தஞ்சாவூர் நகரப்பகுதியில் போலீஸ் நடத்திய சோதனையில் மசாஜ் சென்டர், வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பாலியல் தொழில் நடத்திவந்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதுடன், 11 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஹைடெக் முறையில் பாலியல் தொழில் செய்த வழக்கில் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தம்பதி மீண்டும் கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாக, போலீஸ் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு தொடர் புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து நகரத்திலுள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலுமுள்ள போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட எஸ்.பி உத்தரவிட்டார்.
இதற்கிடையே தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், நவரசக்கிளி என்ற மசாஜ் சென்டர் செயல்பட்டுவந்தது. அதில் மசாஜ் செய்வதாகக் கூறி இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய சோதனையில், பாலியல் தொழில் நடத்திய சென்னையைச் சேர்ந்த முகமது முஸ்தபா (40), ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்( 30) ஆகிய இரண்டு பேரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை, கோயம்புத்துார், ஈரோடு ஆகிய பகுதிகளிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகேயுள்ள டீக்கடை ஒன்றில், டீக் கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் பேசி பாலியல் தொழில் செய்துவந்துள்ளனர். டீக்கடையில் உள்ள மாடியில் நான்கு இளம்பெண்களை வைத்து, இதை நடத்தியதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் பிரபு (33), அவரின் நண்பர்கள் கார்த்திக், ஜெயபால் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தனர். மேலும், மாடியிலிருந்த நான்கு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
மற்றோர் இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, போலீஸ் அதிரடி சோதனை நடத்தியதில் செந்தில்குமார் (56), அவரின் மனைவி ராஜம் (50), கணேசன் (58) ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இரண்டு இளம்பெண்களை வைத்து ஹைடெக் முறையில் மொபைல் மூலம் வாடிக்கையாளர்களை வரவைத்து பாலியல் தொழில் நடத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதில் செந்தில்குமார், ராஜம் இருவரும் பாலியல் தொழிலில் பல பெண்களை ஈடுபடுத்தியாக, கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த அவர்கள், மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்து போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர்.
Also Read: `ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்'- திருச்சியில் கொடிகட்டிப் பறக்கும் பணப்பறிப்பு!
இது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். ``கடந்த ஆண்டு வட மாநில இளம்பெண் ஒருவர் உடலில் காயங்களுடன் சாலையோரத்தில் மீட்கப்பட்டார். அவரை மீட்டு போலீஸ் நடத்திய விசாரணையில், செந்தில்குமார்-ராஜம் தம்பதியர் வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்தப் பெண் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் அதிரடியாக விசாரணை மேற்கொண்டதில் அந்தத் தம்பதி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்த சொகுசு கார்கள், பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஓரளவுக்கு பாலியல் தொழில்கள் தஞ்சாவூரில் குறைந்திருந்தன. அவர்கள் மீது வலுவான வழக்குகள் பதிந்து, தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க போலீஸ் தவறியதால், வெளியே வந்த அவர்கள் மீண்டும் பாலியல் தொழில் செய்துள்ளனர். இப்போது மீண்டும் போலீஸ் சோதனை நடத்தி பலரைக் கைதுசெய்திருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
போலீஸ் தரப்பில் பேசியபோது, ``பாலியல் தொழிலில் ஈடுபட்ட எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 11 பெண்களைக் காப்பாகத்தில் ஒப்படைத்திருக்கிறோம்” என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/in-tanjore-police-arrested-8-persons-in-brothel-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக