Ad

சனி, 24 ஜூலை, 2021

வாழ்வை மாற்றிய இராணுவம்... ஒலிம்பிக் அரையிறுதியில் படகோட்டும் வீரர்கள் அரவிந்த் - அர்ஜுன் சாதனை!

2016 ரியோ ஒலிம்பிக்கின் போது ஒலிம்பிக் பற்றியெல்லாம் அவர்களுக்கு பெரிதாக விவரம் தெரிந்திருக்கவில்லை. இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள போட்டியை மட்டும் கடைசி நொடியில் பார்த்து கைத்தட்டிவிட்டு, அன்றைய நாளோடு அதை மறந்துவிட்டு செல்லும் சாமானியர்களாகவே அவர்கள் இருந்தனர். வாழ்வின் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் அலாதியானவை!

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதே இணை இந்திய ஜெர்சியை அணிந்து படகு வலிக்கும் போட்டியில் களமிறங்குகிறது. 24 வயதாகும் அரவிந்த் சிங் மற்றும் 25 வயதாகும் அர்ஜுன் லாலுமே அந்த இருவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் படகு வலித்தல் (Rowing) போட்டியில் Lightweight double sculls பிரிவில் இந்தியா சார்பில் துடுப்பு போடவிருக்கின்றனர். அர்ஜுன் லால் ராஜஸ்தானில் ஒரு சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.

அரவிந்த் சிங் உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இருவரது குடும்பமுமே விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. இவர்களும் சிறுவயதில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு பொருளாதார தேவைகளுக்காக வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய சூழலில், இருவருமே இராணுவத்தில் இணைந்திருக்கின்றனர்.அங்கேதான் இருவரும் பரிட்சயமாகினர்.

இருவருக்கும் படகுகளும் பரிட்சயமானது. இராணுவ பயிற்சி முகாம்களில் படகோட்டும் பயிற்சியில் இருவரும் அதிக ஆர்வம் காட்டியிருக்கின்றனர். இதனால் சீனியர் அதிகாரிகள் பலரும் இவர்களை படகோட்டும் போட்டிகளுக்கு பிரத்யேகமாக தயார்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளனர்.இதெல்லாம் நடந்தது 2016-ம் ஆண்டு. அப்போது வரைக்குமே இருவருக்கும் ஒலிம்பிக் பற்றியோ படகு வலித்தல் போட்டியை பற்றியோ பெரிய விவரமெல்லாம் தெரிந்திருக்கவில்லை. இதன்பிறகே, ஒவ்வொன்றாக கற்றுத் தேர்ந்திருக்கின்றனர்.

2018 ஆசிய போட்டியில் ரிசர்வ் ப்ளேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தனர்.
அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால்

இந்த இணை நேரடியாக பங்கேற்ற முதல் தொடர் இதுதான். அதிலேயே பதக்கம் வென்று அசத்தியதால் இவர்கள் மீது பெரும் நம்பிக்கை உண்டானது. அக்டோபர் 2020 முதலே ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்காக, புனேவில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். தினமும் 5-6 மணி நேரம் கடுமையான பயிற்சியெடுத்து ஒலிம்பிக்கை குறிவைத்து தயாராகினர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் வெள்ளி வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுவிட்டனர். 2000-மீ இலக்கை 6 நிமிடம் 36.92 விநாடிகளில் கடந்திருந்தனர். முதலிடத்தை பிடித்திருந்த ஜப்பான் அணி இவர்களை விட இரண்டு விநாடிகள் முன்னதாக முடித்திருந்தது. நூலிழையில் தங்கப்பதக்கம் தவறிப்போனது.

''நாங்கள் இதுவரை பெற்ற வெற்றிகள் எதையும் கொண்டாடவில்லை. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுவிட்டே எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து கொண்டாட வேண்டும்'' என அர்ஜுன் மற்றும் அரவிந்த் இருவருமே நம்பிக்கையோடு பேசியிருக்கின்றனர். 

அர்ஜுன் லால் - அரவிந்த் சிங் இணை டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட பதக்கம் உறுதி என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒட்டுமொத்த தேசமும் உங்களோடு இணைந்து கொண்டாட காத்திருக்கிறது. ஆல் தி பெஸ்ட் பாய்ஸ்!



source https://sports.vikatan.com/olympics/rowers-arvind-singh-arjun-lal-enters-semi-finals-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக