Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

லட்சத்தைக் கடந்த சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை! - தக்கவைப்பது எப்படி?

கடந்தாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் மட்டும் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும், கிட்டத்தட்ட 3,000 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள்

சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளி வகுப்பறைகளை ஸ்மார்ட் கிளாஸாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள், குடிநீர் வசதி மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாது, இந்த பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பல்வேறு கட்டமைப்புகளை அதிகரித்த போதிலும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்தே காணப்பட்டது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் 1.50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கக் கட்டமைப்பு இருந்த போதிலும், 80-90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். இந்த நிலையில், இந்த கல்வியாண்டில் தங்களின் பிள்ளைகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கப் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்கள். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 14-ம் தேதி துவங்கியது. துவங்கிய ஒரே வாரத்திலேயே 7,000-க்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. கொரோனா பாதிப்பு பலதரப்பு மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வழங்குவது இன்னொரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் மாணவர் சேர்க்கை : 2019-2020 கல்வியாண்டில் 83,098 2020-2021 கல்வியாண்டில் 90,394 2021-2022 கல்வியாண்டில் 1,02,605

சென்னை மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிட்டு வருகிறார். அதோடு, இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பணியிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாது, அவர்கள் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி பள்ளியின் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த அனைத்தும் தான் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததற்குக் காரணமாக அமைந்தது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சி பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் தான் மாணவர்களின் சேர்க்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) டி.சினேகாவிடம் பேசினேன். ``சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 2011-ம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை 1,00,320 ஆகா உயர்ந்தது. அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 88,000 முதல் 95,000 வரை என்ற நிலையில் தான் இருந்து வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2021-22-ம் கல்வியாண்டில் மட்டும் 27,311 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதில் 19,000-க்கும் அதிகமான மாணவர்கள் தனியார்ப் பள்ளியிலிருந்து வந்தவர்கள் தான்'' என்றார்

சென்னை மாநகராட்சி

தொடர்ந்து பேசியவர், ``நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையானது 1,02,605 ஆக உள்ளது(22.07.2021-நிலவரப்படி). மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் சேர்க்கை அந்தந்த பள்ளிகள் தோறும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பள்ளிகளை எண்ணிக்கையை தாண்டி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அந்த பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும்காலங்களில் மாநகராட்சி பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Also Read: "எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தாலும் சீட் கிடைப்பதில்லை!"- அட்மிஷனில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி!

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கிறது. இந்த மாணவர்களை அரசுப் பள்ளியில் தக்கவைக்க அரசு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினேன். ``ஒரு மாணவருக்குச் சிறந்த கல்வியை அரசைத் தவிர வேறு யாரால் கொடுத்திட முடியும். அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் இருப்பதை அரசு செய்ய வேண்டும். இந்த வசதிகளைச் செய்வதற்கு அரசிடம் பணம் இல்லையா என்ன? அதுமட்டுமில்லாது, முக்கியமாக ஒவ்வொரு வகுப்பிற்கு, பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் இருப்பதையும் அரசு உறுதிசெய்யவேண்டும். தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வியை அரசால் கொடுக்க முடியும் என்று நம்பி பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துவருகிறார்கள். அந்த குழந்தைகளுக்குச் சரியான கல்வியைத் தருவது தான் இந்த அரசின் கடமை" என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

கொரோனா ஏற்படுத்திய நிலை காரணமோ, அவர்கள் சூழல் காரணமோ, அரசின் நடவடிக்கைகள் காரணமோ.. எந்த காரணமாக இருந்தாலும், பெற்றோர்கள் அரசை நம்பி தான் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். அந்த பிள்ளைகளுக்கு நியாயமான கல்வியைக் கொடுத்து அரசுப் பள்ளிகளிலேயே தக்கவைத்துக் கொள்ளவேண்டியது மட்டுமில்லாது, வரும் கல்வியாண்டில் இன்னும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அரசின் பொறுப்பு. அதை இந்த அரசு சரியாகச் செய்யவேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/education/number-of-new-admissions-in-chennai-corporation-school-students-exceeding-1-lakh-how-to-retain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக