மத்திய மண்டலத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படுவதாகவும், அதுசம்பந்தமாக புலன் விசாரணை நடத்திவருவதாக மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Also Read: கரூர்: பறிபோன ஆசிரியர் வேலை; அதிக மன உளைச்சல்! - பெற்ற தாயைக் கொலை செய்த பி.ஹெச்டி படித்த மகன்
திருச்சியை தலைமையிடமாக கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய மத்திய மண்டல காவல் துறைத் தலைவராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாசி பகுதியில் வேலைவாய்ப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில், போதை விழிப்புணர்வு, போக்சோ, சைபர் கிரைம் விழிப்புணர்வு, குழந்தை திருமண சட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், கரூர் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இணைய வழி குற்றச்செயல்களில் பாதிக்கப்படும்போது குற்றங்களில் இருந்து பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பாதுகாக்கும் பொருட்டு, ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் போலீஸ் சைபர் கிளப் அமைப்பு துவக்க விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கரூர் வெள்ளியனை அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் காலேஜ் லெவல் போலீஸ் சைபர் கிளப் அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் மாணவர்களிடையே கலந்துரையாடலை மேற்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்,
"குட்கா மற்றும் போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய நேரடியாக வணிகர்கள் சங்கங்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும். மத்திய மண்டலத்தில் இதுவரை அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டு வந்த குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமான குட்கா விற்பனை தடுக்கப்படும்" என தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/crime/trichy-ig-balakrishnan-press-meet-regarding-gudka-ban
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக