Covid Question: என் வயது 55. கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையிலிருந்து தொற்றுக்குள்ளாகாமல் தப்பித்துவிட்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. இப்போது உபயோகத்திலிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனில் எனக்கு திருப்தியில்லை. கூடிய விரைவில் இன்னும் பெட்டரான தடுப்பூசி வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன். மாடர்னா போன்ற mRNA வகை தடுப்பூசிகளின் செயல்திறன் சிறப்பாக இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மைதானா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்
``உங்கள் எதிர்பார்ப்பு தவறானது. இப்போதுள்ள சூழலில் எவ்வளவு சீக்கிரம் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறாரோ, அவ்வளவு பாதுகாப்பை அவர் பெறுகிறார். எல்லா தடுப்பூசிகளுமே நல்ல செயல்திறன் கொண்டவைதான். ஒவ்வொன்றுக்கும் சிறிய அளவிலான வேறுபாடுகள் இருக்கலாமே தவிர, ஒன்றைவிட இன்னொன்று சிறப்பானது என்றெல்லாம் அர்த்தமில்லை. அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு. உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன்.
உலகின் பல நாடுகளிலும் ஏதோ ஒரு தடுப்பூசிகூட கிடைக்காத நிலையில் எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு கிடைக்கும் தடுப்பூசிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சீக்கிரமே போட்டுக்கொள்வதுதான் பாதுகாப்பு. இரண்டு அலைகளிலிருந்து தப்பித்துவிட்டதைப் பெருமையாக நினைக்காதீர்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் நீங்கள் இன்னும் ஆபத்து வளையத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அந்த ஆபத்து உங்களுக்கானது மட்டுமல்ல, உங்களைச் சார்ந்தவர்களுக்குமானது என்பதையும் மறக்க வேண்டாம்."
Covid Question: நான் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டேன். ஏப்ரல், 2021-ல் இந்தியாவில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டேன். இப்போது நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளிக்காததால் அதை அங்கே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நான் மீண்டும் வேறு ஏதேனும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டுமா?
நிதிஷ் (விகடன் இணையதளத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்
``கூடிய விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கான உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துவிடும். நீங்கள் எந்த நாட்டில் வேலை பார்க்கிறீர்களோ, அந்நாட்டு அரசின் தடுப்பூசி மைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இது பற்றி ஆலோசனை கேட்கலாம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களால் சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும்."
Also Read: Covid Questions: 2-ம் டோஸ் காலக்கெடு தாண்டிவிட்டது; மீண்டும் முதல் டோஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா?
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/i-am-waiting-for-mrna-vaccines-to-get-inoculated-is-it-safe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக