கொரோனா முதல் அலை உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இரண்டாம் அலையின்போது யாரும் நினைத்துக்கூட பார்த்திராத அளவுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்ததற்கு டெல்டா வகை வைரஸ் பரவலே முக்கியக் காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறினர். முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த டெல்டா வகை வைரஸ், உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை தெரிவித்திருந்தது.
இந்த இரண்டாம் அலை தாக்கத்தின்போது டெல்லி, மகாராஷ்டிரா போன்ற சில முக்கிய மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், சாலைகளில் ஆம்புலன்ஸுகள் அணிவகுத்து நின்றதையும், ஆக்சிஜன் கிடைக்காமல் மருத்துவமனை வாசலில் மக்கள் இறந்ததையும் நாம் அனைவருமே தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். அதுமட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்ற மாநிலங்களிடமிருந்து ஆக்சிஜன் வாங்கிய நிலை ஏற்பட்டிருந்தது. பல்வேறு உலக நாடுகளிடமிருந்து ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களெல்லாம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிகழ்வுகள் அனைத்துமே நடந்தது பல வருடங்களுக்கு முன்பு அல்ல, இரண்டு மாதங்களுக்கு முன்புதான்.
தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வியெழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், ``கொரோனா இரண்டாம் அலையின்போது இந்தியாவில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை" என்று பதிலளித்தார். மேலும், "இந்தத் தகவல்கள் அனைத்துமே மாநில அரசு எங்களுக்கு வழங்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் கூறப்பட்டுள்ளன" என்றும் கூறினார்.
மே மாதம் 8-ம் தேதி மட்டும் 26 மாநிலங்களுக்கு 10,250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிரித்து அனுப்பப்பட்டது. அன்று ஆக்சிஜன் மிக அதிகமாக இருந்தது - சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார்
தொடர்ந்து பேசியவர், ``மத்திய அரசு கொரோனா மரணங்களைக் கணக்கீடு செய்வதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. இந்தியாவில் முதல் அலையின்போது, 3,095 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜன் தேவை, இரண்டாம் அலையின் தாக்கத்தின்போது 9,000 மெட்ரிக் டன் வரை அதிகரித்தது. மேலும், இந்தியாவின் 5,700 மெட்ரிக் டன்னாக இருந்த ஒரு நாள் ஆக்சிஜன் உற்பத்தி அளவு 9,690 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் அனைத்துமே பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட்டது" என்று பேசினார்.
சுகாதாரத்துறை இணை அமைச்சரைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார். ``மாநிலங்களுக்கு கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்ட எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மாநில அரசுகள் அனுப்பிய புள்ளிவிவரங்கள்தான் எங்களிடத்தில் உள்ளன. மாநில அரசு வழங்கிய புள்ளிவிவரங்களைப் பதிவு செய்வதுதான் எங்கள் பணி. அப்படி அவர்கள் வழங்கிய புள்ளிவிவரங்களில் அடிப்படையில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை '' என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த பதிலுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மறுப்பு தெரிவித்துள்ளார். ``டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. இந்த நிலைமையைத் தொடர்ந்து மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்துவந்தது. டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய ஒரு தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய அரசும் இணைந்துகொண்டது. அதன் பின்னர் காரணங்கள் அப்படியே மூடி மறைக்கப்பட்டன. மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரத்தை முழுவதுமாக கையிலெடுத்துக்கொண்டு இப்போது மாநிலங்களைக் குறை கூறுவது நியாயம் கிடையாது" என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாரின் இந்த பதிலுக்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எத்தனை பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தார்கள் என்பதைக் கண்டோம். அமைச்சர் சபையைத் தவறாக வழிநடத்தியுள்ளார். அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காரணம், தவறான தகவல்கள் மூலம், அவர் சபையைத் தவறாக வழிநடத்தியுள்ளார். இந்த அறிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று பேசினார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணங்கள் நிகழவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதை உறுதிசெய்து, மருத்துவர்கள் குழு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியது - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட மரணம் குறித்து எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``இந்தியா முழுவதும் எங்களால் கருத்து சொல்ல முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒருவர்கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்பது 100 சதவிகிதம் உண்மை. பெரிய அளவிலான தட்டுப்பாடு இருந்தது. மே மாதம் 7-ம் தேதி நாங்கள் பொறுப்புக்கு வரும்போது, 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு இருந்தது. அன்றைக்கு தொற்றின் எண்ணிக்கை 25,465. அடுத்த நான்கைந்து நாள்களிலேயே தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து மே 21-ம் தேதி 36,187 என்கிற அளவில் சென்றது. அன்றைய நிலையில் ஆக்சிஜனின் தேவை என்பது 500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகம். தமிழக முதல்வரின் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
Also Read: இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுகின்றனவா?!
இது தொடர்பாக, சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர், நம்முடன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்: ``கடந்த ஒரு வருடமாக நான் கொரோனா பணியில்தான் இருக்கிறேன். எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும் சென்னையிலுள்ள பெரிய, பழைமையான அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் அந்த மருத்துவமனையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் ஆக்சிஜன் குழாயில் தடை ஏற்பட்ட காரணத்தால் இருவர் உயிரிழந்தனர். மருத்துவமனை நிர்வாகிகளும் அந்த மரணத்துக்கு உடல்நல பிரச்னைதான் காரணம் என்று பச்சையாகப் பொய் சொன்னார்கள். சென்னையில் மட்டும்தானா... செங்கல்பட்டில் ஒரே இரவில் 11 பேர் உயிரிழந்தனர். வேலூரில் ஏழு பேர் உயிரிழந்தனர். எப்படி அடுத்தடுத்து இத்தனை சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தன?" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``இந்த அனைத்து மரணங்களுமே பல்வேறு மருத்துவக் காரணங்கள் கூறி மூடி மறைக்கப்பட்டன. மருத்துவத்துறையில் இறப்புக்குப் பல்வேறு காரணங்களைப் பயன்படுத்த முடியும் என்கிற பெரிய ஓட்டையைப் பயன்படுத்தி நடந்த சம்பவத்தை அப்படியே மாற்றிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. நான் பணியாற்றும் இந்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் வாசலிலேயே உயிரிழந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும், ஆனால் எந்த அளவுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். நிமிடத்துக்கு 60 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் ஒருவருக்கும் 20 லிட்டர் ஆக்சிஜன் வழங்கினால் அது எப்படி அவருக்குப் போதும்... ஆக்ஸிஜன் அளவு குறைந்து இறக்க வாய்ப்பிருக்கும்தானே? பல இடங்களில் அதுதான் நடந்தது. அப்படியானால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்தார்கள் என்பது உண்மை தானே... ஆனால், அவர்கள் அனைவருமே வேறு காரணங்களால் இறந்தார்கள் என்றுதான் கூறப்பட்டது. இப்படிக் காரணங்களை மாற்றி மாற்றி எழுதினால், யாரும் இறக்கவில்லை என்றுதான் புள்ளிவிவரம் இருக்கும்" என்று பேசும்போது அவரின் வார்த்தையில் ஒரு கோபமும் வலியும் இருந்ததை நம்மால் உணர முடிந்தது.
தமிழகத்தில் எத்தனையோ நபர்கள் ஆக்சிஜன் தேடி அலைவதையும், மருத்துவமனை வாசலில் உயிரிழந்ததைக் கண்கூடாகப் பார்த்தோம். அவர்களெல்லாம் எப்படி உயிரிழந்தார்கள்? கர்நாடகா சாமராஜநகரில் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்ததாக அந்த மாநில அதிகாரிகளே தெரிவித்திருந்தனர். இப்படி இந்தியா முழுவதும் எத்தனையோ செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தன. அப்படியானால் அவர்களெல்லாம் இறந்தது எப்படி என்ற கேள்விக்கு என்றாவது ஒருநாள் விடை கிடைத்தே தீரும்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-deaths-in-india-is-the-central-government-hiding-the-real-statistic
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக