Ad

புதன், 21 ஜூலை, 2021

`இதுவும் நடந்துவிட்டால் எங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும்!' - எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதார போராட்டம்

அம்பிகா பாட்டிக்கு மூன்று மகன்கள். மூன்று பேரன்கள், இரண்டு பேத்திகள். தனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நண்டு, இறால் ஆகியவற்றைப் பிடித்து காசிமேடு கொண்டுவந்து விற்றுக்கொண்டிருக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஒருமுறை நண்டு பிடிக்க ஆற்றில் இறங்கினால், இரண்டு உள்ளங்கை அளவு நண்டுகள் குறைந்தபட்சம் ஒரு பறியாவது (சுமார் 20 கிலோ) கிடைக்கும். அதுபோக, கூடை கூடையாக இறால் கிடைக்கும்.

அம்பிகா பாட்டி

அவ்வளவு வளமிக்க பகுதியாக இருந்த கொற்றலை ஆற்றில் இப்போது கையகல நண்டு கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. ஆறு, அலையாத்திக் காடு என்று அனைத்தையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கம்பெனிகளே அதற்குக் காரணம் என்கிறார் அம்பிகா பாட்டி.

``ஒரு கம்பெனி கட்டுனாங்க. ஊருக்கு 95-ல வேல கொடுத்தாங்க. அப்புறம் சுத்தூர கம்பெனி கட்டிட்டு, ஊருக்கு வேலையும் கொடுக்கல, ஒண்ணும் கொடுக்கல. நாங்க ஆத்த தொலச்சதுதான் மிச்சம். இப்ப மறுபடியும் இருக்குற ஆத்து நிலத்தையும் அடிச்சுகிட்டே வராங்கோ. அப்புறம் எங்க பேரப்புள்ளைங்கல எப்படி படிக்க வெக்குறது, எப்படி பொழைக்குறது?

கம்பெனிங்க வந்தப்புறம், நண்டு கிடைக்குறதே இல்ல. நண்டு கண்லயே படறது இல்ல. ஒரு ஓலப்பறி பூரா நண்டு பிடிச்சாந்து வித்தா, அது போவும் ஆயிரக்கணக்குல. அந்த மாதிரி நண்டுலாம் ஒரு கிலோ 1000 ரூபா, 1500 ரூபாக்கு விக்குறது. அப்படிப்பட்டது இப்போ கெடைக்குறதே இல்லப்பா" என்கிறார் வேதனையோடு.

போராட்டக்களத்தில் அமர்ந்திருந்த மீனவக் குடும்பங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும், தங்களை வாழ வைத்துக் கொண்டிருந்த ஆற்றை ஆக்கிரமிக்கும் கம்பெனிகளால் ஏதாவதொரு வகையில் வாழ்வாதாரத்தை இழந்த கதைகள் புதைந்திருக்கின்றன. கொற்றலை ஆற்றின் மீது அப்படியொரு சுரண்டல் மீண்டும் நடந்துகொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல், காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் ஒன்று திரண்டு தங்கள் படகுகளில் வந்து எண்ணூர் அனல்மின் நிலையத்துக்காக ஆற்றை ஆக்கிரமித்து நடந்து கொண்டிருக்கும் கட்டுமானத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள்.

கொற்றலை ஆற்றின்மீது மணல் கொட்டி மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணி

TANGEDCO கொற்றலை ஆற்றை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பது குறித்து பல புகார்கள் அளிக்கப்பட்டபோதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு, ஆற்றை ஆக்கிரமித்து நடைபெறும் கட்டுமானப் பகுதிக்கு படகில் வந்து தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். எண்ணூர் நிலப்பகுதியில் நீரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, கோணமுடுக்கு அலையாத்திக் காடு.

இதுகுறித்து எண்ணூர் மீனவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கொற்றலை ஆற்றில் 1.1 ஏக்கர் உட்பட கோணமுடுக்கு அலையாத்தி நிலத்தோடு சேர்த்து சுமார் 15 ஏக்கர் நிலப்பகுதியை எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்குரிய அனுமதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் பெறப்படவில்லை என்று எண்ணூர் மீனவர்களும் சூழலியல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், நிலக்கரி எடுத்துச் செல்லும் இடைவழி திட்டத்துக்கு (Coal Conveyor corridor), இந்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்காக சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் தவறான முன்மொழிதலை அனல்மின் நிலையம் அளித்துள்ளது. நீர்நிலைகளைத் தவிர்க்கும் ஒரு நில வரைபடத் திட்டத்தை அளித்து ஒப்புதலைப் பெற்றுவிட்டு, ஒன்றிய அரசுக்கு தகவல் தராமல் திட்டத்தை மாற்றிவிட்டது. தற்போதைய நில வரை திட்டம் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகும். மிகப்பெரும் அளவுக்கு நீர்நிலைகளின் மீதும் அலையாத்திகளின் மீதும் இந்தத் திட்டம் அமைக்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.

நீர்வழி போராட்டம்
கோணமுடுக்கு அலையாத்தி மற்றும் கொற்றலை ஆற்றின்மீது கட்டுமானப்பணிகள் நடக்கும் இடம்
எண்ணூர் அனல்மின் நிலையம்
கோணமுடுக்கு அலையாத்தி
எண்ணூர்
தாசில்தாரோடு பேச்சுவார்த்தையில் மீனவர்கள்
எண்ணூர் மீனவர்கள்
Ennore Fisher women

தற்போது நடைபெறும் கட்டுமானப் பணிகளின் மூலம், 2018-ம் ஆண்டு கடற்கரை ஒழுங்கமைவு மண்டலத் திட்டத்தின்படி, `வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாத மண்டலம்' என்று அறிவிக்கப்பட்ட கோணமுடுக்கு அலையாத்தி, 2 மீட்டர் உயரத்துக்கு மணல் போட்டு சில நாள்களில் மூடப்படும்.

உள்ளூர் மீனவர்கள், ``ஏற்கெனவே, பழையகால் பின்பாடு என்ற இடம் (அதிகளவிலான மீன்கள் கிடைக்கும் இடம்), ஆக்கிரமிக்கப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டது. மிச்சமிருக்கும் எண்ணூர் பழவேற்காடு சதுப்புநிலத்தில், உயிர்சூழல் உற்பத்தி அதிகமுள்ள பகுதியாக, இன்னமும் கோணமுடுக்கு இருந்து வருகிறது. வெள்ளை இறால், மொட்ட இறால், புலி இறால், சேற்று இறால், சிவப்பு இறால் ஆகிய வணிக ரீதியில் மதிப்பு வாய்ந்த இறால் வகைகள் கோணமுடுக்கு அலையாத்தியில் கிடைக்கின்றன.

இந்த அலையாத்தியை சுற்றியுள்ள நீர்ப்பரப்பு மீன்பிடித் தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது. அடப்பு வலை, கை வலை போன்றவற்றைப் பயன்படுத்தி மீனவர்கள் தொழில் செய்வது, சுமார் 2,500 பெண்கள் அலையாத்தி பகுதியில் இறால், நண்டு பிடித்து தொழில் செய்வது என்று இந்த அலையாத்தியைச் சார்ந்துள்ளனர். TANGEDCO செய்துவரும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், இந்தப் பகுதியும் புதைக்கப்பட்டு, எங்கள் வாழ்வாதாரத்தில் முதன்மைப் பங்கு வகிக்கும் பகுதி அழிக்கப்படும்" என்று புலம்புகின்றனர்.

மேலும், ``தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற அதிகார அமைப்புகள், செல்வாக்கு மிக்க பெரிய கம்பெனிகளின் அத்துமீறல்களை ஒழுங்குபடுத்தத் துணிய மாட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான், நாங்கள் இந்தப் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், மின்சாரத் துறை அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.

https://ift.tt/3zlBkqU

Also Read: ``எங்களுக்கு என்ன செய்தது இந்தச் சென்னை?!" - எண்ணூர் மக்களின் நியாயமான கேள்வி

ஆனால், இவர்களில் யாரும் எங்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்பதால் இப்போது நாங்கள் முதலமைச்சரிடம் முறையிடுகிறோம். நிலக்கரி சாம்பல் மாசுபாடு, சாலைகள், குழாய்கள், அனல்மின் நிலையங்களுக்கான அடிக்கட்டுமானங்கள், நிலக்கரி தளங்கள், துறைமுகங்கள் காரணமாக நாங்கள் நிறைய இழந்துவிட்டோம். இப்போது, பெண் மீனவர்கள் உட்பட எங்கள் அனைவருக்குமாகவும் மிச்சமிருக்கும் அடிப்படை வாழ்வாதார வளங்களையே குறி வைக்கிறார்கள். கோணமுடுக்கு அலையாத்தி அழிக்கப்பட்டால், எங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும்" என்று எண்ணூர் மீனவர்கள் போராட்டத்தின் போது தெரிவித்தனர்.

போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு வந்த பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியை பார்வையிட்டதோடு, மீனவர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்டறிந்துகோண்டு, ஆற்றை அழித்து சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, விசாரணை மேற்கொள்ள பரிந்துரைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து நீர்வழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.

ஜூலை 12-ம் தேதியன்று, பேரா.ஜனகராஜன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ஆகியோர் முதலமைச்சரிடம் இந்தப் பிரச்னை குறித்து சமர்ப்பித்த அறிக்கையில், ``தான் செய்துவரும் பணிகள் குறித்து TANGEDCO அரசிடம் தவறான தகவல்களைத் தருகிறார்கள்.

மீனவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தாசில்தார்

Also Read: அத்துமீறும் காமராஜர் துறைமுக நிர்வாகம்... அழிக்கப்படுகிறதா எண்ணூர்!?

கொற்றலை ஆறு மற்றும் கோணமுடுக்கு அலையாத்திக் காட்டின் மீது நடைபெறும் இந்தக் கட்டுமானப் பணிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனில், தண்டத்தொகை, மீனவர்களின் வாழ்வாதார இழப்பு, அவர்களின் உடல்நலனுக்குத் தீங்கு செய்தமைக்கான இழப்பு, மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு, TANGEDCO அதிகாரிகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் என்று அரசுக்கு ஏற்படும் இழப்புகள் மேலும் கூடுதலாக அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

எண்ணூருக்குள் நுழைந்த நிறுவனங்களாலும் துறைமுகங்களாலும் அந்த மண்ணின் மக்கள் ஏற்கெனவே அதிக இழப்புகளைச் சந்தித்துவிட்டனர். அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் உயிர்ச்சூழலை அழிக்கும் வகையிலான திட்டங்களை மீண்டும் கொண்டுவருவது, அப்பகுதயை வாழத் தகுதியற்ற நிலமாகவே மாற்றிவிடும் என்று சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/ennore-fishers-community-protest-against-tangecos-river-encroachment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக