Ad

சனி, 24 ஜூலை, 2021

கரூர்: `நான் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன்!' -ரெய்டுக்கு பிறகு விளக்கமளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தி.மு.கவின் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக, தனது சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை நடைபெற்றதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.கவின் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு 26 இடங்களில் பரிசோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையின் முடிவில் ரூ. 22.56 லட்சம் ரொக்கமும், சொத்துகள் மற்றும் முதலீட்டு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை நடைபெற்ற அன்று, சென்னையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதுகுறித்து எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால், இ.பி.எஸ்ஸூம், ஓ.பி.எஸ்ஸூம் கூட்டாக, 'இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' என்று அறிக்கை விட்டனர். இந்த நிலையில், ஜூலை 24 -ம் தேதி கரூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள, கரூருக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருகை தட்தார்.

Also Read: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: குவிக்கப்பட்ட போலீஸ், அடுத்தடுத்த சோதனை! கரூரில் பரபரப்பு

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எனது வீடு மற்றும் கரூரில் உள்ள வீடு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை என்பது தி.மு.க அரசின் அரசியல் பழிவாங்கும் முதல் நடவடிக்கை. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது தி.மு.க ஆட்சில் எதிர்பார்த்தது தான். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். எனது நிறுவனத்தில் அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படும் பணத்திற்கு, என்னிடம் கணக்கு உள்ளது. இதுகுறித்து, விசாரணை நடைபெறும் பொழுது அதனை சமர்ப்பிப்பேன்.

பேட்டியளிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நீதிமன்றத்தின் விசாரணையில் உண்மை வெளியே வரும். நான் அமைச்சரான பிறகு எவ்வித தொழிலையும் துவங்கவில்லை. கட்சியில் ஒன்றிய செயலாளராக இணைவதற்கு முன்பே தொழிலை மேற்கொண்டு இருக்கிறேன். அமைச்சரான பிறகு தான் தொழில் தொடங்கியதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. சென்னை, கரூர் ஆகிய இரண்டு இடங்களில் வாடகை வீடுகளில் தான் இன்னமும் குடியிருந்து வருகிறேன்.

வங்கி லாக்கர்களில் எதுவும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளையும் கட்சி நிர்வாகிகளையும் மிரட்டி தி.மு.கவில் இணைக்கும் முயற்சியில் தி.மு.கவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். போக்குவரத்து கழகத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாற்றம் செய்துள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத் துறையினரை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனை நாங்கள் எதிர்பார்த்தது தான். சட்ட ரீதியாகவே அதனை எதிர் கொள்வோம்.

Also Read: முதல் ‘போணி' எம்.ஆர்.விஜயபாஸ்கர்... ஸ்டாலின் 'ரெய்டு' ஸ்டார்ட் ஆகிவிட்டதா?

தடுப்பூசி மையங்களில் தி.மு.கவினர் அரசியல் செய்து வருகின்றனர். முன்னதாக டோக்கன்கள் வழங்கி அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தடுப்பு செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசியை இவர்கள் வழங்குவதைப் போல தடுப்பூசியில் அரசியல் செய்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் தி.மு.கவின் கொடி ஏற்றி நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர். கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்துவதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரிதமாகச் செயல்பட்டார். ஆனால், இரண்டாவது அறையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.கவினர் தயாராக உள்ளனர்" என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mrvijayabaskar-press-meet-after-the-raid-happen-in-his-properties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக