அ.தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளை ஈரோடு மாநகர் மாவட்டமாகப் பிரித்து மாவட்டச் செயலாளராக கே.வி.ராமலிங்கம் இருந்து வருகிறார். அதேபோல, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் ஈரோடு புறநகர் மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.
கடந்தாண்டு திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் போன்ற பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அ.தி.மு.க.,வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட போதே, ஈரோடு மாவட்டத்தையும் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மாவட்டத்திலிருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் எழுப்பினர். மாவட்ட பிரிப்பால் கோஷ்டிப் பூசல் உருவாகி, அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என எடப்பாடியார் அமைதி காத்து வந்தார். இப்படியான நிலையில் தற்போது ஈரோடு புறநகர் மாவட்டத்தை ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுவதாக ஒ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றனர்.
அந்தவகையில், பவானி, பெருந்துறை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டமாகப் பிரித்து, மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 3 தொகுதிகளை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டமாகப் பிரித்து, மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், செங்கோட்டையனுக்கு எடப்பாடியார் மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/admk-ex-minister-sengottaiyan-appointed-as-a-district-secretary-for-erode-suburban-district-west
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக