Ad

வெள்ளி, 25 ஜூன், 2021

"பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் தேவை"- சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்களை தனது வீட்டிற்கு அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், சிவசேனா, திமுக போன்ற கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைப்பது குறித்து சரத்பவார் எதிர்கட்சித் தலைவர்களுடன் விவாதித்ததாக செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பு குறித்து சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது, "கடந்த பல மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எந்த விதத்தில் ஆதரவு கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கவே எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்திருந்தேன். ஆனால் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணி அமைக்க இந்த ஆலோசனைக்கூட்டம் கூட்டப்பட்டதாக செய்தி பரவிவிட்டது. டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னையில் விவசாயிகளுக்கு எப்படி உதவலாம் என்பது குறித்தும், இதனை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது குறித்தும், அரசுக்கு இவ்விவகாரத்தில் ஆலோசனை வழங்குவது குறித்துமே விவாதிக்கப்பட்டது. பாஜகவிற்கு மாற்றாக வேறு கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கவில்லை. புதிய கூட்டணி உருவாக்கப்பட்டால் அதில் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொள்வது அவசியம் என்பது எனது கருத்து. இதே கருத்து டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது என்றார். காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய புதிய கூட்டணி அமைக்கப்பட்டால் பிரதமர் வேட்பாளர் யாராக இருப்பார் என்று கேட்டதற்கு, "அது குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனால் அதுபோன்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டால் தலைமை அனைத்து கட்சிகளின் ஒருமித்த முடிவாக இருக்கவேண்டும் என்றார்.

Anil deshmukh

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் இல்லத்தில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தியது குறித்து கேட்டதற்கு, விரக்தியில் இது போன்று துன்புறுத்துகின்றனர். இதற்கு முன்பு அனில்தேஷ்முக்கின் மகன் தொழில் குறித்து விசாரித்தனர். ஆனால் எனக்கு தெரிந்து எதுவும் சிக்கவில்லை. எனவே விரக்தியில் அனில் தேஷ்முக்கை மாற்று வழியில் துன்புறுத்துகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. எங்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார். முன்னதாக வெள்ளிக்கிழமை அமலாப்பிரிவு அதிகாரிகள் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் மும்பை மற்றும் நாக்பூர் இல்லங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூடுதல் ஆதாரங்களைத் தேடி இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சி.பி.ஐ. அதிகாரிகளும் ஏற்கனவே அனில் தேஷ்முக் இல்லத்தில் சோதனை நடத்தி இருக்கின்றனர்.

அமலாக்கப்பிரிவு நடத்திய ரெய்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் அளித்த பேட்டியில், "மகா விகாஷ் அகாடி அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற ரெய்டுகள் நடத்தப்படுகிறது. அனைத்து தேசிய விசாரணை அமைப்புக்களும் தங்களது சுதந்திரத்தை நரேந்திர மோடி அரசிடம் சரண்டர் செய்துவிட்டன. மோடி அரசு அவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டினார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக இணைந்து, மகாவிகாஷ் அகாடியின் தலைவர்களைச் சித்ரவதைப்படுத்தி மாநில அரசுக்குக் களங்கப்படுத்த நினைக்கும் மோடி அரசின் முயற்சியை முறியடிப்போம் என்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள பீர் பார் மற்றும் ஓட்டல்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி மாமூல் வாங்கிக்கொடுக்கும் படி போலீஸாரை நிர்ப்பந்தம் செய்ததாக முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டியிருந்தார்.



source https://www.vikatan.com/news/politics/sharad-pawar-says-that-congress-needs-to-form-new-alliance-to-replace-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக