிப்பாக பாலைவன தேசியப் பூங்காவில், மின்கம்பிகளை நிலத்துக்கு அடியில் அமைக்க வேண்டும் அல்லது மின்கம்பிகள் இருப்பதை அடையாளப்படுத்தும் சிவப்பு நிற திசைமாற்றிகளை பத்து மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2019-ம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டபோது, மின்கம்பிகளால் கான மயில்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விரைவில் சரிசெய்யவில்லை எனில், அந்த இனமே அழிந்துவிடக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கவே முடியாது என்று நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் ஆய்வாளர்களுடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Great Indian Bustard

அதைத் தொடர்ந்தே நிலத்துக்கு அடியில் குறைந்த அழுத்த மின் இணைப்புகளைக் கொண்டுபோக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயர் அழுத்த மின் இணைப்புகளையும் நிலத்தடியிலேயே கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய மூன்றுபேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. இந்நிலையில், ``இந்திய காட்டுயிர் நிறுவனம் கான மயில்களின் வாழ்விடங்களில் மட்டும்தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தன்னுடைய அறிக்கையில் கூறியது. ஆனால், நீதிமன்றம் அவற்றுக்கு வாழ்விடமாக அமையக்கூடிய நிலப்பகுதிகள் அனைத்திலுமே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இதனால், அவற்றுக்கான காப்பிட எல்லை விரிவாகும். அதோடு, ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களுக்கும் செலவுகள் மேன்மேலும் கூடும்" என்று ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

அதை முன்னிட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இதுவரை நிறைவேற்றப்படாதது மட்டுமன்றி, புதிதாக சூரிய மின் சக்தி திட்டங்களை அப்பகுதியில் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடந்துவருகின்றன. இந்தத் திட்டம், கான மயில்களின் வாழ்விடத்தைப் பெரியளவில் பாதிப்பதால், அழிவின் விளிம்பிலிருக்கும் இந்தப் பறவையினத்தின் இருப்பே ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது.

உலகம் முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்க வேண்டிய தேவை முன்பைவிட இப்போது வளர்ந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக எந்த எல்லைக்குச் செல்கிறோம் என்பது முக்கியம்.

Thar Desert

ராஜஸ்தான், காற்று மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்திக்குத் தகுந்த இடமாக இருப்பதால், அங்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறை அதிகக் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் கான மயில்களின் பாதுகாப்பு அதைவிட முக்கியம் என்பதைக் குறிப்பிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதில், காற்று மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களுக்கு 4 பில்லியன் டாலர் கூடுதலாகச் செலவாகும் என்றும் 20 ஜிகாவாட் காற்று மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ஓ2 பவர் பிரைவேட் லிமிடெட், அதானி க்ரீன் எனெர்ஜி லிமிடெட், ரெனியூ பவர் பிரைவேட், ஆக்மி சோலார் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி காலநிலை இலக்குகளை அடைவதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன என்றாலும், அதற்காக இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியது அவசியமா என்ற கேள்வியை சூழலியல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். ஏற்கெனவே தார் பாலைவனத்தில், அவை வாழும் பகுதிகளில் காற்றாலைகளும் மின் கம்பிகளும் அதிகளவில் இருப்பதால் பறக்கும்போது விபத்துகளுக்கு உள்ளாவது உயிரிழப்பதும் இவற்றுடைய இருப்பையே சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, அந்த அபாயத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், அதிகப்படுத்தும் வகையிலான திட்டங்களை வகுப்பது குறித்து இந்தியளவிலான பறவையாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

Great Indian Bustard

உலகளவில் மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயு வெளியீட்டாளராக இருக்கிறது இந்தியா. 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இப்போது இருப்பதைவிட 10 மடங்கு அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போதுதான், பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் கணிசமாகக் குறைக்க முடியும். இருப்பினும், மனிதத் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளைச் சரிசெய்வதற்கான முயற்சியில், மற்ற உயிரினங்களுடைய உயிர் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், செலவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, கான மயில்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/how-renewable-energy-projects-endangers-the-existence-of-great-indian-bustards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக