Ad

திங்கள், 12 ஜூலை, 2021

ஜிகா வைரஸ் அச்சுறுத்தல்: கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் சிசுவுக்கும் பிரச்னை ஏற்படுமா?

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கேரளாவில் அடுத்த பாதிப்பாக ஜிகா வைரஸ் கடந்த சில தினங்களாகப் பரவி வருகிறது. இதுவரை திருவனந்தபுரத்தில் 18 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் முதலில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர் 24 வயதான கர்ப்பிணிப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரது ரத்த மாதிரிகளும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வகத்தில் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Mosquito

டெங்கு, சிக்கன் குனியா போன்ற பாதிப்புகளை உண்டாக்கும் ஏடிஸ் (Aedes mosquitoes) வகை கொசுவால்தான் ஜிகா வைரஸ் பாதிப்பும் உண்டாகிறது. இது தொற்றுநோய் இல்லையென்றாலும், மிக சுலபமாகக் கொசுக்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிவிடும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது, அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். ஜிகா வைரஸ் பாதிப்புகள் குறித்தும், அதன் பரவும் தன்மை குறித்தும் ஓசூரில் உள்ள நுரையீரல் மருத்துவர் மங்கையர்கரசியிடம் பேசினோம்.

``1947-ம் வருடம் உகாண்டா நாட்டில் ஜிகா என்ற காட்டில் வேறு வைரஸைப் பற்றி ஆய்வுக்குச் சென்றவர்களால்தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. முதன்முதலில் இந்தியாவில் 2014 முதல் 2017 வரை 4 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டது. அவர் குறைந்த அளவிலான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டிருந்ததால் சீக்கிரமாகக் குணமடைந்துவிட்டார். 2018-ம் ஆண்டு இந்தியாவில் முதல் அவுட்பிரேக் ஏற்பட்டது. இதில் 54 பேர் பாதிக்கப்பட்டனர்.

மருத்துவர் மங்கையர்கரசி

2015-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் நோய்ப் பரவலை `பொது சுகாதார அவசர நிலை' என அறிவித்தது. ஜிகா வைரஸ் பாதிப்பு ஏடிஸ் வகை கொசுவின் மூலம் ஏற்படுகிறது. 80% எந்த வித அறிகுறிகளும் இல்லாமல்தான் இருக்கும். அறிகுறிகள் காணப்படும் 20% பேருக்கு, அறிகுறிகளுக்கு ஏற்ற மருந்துகள் கொடுக்கப்படும்போது அவை 2 முதல் 7 நாள்களுக்குள் சரியாகிவிடும்.

ஜிகா வைரஸ் அறிகுறியாகக் காய்ச்சல், மூட்டு வலி, தலை வலி, சோர்வு போன்றவை இருக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைந்து தலை சிறியதாகுதல் (Microcephaly) உள்ளிட்ட மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பார்வை இழத்தல், செவித்திறன் குறைபாடு, மூட்டுகளில் செயல்பாடு குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை குழந்தை பிறக்கும்போது நன்றாக இருந்தாலும், சில நாள்கள் கழித்து இது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது, ஆனால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை'' என்ற டாக்டர்,

``கொசு கடிப்பதால் மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்ளும்போது, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை மற்றவருக்குச் செலுத்தும்போது என, இவற்றின் மூலமும் ஜிகா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது கொரோனா போன்று அதிகமாகப் பரவக்கூடியது இல்லை என்றாலும், நாம் கொசுக்கள் இல்லாத சுற்றுப்புறத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டியது முக்கியம்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருக்கும் தம்பதிகள், ஜிகா வைரஸ் பாதிப்புள்ள இடங்களுக்குச் செல்வதையும், பாதிப்பு ஏற்பட்டவர்களுடனான தொடர்பையும் தவிர்க்க வேண்டும்'' என்று அறிவுறுத்துகிறார் டாக்டர்.

Pregnancy (Representational Image)

Also Read: கேரளா: கொரோனாவைத் தொடர்ந்து மிரட்டும் ஜிகா வைரஸ்! - தமிழக எல்லையில் கர்ப்பிணி உட்பட 14 பேர் பாதிப்பு

மேலும், ``ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவருக்குத்தான் அறிகுறிகள் வெளித்தெரியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஜிகா வைரஸ் இதுவரை ரத்தம், விந்தணு, சிறுநீர் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஜிகா வைரஸுக்கான தடுப்பு மருந்தோ, சிகிச்சை மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கோவிட் 19 போல, தலைவலி, காய்ச்சல் என அறிகுறிகளுக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடவே, அதிக ஓய்வும் தேவை'' என்கிறார் டாக்டர்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-how-zika-virus-would-affect-pregnant-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக