Ad

செவ்வாய், 20 ஜூலை, 2021

`இந்திய கலாசார வரலாற்றை ஆராயும்குழு மாற்றப்படுவது,32 எம்.பி-க்களுக்கு கிடைத்த வெற்றி’ -சு.வெங்கடேசன்

இந்திய பண்பாட்டையும், வரலாற்றையும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, மறுசீரமைப்பு செய்யப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளது தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடப்படுகிறது.

நாடாளுமன்றம்

இந்தியாவின் 12,000 ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம், பரிணாம வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய அரசால் கடந்த ஆண்டு 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக அப்போதைய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்தார்.

இதை எதிர்த்து அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், '16 பேர் கொண்ட நிபுணர் குழு பன்மைத்துவத்தை பிரதிபலிக்கவில்லை. இக்குழுவில் தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் இல்லை. குழுவில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலோர் இந்திய சமுகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற குழுக்களைச் சார்ந்தவர்கள்.

சு.வெங்கடேசன்

ஒன்றிய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் ஆய்வாளர்கள் யாரும் குழுவில் இல்லை, விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா?” என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 23 -ல் பல்வேறு மாநிலங்களை 32 எம்.பி.க்கள் இக்குழுவை கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன், 'கடும் விமர்சனத்திற்கு உள்ளான அந்த குழு இன்னும் நீடிக்கிறதா? அக்குழு கூடியுள்ளதா? குழு புதிதாக பன்மைத்துவ பிரதிநிதித்துவத்தோடு மாற்றி அமைக்கப்படுமா?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பதில்

இதற்கு கடந்த 17 -ம் தேதி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதிலில், "இக்குழு 2016-ல் அமைக்கப்பட்டது. கடந்த 2017 ஜனவ‌ரி 3, மே 2 தேதிகளில் 2 முறை கூடியுள்ளது. தற்போது இக் குழுவை மாற்றி அமைக்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும்போது அதன் உறுப்பினர்கள் பன்மைத்துவத்துடன் அமைவதற்கான அனைத்து ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும்" என்று தெ‌ரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், "இது 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக எழுப்பிய குரலுக்கு கிடைத்த வெற்றி. ஆனாலும் அரசின் நோக்கம் குறித்து பரந்த விவாதம் தேவைப்படுகிறது. வரலாற்று திரிபு, பன்மைத்துவம் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுவதுமுள்ள வரலாற்று ஆய்வாளர்களின் கடந்த கால, நிகழ்கால அறிவியல் பூர்வமான பங்களிப்புகள் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/india/the-team-formed-for-researching-indian-history-will-be-changed-madurai-mp-happy-for-the-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக