Ad

வெள்ளி, 25 ஜூன், 2021

வேலூர்: சிரிஞ்சுகளில் நிரப்பி சாக்லேட் விற்பனை! - வியாபாரிகளை எச்சரித்த அதிகாரிகள்

வேலூர் மாநகரத்திலுள்ள கடைகளில், ஊசி போடுவதற்காக பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளில், சாக்லேட் க்ரீம் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இந்த சிரிஞ்சுகள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்திரசேனா தலைமையிலான அலுவலர்கள் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறைப் பகுதிகளிலுள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள்

காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவிலுள்ள ஒரு பெட்டிக்கடையில் சிரிஞ்சியில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வகையான சாக்லேட்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என பெட்டிக்கடை வியாபாரியிடம் விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலூர் மார்க்கெட் பகுதியிலுள்ள மொத்த விற்பனைக் கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லாங்கு பஜார், மண்டித்தெரு, மார்க்கெட் பகுதியிலுள்ள மொத்த விற்பனைக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டுதான் சிரிஞ்சு சாக்லேட்டுகள் விற்பனைக்கு வந்ததாகவும், தற்போது இந்த வகையான சாக்லேட்டுகள் விற்பனைக்கு வருவதில்லை எனவும் வியாபாரிகள் கூறினர். அவர்களிடம், இதுபோன்ற அபாயகரமான திண்பண்டங்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

சிரிஞ்சு சாக்லேட்டுகளை பார்வையிடும் மாநகராட்சி அதிகாரிகள்

தொடர்ந்து, அனைத்து மொத்த விற்பனைக் கடைகளிலும் சோதனை நடத்தினர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இதுபோன்ற சாக்லேட்டுகள் வேலூரில் தயாரிக்கப்படுவதில்லை. சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து விற்பனைக்கு வருகின்றன. சாக்லேட் க்ரீம் அடைத்து வைத்திருக்கக்கூடிய சிரிஞ்சுகள் மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடியவை இல்லை. அவற்றில் அளவீடுகள், ஊசி பொருத்துவதற்கான முனைகளும் கிடையாது. இந்த சிரிஞ்சிகள் சாக்லேட் வைப்பதற்காக மட்டும் தனியாக தயாரிக்கப்பட்டவைதான். எனினும், இத்தகைய சாக்லேட்டுகளை விற்பனைக்குக் கொண்டுவரக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-vellore-sales-of-chocolates-in-injections-warning-to-traders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக