Ad

வியாழன், 24 ஜூன், 2021

புத்தம் புது காலை : 'குலேபகாவலி' கதையும், ஓர் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகந்தி மலரும்!

இன்று முதலில் ஒரு கதையைப் படித்துவிட்டு, அதன்பிறகு விஷயத்துக்குப் போவோமா...


''அந்த நாட்டு மன்னருக்கு திடீரென்று பார்வை பறி போய்விடுகிறது. பார்வையிழந்த அந்த மன்னருக்கு மீண்டும் பார்வை கிடைக்க தன்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறான் மாவீரன் ஏதன். மலைகள், கடல்கள் தாண்டி இருக்கும் சாகராஸாத் நாட்டின் இளவரசியின் பாதுகாப்பிலிருக்கும் அந்த விசேஷப் பூவை பறித்துக்கொண்டு வந்தால் மன்னருக்கு பார்வை திரும்பிவிடும் என்பதால் உடனடியாகப் புறப்படுகிறான் ஏதன்.


வழியெங்கும் ஏற்பட்ட சோதனைகள், மந்திர தந்திரங்கள், சூழ்ச்சிகளையெல்லாம் வென்று, இறுதியில் அந்த அரிதான பகாவலிப் பூவைப் பறித்து, மன்னரின் பார்வையையும் மீட்கிறான் மாவீரன் ஏதன். தனது பார்வையைத் திரும்பச்செய்தது முன்னர் சிறுவயதில் தொலைந்துபோன தனது மகன்தான் என்பதை உணர்ந்த மன்னர், ஏதனையே நாட்டின் அடுத்த அரசனாக முடிசூட்டுகிறார். மன்னனான பின்னர் ஏதன், சாகராஸாத் இளவரசியை மணமுடித்து நாட்டில் நல்லாட்சி புரிந்தார்'' இதுதான் கதை.

'The Legend of Bakawali' என்ற இந்த பெர்சியக் கதை, 1001 அரேபிய இரவுகளில் இடம்பெற்றுள்ள கதைகளில் ஒன்று என்பதுடன் அந்தக் காலத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றிருக்கிறது.

நிஷாகந்தி மலர்

தமிழிலேயே எம்ஜிஆர், டிஆர்.ராஜகுமாரி நடித்து, 1955-ம் ஆண்டு வெளிவந்த 'குலேபகாவலி' படத்தின் கதையும் இதுதான். தமிழில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே தெலுங்கில் 'குலேபகாவலி கதை', பஞ்சாபில் 'குல்-ஏ-பகாவலி', குஜராத்தியில் வெளிவந்த மௌனப்படமான 'கோஹினூர்' எனப் பல திரைப்படங்களுக்கும் இதுதான் மூலக்கதை.


அதெல்லாம் சரி... காடு, மலை, கடலெல்லாம் தாண்டி பறித்து வந்த பகாவலிப்பூ நமது ஊர்களிலேயே சாதாரணமாகப் பூக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்... இன்றும் நம்மில் பலர் வீட்டுத் தொட்டில்களில் வளர்க்கும் வாஸ்துசெடிகளில் ஒன்றான பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி என்று சொல்கிறோமே... அதுதான் இந்த குலேபகாவலி.

இதுமட்டுமல்ல, இன்னும் அனந்தசயனம், கடப்புள், பெத்லஹேம் லில்லி, Queen of the Night என ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுறு பெயரால் அழைக்கப்படும் இந்த பகாவலிப்பூவின் தாவரப்பெயர் Epiphyllum oxypetalum. தோன்றிய இடம் மெக்சிக்கோ மற்றும் தென் அமெரிக்கா.

கள்ளிச்செடி வகையைச் சேர்ந்த இச்செடிகளின் தண்டுகளே இலைகள் போல இருப்பதுடன், நீர்த்தன்மை நிறைந்த தடிமனான இந்தத் தண்டுகளின் முடிச்சுகளிலிருந்தே புதிய செடிகள் வளர்கின்றன. இவற்றில் வளரும் இளஞ்சிவப்பு மொட்டுகள் 20 நாட்கள் ஆகுமாம் மலராக மலர.

நிஷாகந்தி

மொட்டாக இருந்து மலராக மாறத்தான் சமயம் எடுக்கின்றது. ஆனால் மலருக்கு ஆயுள் ஓர் இரவுதான். இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் மலரத் துவங்கி, நள்ளிரவில் முழுமையாகப் பூத்து, விடியலில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவைதான் இந்த பிரம்ம கமலப்பூக்கள். அப்படி ஓரிரவில் வாடிவிடும் இந்த வெண்ணிறப்பூக்கள் மிகவும் மென்மையாகவும், மிக்க வாசனையுடனும் இருப்பதால் மட்டுமின்றி, இது வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் (அதாவது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்) மட்டுமே பூக்கும் என்பதால் இவை உலகின் அரிய மற்றும் விலையுர்ந்த பூக்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.


இது வெறும் அழகுக்கான பூ மட்டுமல்ல, இவை பூக்கும் தருணங்களில் நமது வேண்டுதல்களை நிறைவேற்றும் மலர் என்றும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தரும் மலர் என்றும், மனதில் நினைத்ததையெல்லாம் நிறைவேறச் செய்யும் மலர் என்றெல்லாம் நம்பப்படும் இந்த பிரம்ம கமலம் என்ற நிஷாகந்திக்கு உண்மையில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு அழகிய கதையோ அல்லது நம்பிக்கையோ அதனுடன் சேர்ந்தே பயணிக்கிறது.


இந்தியாவில் பிரம்மாவிற்கு உகந்த பூ, பிரம்மனின் நாடிக்கொடி, பிரம்ம கமலம் என்றெல்லாம் பிரம்மனோடு சேர்த்து சொல்லப்படுவது மட்டுமன்றி, ஆதிசேஷன் மீது பாற்கடலில் திருமால் பள்ளிகொண்டிருப்பது போலவே காட்சியளிப்பதால் அனந்தசயனம் என்றும் அழைக்கப்படுகிறது நள்ளிரவில் பூக்கும் இந்த நிஷாகந்தி.

நிஷாகந்தி

இலங்கையில் கடப்புள் மால் (kadapul mal) அதாவது, சொர்க்கத்தின் பூக்கள் என இவை அழைக்கப்படுவதுடன், அங்கே தங்களது பிரியமான கடவுளான புத்தரை வணங்குவதற்காக விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிவந்த நாகர்கள், பிரம்ம கமலப்பூக்களாக உருவெடுத்தனர் என்று இலங்கைப் புராணங்களில் கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல ஸ்ரீபாதம் என்று அழைக்கப்படும் புத்தரின் மலைவாசல் சன்னதியில், மக்கள் கூடும் ஆவணி மாதத்தில் இந்தப் பூக்கள் நிறைந்து மலர்வது மிக அழகிய நிகழ்வாகும்.


ஜப்பானியர்கள் இதனை 'Gekka Bijin' அதாவது, 'நிலவின் கீழ் பூத்திருக்கும் அழகு' என்று பெருமைப்படுத்த, சீனா, வியட்நாம், தைவான், இந்தோனேசியா என ஒவ்வொரு நாடும், இரவில் பூக்கும் இப்பூக்களை அதிர்ஷ்டம், வெற்றி, அமைதி, காதல் ஆகியவற்றுடன் இணைத்து தங்களது நம்பிக்கைகளையும், பூக்களையும் ஒன்றாக வளர்க்கின்றனர்.


அதேசமயம், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பெத்லஹேமின் நட்சத்திரம் என அழைக்கப்படும் நிஷாகந்தி, குழந்தை இயேசு பிறந்தபோது அவரைக்காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரம் தான் நிஷாகந்தியானது என்று சொல்லப்படுகிறது.


உண்மையில் இவையெல்லாம் நம்பிக்கைகள்தான் என்றாலும் 'குலேபகாவலி' படத்தில் கூறப்பட்டது போல பார்வைக்கு உதவுவதுடன் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது எனவும் இயற்கை மருத்துவம் கூறுகிறது.


ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள் தீக்காயங்களுக்கும், தோலில் ஏற்படும் மற்ற காயங்களுக்கும் பயன்படுத்தப்பட, இதன் பூக்கள் வயிற்றுவலி மற்றும் சிறுநீர்த்தொற்றுக்கு பயன்படுகிறது. வியட்நாமில் வாடிய மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரசித்தி பெற்ற நிஷாகந்தி சூப், உடல் வலிமைக்கும், ஆண்மை குறைவிற்குமான டானிக்காக பயன்படுத்தப்படுகிறது.


மேலும், இப்பூக்களின் நறுமணம் மனதை மிகவும் அமைதிப்படுத்துவதால், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி ஆகியவற்றைக் குறைக்க உதவுவதால், தியான வகுப்புகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நிஷாகந்தியின் நறுமணத்திற்கு காரணமான அதில் நிறைந்துள்ள 'Benzyl salicylate'-ஐ பயன்படுத்தி, Mystic Queen of Night போன்ற பிரபலமான வாசனை திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன.

என் வீட்டுத் தோட்டத்தில்!

நம்மைச் சுற்றி ஆயிரம் பூக்கள் பூத்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கின்ற இந்த அரிதான, அழகான பூக்கள் நமக்கு எடுத்துரைக்கும் வாழ்க்கைப் பாடம் ஒன்றுதான். ஓரிரவே வாழ்ந்தாலும் ஒப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தால் உங்கள் வருகைக்கு இந்த உலகமே காத்திருக்கும்!


''எல்லாம் சரி... எதற்கு நிஷாகந்தியைப் பற்றி இவ்வளவு எழுதியுள்ளீர்கள்'' என்று கேட்பவர்களுக்கான பதில் இது.

இன்று என் வீட்டுத் தோட்டத்தில், மொட்டாக மலர்ந்திருக்கிறாள் நிஷாகந்தி!



source https://www.vikatan.com/news/environment/stories-behind-bethlehem-lily-nishagandhi-flower

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக