வாரத்தின் ஏழு நாள்களும் செய்து கொடுத்தாலும் வீட்டிலுள்ள குட்டீஸுக்கு அலுக்காத உணவு நூடுல்ஸ். சமைப்பவர்களுக்கு வேண்டுமானால் அலுத்துப்போகுமே தவிர, சாப்பிடும் குழந்தைகளுக்குக் கொஞ்சமும் அலுப்பதே இல்லை நூடுல்ஸ்.
நூடுல்ஸ் என்றால் அவசர உணவாக இரண்டே நிமிடங்களில் செய்து கொடுத்துவிட்டு வேலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? கொஞ்சம் மெனக்கெட்டால் அதையே பார்ட்டி உணவு போல பிரமாதமாக மாற்றலாம். குட்டீஸ் மட்டுமன்றி குடும்பத்திலுள்ள அனைவரும் ருசிக்கலாம். இந்த வார வீக் எண்டுக்கு விதம் விதமாகச் செய்து சாப்பிட வித்தியாச நூடுல்ஸ் ரெசிப்பீஸ் இதோ...
தேவையானவை:
பேஸ்கெட் செய்ய:
அரைவேக்காடாக வேகவைத்த நூடுல்ஸ் - 2 கப்
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
வெஜ் ஸ்டர் ஃப்ரை செய்ய:
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், முட்டைகோஸ் - தலா அரை கப்.
அரைவேக்காடாக வேகவைத்த பேபி கார்ன் - அரை கப்
சதுரமாக நறுக்கிய கேரட் துண்டுகள் - கால் கப் (அரைவேக்காடாக வேகவிடவும்)
அரைவேக்காடாக வேகவைத்த பீன்ஸ் துண்டுகள் - கால் கப்
செஷ்வான் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
அலங்கரிக்க:
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அரைவேக்காடாக வேகவைத்த நூடுல்ஸைச் சுத்தமான துணியில் 20 நிமிடங்கள் உலரவிடவும். அகலமான பாத்திரத்தில் உலர்ந்த நூடுல்ஸ், சோள மாவு, உப்பு சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். இந்தக் கலவையை நான்கு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஸ்டீல் வடிகட்டியின் உள் பகுதியில் ஒரு பகுதி நூடுல்ஸை வைத்துப் பரப்பவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு வடிகட்டியைச் சூடான எண்ணெயில் வைக்கவும். மற்றொரு கரண்டியால் சூடான எண்ணெயை வடிகட்டியின் உள்ளே இருக்கும் நூடுல்ஸ் மீது படும்படி விடவும். நன்கு வெந்து, பொன்னிறமாக வந்ததும் வெளியே எடுக்கவும். வடிகட்டியில் இருந்து கூடையை நிதானமாக எடுக்கவும். இதேபோல மீதமுள்ள நூடுல்ஸையும் கூடைகளாகப் பொரித்தெடுக்கவும். கூடைகளை எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும்.
அகலமான கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில்வைத்து, சில விநாடிகள் வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு குடமிளகாய், முட்டைகோஸ் சேர்த்து ஒன்று அல்லது 2 நிமிடங்கள் வதக்கவும். கேரட், பீன்ஸ், பேபி கார்ன் சேர்த்து ஒன்று அல்லது 2 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் செஷ்வான் சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். இதை நான்கு சம பாகங்களாகப் பிரித்து, நூடுல்ஸ் கூடையில் வைக்கவும். மேலே வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்
தேவையானவை:
கிரிஸ்பி நூடுல்ஸ் செய்ய:
ரைஸ் நூடுல்ஸ் - ஒன்றரை கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
வெஜ் டாப்பிங் செய்ய:
சிவப்பு முட்டைகோஸ் துருவல் - கால் கப்
முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப்
ஆய்ந்த புரொக்கோலி பூக்கள் - அரை கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
சாஸ் செய்ய:
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
புளி விழுது - ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
அலங்கரிக்க:
வறுத்த வேர்க்கடலை (ஒன்றிரண்டாகப் பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன்.
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் (வெங்காயத்தையும் சேர்த்து நறுக்கவும்).
செய்முறை:
புரொக்கோலி பூக்களை வெந்நீரில் போட்டு எடுத்து, தண்ணீரில் அலசி எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, ரைஸ் நூடுல்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, லேசான பழுப்பு நிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். அதை எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும்.
அகலமான கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் முட்டைகோஸ், பச்சைப் பயறு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு புரொக்கோலி, உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். கடாயில் சாஸ் செய்யக் கொடுத்துள்ள பொருள்களுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து 4 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு இறக்கவும் (நடுநடுவே கிளறிவிடவும்). பரிமாறும் தட்டில் பாதியளவு நூடுல்ஸைப் பரப்பவும். அதன் மீது பாதியளவு வெஜ் கலவையைப் பரப்பவும். மேலே பாதியளவு வேர்க்கடலை, வெங்காயத்தாள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இன்னொரு தட்டிலும் இதேபோல் செய்துகொள்ளவும்.
தேவையானவை:
நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (டேஸ்ட் மேக்கருடன் கூடியது)
தோசை மாவு - ஒரு கப்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செஷ்வான் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
Also Read: டிரை ஃப்ரூட் சிக்கி | டிரை ஃப்ரூட் குக்கீஸ் | டிரை ஃப்ரூட் சாக்லேட் ப்ரவுனி - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!
செய்முறை:
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் நூடுல்ஸ் சேர்த்து ஒன்றரை நிமிடம் வேகவிடவும். பிறகு, நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள மசாலாவை (டேஸ்ட் மேக்கர்) சேர்த்து, நூடுல்ஸ் நீரை உறிஞ்சிக்கொள்ளும் வரை கிளறி இறக்கி, ஒரு பவுலுக்கு மாற்றவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, மேலே சிறிதளவு வெண்ணெயைப் பரப்பவும். அதன் மீது செஷ்வான் சாஸ் தடவி, நடுவே வேகவைத்த நூடுல்ஸை வைக்கவும். தோசையை மடித்து எடுத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (டேஸ்ட் மேக்கருடன் கூடியது)
கேரட், குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கடலை மாவு - அரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
Also Read: இந்தோ மசாலா பாஸ்தா | பாஸ்தா கெட்டிக் குழம்பு | பாஸ்தா சாலட் - பாஸ்தா ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!
செய்முறை:
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நூடுல்ஸை மட்டும் வேகவிட்டு இறக்கி வடிகட்டவும். அகலமான பவுலில் கேரட், குடமிளகாய், கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, உப்பு, நூடுல்ஸ் மசாலா (டேஸ்ட் மேக்கர்) சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வடிகட்டிய நூடுல்ஸ் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).
வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். நூடுல்ஸ் கலவையை ஸ்பூனில் எடுத்து மெதுவாக பக்கோடாக்கள் போல் செய்து கவனத்துடன் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பக்கோடாக்களைச் சுத்தமான கிச்சன் டவலில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/recipes/veg-noodles-noodles-dosai-noodles-pakkoda-noodles-special-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக