Ad

சனி, 24 ஜூலை, 2021

இந்திய மாநிலங்களின் வரலாறு: `தனி மாநிலம்’ கேட்டு போராடும் மொழிவழி தேசிய இன மக்கள்|பகுதி - 5

இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் "தனிமாநிலம்" கேட்டு போராடும் மக்கள் கூட்டம் இன்னமும் இருக்கின்றன. உயிர்ப்புடன் போராடிக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மையான தேசிய இன மக்கள் தாங்கள் பேசும் தாய்மொழிக்கு அங்கீகாரம் கிடைக்கவும், தனித்துவமான தங்களின் பண்பாட்டு அடையாளங்களை காப்பதற்காகவும் மொழிவழி தனிமாநிலம் கேட்டு போராடுகின்றனர். இப்படி போராடும் மக்களின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால், மேலும் 40 மாநிலங்கள் கூட புதிதாக பிறக்கலாம்!

இந்தியாவில் எங்கெல்லாம் மக்கள் தனிமாநில அந்தஸ்து கேட்டு போராடுகின்றனர் என்பதைப் பற்றி மாநில வாரியாக இந்த பகுதியில் காண்போம்!

உத்தரபிரதேச மாநிலம்

உத்தரப்பிரதேசம்:

உட்சபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளும், 20 கோடிக்கும் மேல் மக்கள் தொகையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்தரப்பிரதேசத்தை ஐந்து மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் வடக்கு பகுதியை "பிராஜ் பிரதேஷ்" என்றும், மேற்கு பகுதியை "ஹரித் பிரதேஷ்" என்றும், அவத்தி மொழிபேசும் மக்கள் வாழும் மையப் பகுதியை "ஆவத் பிரதேஷ்" என்றும், போஜ்புரி மொழிபேசும் மக்கள் அதிகம் வாழும் கிழக்குப்பகுதியை "பூர்வாஞ்சல்" என்றும், பந்தேலி மொழிபேசும் மக்கள் செறிந்து காணப்படும் தெற்கு பகுதியை "பந்தேல்கண்ட்" என்றும் ஐந்து மாநிலங்களாக பிரிக்கவேண்டும் என்று அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசியல்கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உ.பி. மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மாயாவதி தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பிறகு நடந்த தேர்தலில் தோல்வியடையவே அந்தக்கோரிக்கை நீர்த்துப்போயின. 2014-ம் ஆண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்தக்கோரிக்கை இடம்பெற்றது, ஆனால் ஆட்சிக்கு வந்தபின் கிடப்பில் போடப்பட்டது. 1955-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டபோதே உத்தரப்பிரதேசத்தை மூன்றாக பிரிக்கவேண்டும் என அம்பேத்கர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இன்றுவரை இந்தக்கோரிக்கை நிலுவையிலே உள்ளது.

மத்தியப்பிரதேசம்:

விந்திய மலைத்தொடரை உள்ளடக்கிய மத்தியப்பிரதேசத்தில், மால்வி மொழிபேசும் மக்கள் தங்களுக்கென தனி "மால்வா" மாநிலம் கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல், பகேலி மொழிபேசும் மக்களும் வடக்குப்பகுதியை பிரித்து தனி "பகேல்கண்ட்" மாநில கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். மேலும், மத்தியப்பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளான ஜபல்பூர், மாண்டல், சியோனி, பாலகாட், சிந்த்வாரா, நரசிங்கபூர், கட்னி, திந்தோரி ஆகிய எட்டு மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி "மகாகோசல்” மாநிலம் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிவருகின்றனர். இவர்களின் தனிமாநிலக் கோரிக்கையை பாரதிய ஜனதாகட்சியின் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் ஆதரித்து பேசிவருவதும் குறிப்பிடத்தக்கது.

போபால் நகரம்

சத்தீஸ்கர்:

மாவோயிஸ்டுகள் நிறைந்துகாணப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெருமளவு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் கோண்டு மொழியை பேசும் கோண்டு இன மக்கள். அவர்களும் தாங்கள் அதிகம் வசிக்கக்கூடிய சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதி, ஒரிசா, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளை ஒன்றினைத்து தனி "கோண்டுவானா” மாநிலம் கேட்டு உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து ஆதிவாசி சங்ஷீமா பரிஷத் உள்ளிட்ட பழங்குடி அமைப்புகள் போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீகார் விவசாயம்

பீகார்:

பீகார் மாநிலத்தில் வாழும் மைதிலி மொழி பேசும் மக்கள், தாங்கள் அதிகம் வாழும் பீகாரின் வடக்கு பகுதியை பிரித்து, தங்களுக்கென தனியாக "மிதிலாஞ்சல்” மாநிலம் கேட்டு போராடிவருகின்றனர். இதிகாசப் புராணமான இராமாயணத்தில் சீதை பிறந்த இடமாக இந்தப்பகுதி கருதப்படுகிறது. மேலும், இம்மாநிலத்தில் போஜ்புரி மொழிபேசும் மக்களும், தாங்கள் அதிகம் வசிக்கக்கூடிய பீகார், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளையும் சேர்த்து தனி "போஜ்பூர்” மாநிலம் கேட்டு போராடி வருகின்றனர்.

ஒரிசா:

மொழிவாரி மாநிலங்களின் முன்னோடியான ஒரிசா மாநிலத்திலும் தனி மாநிலக் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, கோசல்-சம்பல்புரி மொழிபேசும் மக்கள் ஒரிசாவின் மேற்கு பகுதிகளான சம்பல்பூர், ஜர்ஷ்குடா, பலாங்கிர், நுவபடா, சுந்தர்கார், பவுத், பர்கார், கலஹாண்டி, சோனேபுர், அத்மல்லிக் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிணைத்து தனி "கோசல்” மாநிலம் அமைக்கவேண்டும் என நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இம்மக்களின் கோரிக்கைக்காக நூற்றுக்கணக்கான அமைப்புகள் கோசல் மாநில ஒருங்கிணைப்புக்குழு எனும் பெயரில் ஒன்றிணைத்து தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

மேற்கு வங்காளம்:

மேற்குவங்கம் மாநிலத்தின் வடக்கு மலைப்பிரதேசத்தில் அதிகளவு கூர்க்கா இன மக்கள் வசித்து வருகின்றனர். நேபாளி மொழியை தாய்மொழியாகக் கொண்ட இம்மக்கள், டார்ஜிலிங், சிலிகுரி, காளிம்பொங் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களைப் பிரித்து, தங்களுக்கென தனி "கூர்க்காலாந்து” மாநிலம் கேட்டு பல்லாண்டுகாலமாக போராடி வருகின்றன.

கூர்க்காலாந்து தனி மாநிலம் போராட்டம்

கூர்க்காலாந்து தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி இதுவரையில் 1,200-கும் மேற்பட்ட கூர்க்கா மக்கள் உயிரிழந்துள்ளனர். ஜி.ஜே.எம். எனப்படும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா எனும் அமைப்பின் தலைவர் பிமல் குருங் இந்தப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார். அதேபோல், மேற்குவங்கத்தின் டார்ஜிலிங், மால்டா, கூச்-பெஹார், தினாஜ்பூர், ஜல்பைகுரி போன்ற பகுதிகளையும், அஸ்ஸாமின் துப்ரி, போங்கைகோன், கோக்ராஜர் ஆகிய பகுதிகளையும் இணைத்து "கிரேட் கூச்-பெஹார் ” அல்லது "கம்தாபூர்” என்ற தனிமாநிலம் கேட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை அஸ்ஸாமைச் சேர்ந்த அனைத்து கூச்-ராஜ்பாங்சிஸ் மாணவர் அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது.

அசாம் தேயிலை தோட்டம்

அஸ்ஸாம்:

அஸ்ஸாம் மாநிலத்தை மூன்றாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக இருந்து வருகிறது. குறிப்பாக, போடோ மொழி பேசும் போடோ இன பழங்குடி மக்கள் அஸ்ஸாமின் கோக்ராஜர், சிராங், பாக்சா, உதல்குரி உள்ளிட்ட மாவட்டங்களை பிரித்து தங்களுக்கென தனி "போடோலாந்து” மாநிலத்தை உருவாக்கித்தர வேண்டும் என ஆயுதப்போராட்டம் வரை கையிலெடுத்தனர். இந்த போராட்டத்திற்கு பக்கபலமாக அனைத்து போடோ மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பும் களத்தில் இருக்கிறது. கர்பி மொழிபேசும் மக்களும் தங்களுக்கென தனியாக "கர்பி ஆங்லாங்” மாநிலம் கேட்டு மிகத்தீவிரப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், திமாஸா இன மக்களும் அஸ்ஸாமின் ஒரு மாவட்டத்தை தனி "தேமாஜி” மாநிலமாக அங்கீகரிக்கக்கோரி போராடிவருகின்றனர்.

திரிபுரா:

திரிபுரா மாநிலத்தில் உள்ள திப்ரா பழங்குடி மக்கள் தங்களுக்கென சொந்தமாக "திப்ராலாந்து” என்ற தனி மாநிலம் வேண்டும் என போராடி வருகின்றனர். இப்பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக திவிப்ரா தேசியக் கட்சி, இன்டிஜினியஸ் பீப்பிள்ஸ் பிரண்ட் ஆப் திரிபுரா போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன.

வடகிழக்கு மாநிலம்

மணிப்பூர்:

மணிப்பூர் மாநிலத்தில் குகி, நாகா, மைத்ரேயி உள்ளிட்ட பல்வேறு பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் குகி மொழிபேசும் பழங்குடி மக்கள், தாங்கள் அதிகம் வாழக்கூடிய அஸ்ஸாமின் சாண்டல், சுரசந்தபூர், சதார் ஹில்ஸ், சேனாபதி, உக்ருல், தமெங்லாங் உள்ளிட்ட பகுதிகளை ஒன்றுசேர்த்து தங்களுக்கென தனி "குகிலாந்து” மாநிலம் அமைக்கவேண்டும் என போராடி வருகின்றனர்.

மேகாலயா நீர்வீழ்ச்சிகள்

மேகாலயா:

மேகாலயா மாநிலம் காரோ, காசி, ஜெய்ந்தியா ஆகிய மலைப்பகுதிகளை அங்கமாகக் கொண்டது. இதில் காரோ மற்றும் காசி-ஜெய்ந்தியா பகுதிகள் ஒன்றுக்கொன்று மொழி, இன அடைப்படையில் வெவ்வேறானவை. எனவே, மேகலயாவிலிருந்து காரோவை பிரித்து தனி "காரோலாந்து” மாநிலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காரோ ஹில்ஸ் மாநில இயக்க கூட்டுக் குழுவினரும் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

குஜராத்:

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில் அங்கும் தனிமாநில கோரிக்கைகள் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, சௌராஷ்டிரா மொழிபேசும் மக்கள் குஜராத்தின் கிர் சோம்நாத், துவாரகா, அம்ரேலி, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், பவநகர், மோர்பி, போடாட் சுரேந்திரநகர், ஜூனாகாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு வாழ்கின்றனர். அவர்களும் தங்களுக்கென தனி "சௌராஷ்டிரா” மாநிலம் வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு சௌராஷ்ட்ரா சங்காளன் சமிதி என்ற அமைப்பு ஆதரவாக உள்ளது. அதேபோல் கட்ச் மொழிபேசும் மக்களும் தாங்கள் வசிக்கும் "ராண் ஆப் கட்ச்" பகுதியை தனி மாநிலமாக அங்கீகரிக்கக்கோரி போராடி வருகின்றன். இவர்களுக்கு ஆதரவாக கட்ச் ராஜ்ய சங்கல்ப சமிதி என்ற அமைப்பும் தனிமாநில கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

குஜராத்

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான ஜாட் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ராஜஸ்தானின் மேற்குப் பகுதிகளான ஜெய்ஷால்மர், பார்மர், நாகவுர், பிக்கானீர், கங்காநகர், செரு, ஜீன்சூமர், ஹனுமன்கார்க் முதலான 13 மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி "மாரு பிரதேஷ்” மாநிலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு வலுசேர்க்கும் விதமாக மாரு பிரதேஷ் நிர்மாண் மோர்ச்சா என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவர் ஜெய்வீர் கோத்ராவும் குரலெழுப்பி வருகிறார்.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிரா மாநிலத்தை பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரத்துக்கு முன்பாகவே இருந்துவருகிறது. குறிப்பாக, 1905-ம் ஆண்டு தனி "விதர்பா" மாநிலம் உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை 1948-ல் அமைக்கப்பட்ட ஜே.வி.பி. கமிட்டி, 1955-ல் அமைக்கப்பட்ட ஃபசல் அலி கமிட்டி, 1987-ல் அமைக்கப்பட்ட சங்மா கமிட்டி என அடுத்தடுத்து அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு குழுக்கள் பரிசீலினை செய்தன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளும் விதர்பா தனிமாநிலத்திற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்திவந்தன. ஆனால், காலப்போக்கில் அந்தக்கோரிக்கை கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் அப்பகுதி மக்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் 11 மாவட்டங்களை இணைத்து விதர்பா மாநிலம் அமைத்தே தீருவோம் என தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விவசாயிகள் பேரணி! - ஸ்தம்பித்த மகாராஷ்டிரா

அதேபோல், மஹாராஷ்டிராவின் கடற்கரை மாவட்டங்களான ரத்னகிரி, சிந்துதுர்க் போன்ற பகுதிகளை சேர்த்து தனி "கொங்கன்” மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் வாழும் கொங்கனி மொழிபேசும் மக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், "மராத்வாடா" மற்றும் "கந்தேஷ்” போன்ற பகுதிகளையும் தனிமாநிலமாக்க அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

Also Read: இந்திய மாநிலங்களின் வரலாறு: வெடித்தது உண்ணாவிரதப் போராட்டம்! பிறந்தது மொழிவாரி மாநிலங்கள்|பகுதி -2

கர்நாடகா:

கர்நாடகா மாநிலத்தை நான்காக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வாடிக்கையானதுதான். குறிப்பாக, கர்நாடகாவின் கடலோரப்பகுதியில் வசிக்கும் துளுமொழி பேசும் மக்கள் தென்கனரா, உடுப்பி, கார்வார், சிக்மகளூரு, கேரளாவின் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைப் பிரித்து தனி "துளுநாடு” மாநிலம் அமைக்க வேண்டும் என புதியகொடி உருவாக்கி போராடி வருகின்றனர். அதேபோல், கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் வாழும் கொடவா இன மக்கள் தங்களுக்கென தனி "குடகு” அல்லது "கொடவா” மாநிலம் அமைக்க வேண்டும் எனக்கோரி குடகு ராஜ்ஜிய முக்தி மோர்ச்சா எனும் அமைப்பை ஏற்படுத்தி போராடி வருகின்றனர்.

கர்நாடகா சட்டமன்றம்

இதுமட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்தின் பீதர், கல்புர்கி, பெல்லாரி, ரெய்ச்சூர், கொப்பள், யாத்கிர் ஆகிய மாவட்டங்களைப் பிரித்து தனி "கல்யாண்-கர்நாடகா” மாநிலம் உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் தனிக்கொடி ஏற்றப்பட்டு போராட்டமும் நடைபெறுகிறது. அதேபோல், பெலகாவியை தலைநகராகக் கொண்டு தனி "வட கர்நாடகா” மாநிலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.

கேரளா:

இதுதவிர கேரளாவை இரண்டாகப் பிரித்து தனி "மலபார்” மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) மற்றும் சமஸ்தா கேரளா சன்னி ஸ்டூடன்ட்ஸ் ஃபெடரேஷன் (எஸ்.கே.எஸ்.எஸ்.எப்) உள்ளிட்ட சில இசுலாமிய அமைப்புகள் எழுப்பி வருகின்றன.

கேரளா

இப்படியாக இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் "தனி மாநில" கோரிக்கைகள் முன்னிறுத்தப்பட்டு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் சில மாநிலங்கள் பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்கள் மொழிவாரியாக உருவாக்கம் பெற்றுள்ளன. அப்படியிருக்க, ஒரே மொழிபேசும் தமிழ்நாட்டில் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்தது ஏன்? யாரால் எழுப்பப்பட்டது? அதற்கான பின்னணி காரணங்கள் என்ன?

காத்திருங்கள்... அடுத்த பாகத்தில்...!

Also Read: இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1



source https://www.vikatan.com/news/india/history-of-indian-states-and-request-for-new-states-part-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக