Covid Questions: கோவிட் காலத்தில் அபார்ஷன் செய்துகொள்ளலாமா?
- குமுதவள்ளி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
``கொரோனா காலத்தில் அவசியமென்றால் அபார்ஷன் சிகிச்சையை மேற்கொள்ளலாம். 'மெடிக்கல் அபார்ஷன்', 'சர்ஜிகல் அபார்ஷன்' என இதில் இரண்டு வகை உண்டு. 9 வாரங்களுக்குக் குறைவான கர்ப்பம் என்றால் மாத்திரைகள் மூலம் கருக்கலைப்பு செய்யப்படும். இது மெடிக்கல் அபார்ஷன் எனப்படும். 9 வாரங்களுக்கு மேலான கரு என்றால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு மேற்கொள்ளப்படுகிற சர்ஜிகல் அபார்ஷன் தேவைப்படும்.
அபார்ஷன் செய்துகொள்வது என முடிவெடுத்துவிட்டால் நீங்கள் முதலில் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் டெலி கன்சல்ட்டேஷனில் ஆலோசனை பெறலாம். கருக்கலைப்புக்கு முன் ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். சில நேரம் கருக்குழாய்களில் உருவாகும் கர்ப்பமாக இருந்து அதைக் கலைத்தால் வேறு பிரச்னைகள் வரக்கூடும் என்பதால்தான் முதலில் ஸ்கேன் பார்த்துவிட்டு அபார்ஷன் செய்யப்படுகிறது. உங்கள் உடல்நிலை சீராக இருக்கிறதா என்பதையும் மருத்துவர் உறுதிப்படுத்துவார்.
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்ட பின்பு எத்தனை நாள்கள் கழித்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்?
கருக்கலைப்பு விஷயத்தைப் பொறுத்தவரை சுயமருத்துவம் வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவப் பரிந்துரை இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக பல கடைகளில் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையின்றி இப்படி சுய மருத்துவம் மேற்கொள்வதால் உருவாகும் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு அதீத ரத்தப்போக்கு இருக்கலாம். கருக்குழாயில் கர்ப்பம் உருவானது தெரியாமல் அதை அபார்ஷன் செய்வதால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
கூடியவரையில் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது. தாமதித்தால் மாத்திரை மூலமாக எளிதில் செய்யக்கூடிய அபார்ஷன், சிக்கலாக மாறும். மெடிக்கல் அபார்ஷன் மேற்கொள்வோர், 15 நாள்களுக்குப் பிறகு ரத்தப்போக்கெல்லாம் முற்றிலும் நின்ற பிறகு மறுபடி ஒரு ஸ்கேன் செய்து பார்த்து கர்ப்பப்பை ஆரோக்கியமாக, சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சிலருக்கு கரு முழுமையாக வெளியேறாதநிலை இருக்கலாம். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை.
கோவிட் கால விதிமுறைகளைப் பின்பற்றி அபார்ஷன் சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்ல பயந்துகொண்டோ, மருத்துவர்கள் பிசியாக இருப்பதாலோ நிறைய பேர், போலி நபர்களிடம் கருக்கலைப்பு செய்துகொள்வது அதிகரித்திருக்கிறது.
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொள்வதால் குழந்தையின்மை பிரச்னை வரும் என்பது உண்மையா?
குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகம் நடக்கிறது. அது மிக மிக ஆபத்தானது என்பதால் சரியான மருத்துவரிடம் முறையான ஆலோசனையோடு அபார்ஷன் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
லாக்டௌன் காலத்தில் கருத்தடை சாதனங்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதனால் பலரும் தேவையற்ற கர்ப்பங்களைக் கலைக்க அபார்ஷனை நாடுகிறார்கள். இதைத் தவிர்க்க பாதுகாப்பான உறவுமுறையைப் பின்பற்றுங்கள்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-women-undergo-abortion-in-this-pandemic-situation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக