Ad

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கமல்ப்ரீத் கவுர்: மில்கா சிங், பி.டி.உஷா தவறவிட்ட பதக்கத்தை கைப்பற்றுவாரா?

உலகளவில் நம்பர் 1, உலகக்கோப்பை சாம்பியன்ஸ் என பல அவதானிப்புகளோடு இந்தியா சார்பில் டோக்கியோவுக்குச் சென்ற, பல வீரர்/வீராங்கனைகளும் சொதப்பலாக பெர்ஃபார்ம் செய்து ஏமாற்றியிருந்தனர். ஆனால், அப்படி எந்தவிதமான பெருமைமிக்க கடந்தகால ரெகார்டும் இல்லாமல் சென்ற கமல்ப்ரீத் கவுர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இதுவரை காமென்வெல்த் போட்டிகளில் ஆடியதில்லை. ஆசிய போட்டிகளில் ஆடியதில்லை. அப்படியிருந்தும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக உயர்ந்திருக்கிறார்.

தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை பெரிதாக சாதித்ததில்லை. தேசத்தின் பெருமைகளாக கருதப்படும் மில்கா சிங், பி.டி.உஷா போன்றோருமே கூட ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.

கமல்ப்ரீத் கவுர்

இவர்களைத் தாண்டி அவ்வப்போது ஒரு சில வீரர் வீராங்கனைகள் தடகள போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுவார்கள். ஆனால், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.

சமீபத்தில் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் விகாஸ் கவுடா, கிருஷ்ணா பூனியா என இரண்டு பேர் வட்டு எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தனர். இறுதிப்போட்டியில் இருவருமே அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை.

இப்படி வரலாற்று நெடுகிலும் தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஆனால், இந்த முறை அந்த மோசமான வரலாற்றை கமல்ப்ரீத் கவுர் மாற்றி எழுதுவார் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

பஞ்சாபில் கபர்வாலா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் கமல்ப்ரீத் கவுர். விவசாயமே அந்த கிராமத்தின் அடிநாதம். பெரிய வசதி வாய்ப்புகளற்ற, பொருளாதார அளவில் பின் தங்கிய கிராமம் என்பதால் பெண் பிள்ளைகளை சீக்கிரமே திருமணம் முடித்துக் கொடுக்கும் பழக்கமுடைய கிராமம் அது. சிறுவயதிலிருந்தே தன்னுடன் விளையாடித் திரிந்த பலரும் சீக்கிரம் திருமணமாகி செல்வதை கண்டு கமல்ப்ரீத்துக்கு பயம் உண்டாகியிருக்கிறது. கமல்ப்ரீத் படிப்பிலும் கெட்டி இல்லை என்பதால், ஒரு சம்பிரதாயத்துக்கு பள்ளிப்படிப்பை முடிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. அதிலிருந்து தப்பிப்பதற்காகவே பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார்.

பஞ்சாப், ஹரியானா பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் விளையாட்டை ஒரு பெருமையாக நினைப்பவர்கள். கமல்ப்ரீத் விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியவுடனே அவருடைய தந்தை அவரை இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்த்திருக்கிறார். முதலில் குண்டு எறிதலையே தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருடைய பயிற்சியாளரே அவரை வட்டு எறிதலுக்கு மாற்றி விட்டிருக்கிறார். அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியிருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கை பொறுத்தவரைக்கும் கமல்ப்ரீத்தின் பெர்ஃபார்மென்ஸ் எல்லாருக்குமே சர்ப்ரைஸாகவே அமைந்தது. இதற்கு முன்னர் இந்த பெயரை பெரிதாக யாருமே கேட்டதில்லை. காரணம், ஆசிய மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் ஆடியதே இல்லை. தேசிய போட்டிகளில்தான் பெரும்பாலும் ஆடியிருந்தார். மேலும் வட்டு எறிதலில் நான்கு ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் சீனியர் வீராங்கனையான சீமா புனியா மீதுதான் அனைவரின் கவனமும் இருந்தது... கமல்ப்ரீத் தன்னுடைய முதல் வீச்சை முடிக்கும் வரை!

உலகளவிலான தரவரிசையில் டாப்பில் இருக்கும் வீராங்கனைகள், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்கள் எனப் பலரும் தொடர்ந்து ஃபவுல் வாங்க, அதிகம் அறியப்படாமல் இருந்த கமல்ப்ரீத் தனக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலுமே மிகச்சிறப்பாக சரியாக வட்டை வீசியிருந்தார். ஒவ்வொரு முறையும் முந்தைய வீச்சை விட அதிக தூரத்திற்கு வீசினார். கடைசியாக மூன்றாவது வாய்ப்பில் 64 மீட்டருக்கு வீசி நேராக இறுதிச்சுற்றுக்கு தகுதியானார். நிர்ணயிக்கப்பட்டிருந்த 64 புள்ளிகளைப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இரண்டே வீராங்கனைகள்தான். ஒருவர் அமெரிக்காவின் வேலரி ஆல்மன், இன்னொருவர் நம்முடைய கமல்ப்ரீத் கவுர். மற்ற எல்லாருமே 64 புள்ளிகளுக்கு கீழேதான் பெற்றிருந்தனர்.

கமல்ப்ரீத் கவுர்
கமல்ப்ரீத் கவுர் இதற்கு முன்னர் 65.06 மீட்டருக்கு ஒரு முறை வீசியிருந்தார். அதன்மூலமே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றிருந்தார். சமீபத்தில் கடந்த மாதத்தில் 66.59 மீட்டருக்கு வீசி தேசிய ரெக்கார்ட் வைத்திருந்தார்.

இவை இரண்டுமே கமல்ப்ரீத்தின் கரியர் பெஸ்ட் பர்ஃபாமென்ஸ்கள். ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குரோஷியாவின் பெர்க்கோவிக், உலக சாம்பியன் டைட்டிலை வைத்திருக்கும் கியுபாவின் யாமே பெரஸ் எல்லாம் தகுதிச்சுற்றில் கமல்ப்ரீத்தை விட சுமாராகவே பெர்ஃபார்ம் செய்திருக்கின்றனர். அனுபவமிக்க வீராங்கனைகள் என்பதால் இறுதிப்போட்டியில்தான் தங்களுடைய முழுப்பலத்தையும் வெளிப்படுத்துவார்கள்.

இது கமல்ப்ரீத்துக்கு சவாலளிக்கக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், தகுதிச்சுற்றை போன்றே சீராக மூன்று வாய்ப்புகளிலும் ஃபவுல் வாங்காமல் கமல்ப்ரீத் வீசிவிடும்பட்சத்தில் பதக்கத்தை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

ரோம் ஒலிம்பிக்கில் 0.4 விநாடிகளில் மில்கா சிங் தவறவிட்டதை, 1984 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் 0.1 விநாடியில் பி.டி.உஷா தவறவிட்டதை, இந்த முறை கமல்ப்ரீத் கவுர் தவறவிடமாட்டார் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. நூற்றாண்டு பழமைமிக்க ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தடகளத்தில் முதல் பதக்கம் வெல்வது ஒரு பெண்ணாக இருந்தால் அது கூடுதல் பெருமையே!

கமல்ப்ரீத் கவுர் பங்கேற்கும் வட்டு எறிதல் இறுதிப்போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது!


source https://sports.vikatan.com/olympics/kamalpreet-a-women-discus-thrower-going-to-make-history-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக