`ஒருவர் எப்ப பேசுவாங்க என்பதற்கும் எப்போ பேசி முடிப்பாங்க என்பதற்கும் இடைப்பட்ட காலமே காதல் என்றறிக’
காதல் பற்றி எல்லோருக்கும் ஒரு வரையறை இருக்கும். ஜாலியாக யாரோ சொன்ன ஒன்றுதான் இது. ரொம்ப யோசித்தால் இது சரியென்றும் தோன்றும். அதே யோசனை `எவ்ளோ கேனத்தனமா சொல்லிருக்கான்' என்றும் சொல்லும். இதை விட்டுவிடுவோம். எந்தக் காரணத்தில் பிரிந்தாலும் பிரேக்அப் சுமைதான். நாமே விருப்பப்பட்டு கேட்டாலும், கேட்கிறாரே எனக் கொடுத்தாலும் பிரேக்அப் அப்படித்தான். நடந்ததைப் பற்றி யோசிக்காமல், பிரேக்அப்பை எப்படிக் கையாள்வது எனப் பார்க்கலாம். பிரேக்அப்பிலிருந்து முழுவதுமாக வெளிவருவது அவசியம். அப்போதுதான் இன்னொரு காதல் மலரும் வாய்ப்பு கைகூடும். இல்லையா?
பிரேக்அப் விஷயத்தை இரண்டாகப் பார்க்கலாம். வேண்டாம் என முடிவு செய்து பிரேக்அப் செய்தவர்; எதிர்பாராத தருணத்தில் பார்ட்னரின் விருப்பத்தால் பிரேக்அப் ஆனவர். இருவரின் மனநிலையும் வெவ்வேறு. ஆனால், இருவருக்குமே பிரேக்அப் காலம் சுமையானதுதான். பிரேக்அப்க்குப் பின்னான காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை எவையென்று பார்க்கலாம். இவற்றில் சில பிரேக்அப் வேண்டும் என்றவருக்கும், சில விஷயங்கள் இன்னொருவருக்கும், சில விஷயங்கள் இருவருக்குமே பொதுவாக இருக்கக்கூடும். முதலில் செய்யக் கூடாதவை. அதுதான் ரொம்ப முக்கியம் ப்ரோ/சிஸ்.
உங்கள் பிரேக்அப் பற்றி பிறரிடம் விவாதிக்காதீர்கள். குறிப்பாக, இருவரில் யார் மீது தவறென்பதைப் பற்றி பேச வேண்டியதே இல்லை.
செய்யக்கூடாதவை:
பிரேக்அப் செய்தவருக்கு ஒரு நிம்மதி இருக்கும். விடுதலை கிடைத்தது போல உணரக்கூடும். அதே சமயம் குற்றஉணர்வும் இருக்கும். தன் முன்னாள் தோழன்/தோழிக்கு கஷ்டத்தைக் கொடுத்தவிட்டதாகத் தோன்றும். தனக்குத் தோன்றாவிட்டாலும் அதுவரை உடனிருந்த, இருவருக்கும் பொதுவான நண்பர்களில் சிலர் அப்படிச் சொல்லக்கூடும். அவர்களின் கோபத்துக்கும் ஆளாகக்கூடும். அதனாலும் குற்றஉணர்வு வரலாம். இது தேவையற்றது. இப்போது கஷ்டமாக இருந்தாலும் நீண்டக்கால நன்மைக்காகவே பிரேக்அப் செய்திருக்கிறீர்கள். அதனால் குற்றஉணர்வு தேவையற்றது.
அடுத்தது, உங்கள் பிரேக்அப் பற்றிப் பிறரிடம் விவாதிக்காதீர்கள். குறிப்பாக, இருவரில் யார் மீது தவறென்பதைப் பற்றிப் பேச வேண்டியதே இல்லை. பிரேக்அப் செய்ய வேண்டியிருக்கும்போது `ப்ளேம் கேம்’ ஆடாதீர்கள் என்று சொன்னேனில்லையா? அது இப்போதும் பொருந்தும். பழி போடாதீர்கள்.
கடந்த காலத்துக்கு டைம் மிஷினில் ஏறிப் போகாதீர்கள். நடந்தவற்றைப் பற்றி யோசித்து அசை போடாதீர்கள். பிரேக்அப் காலம் என்பது ஒரு வருடம் இருக்கலாம். காரணம், அப்போதுதான் நீங்கள் முதலில் சந்தித்த நாள், காதலைச் சொன்ன நாள், முதல் முத்தம் என எல்லா ஆண்டுவிழாக்களையும் ஒரு முறையாவதுக் கடந்து வருவீர்கள். ஒரு வருடம் கழித்தும் பிரேக்அப் வலியோடு சுற்றினால் அது வீண்.
நீங்களும் உங்கள் பார்ட்னரும் எங்கெல்லாம் செல்வீர்களோ அந்த இடங்களைத் தவிர்க்கலாம். `அவ இங்கதான் பானிபூரி சாப்டுவா’, `அவன் இங்கதான் படம் பார்ப்பான்’ என அங்கு போய் நின்று ஃபீல் செய்வதில் எந்தப் பயனுமில்லை. சத்யமில்லையென்றால் தேவி தியேட்டர். அமேசான் இல்லாவிட்டால் நெட்ஃப்ளிக்ஸ். மாற்றிக்கொள்ளுங்கள்.
தனிமை மட்டும் இந்த நேரத்தில் கூடவே கூடாது. குடும்பமோ, நண்பர்களோ, உறவுகளோ... எப்போதும் கூட யாரேனும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், அதே சமயம் இன்னொரு ரிலேஷன்ஷிப்புக்குக் கூட்டிச் செல்லும் வாய்ப்பிருக்கும் நபர்களிடமிருந்து தள்ளியிருங்கள். முழுமையாக இந்த பிரேக்அப்பிலிருந்து வெளியேறாமல் இன்னொரு ரிலேஷன்ஷிப் என்பது நிறைய பிரச்னைகளைத் தரக்கூடும். பொதுவாக, முந்தைய ரிலேஷன்ஷிப்பில் உங்கள் பார்ட்னர் எப்படி இருந்தது உங்களுக்குப் பிரச்னை ஆனதோ, அதற்கு நேர்மாறாக ஒருவரைக் கண்டால் மனம் தானாக சாயும். உதாரணமாக, தன்னை ஸ்லீவ்லெஸ் போடக்கூடாது என்ற காதலனை வெறுத்தவருக்கு, அதை ரசிக்கும் ஆணைக் கண்டால் பிடித்துப் போகும். குடிக்கவே கூடாது எனச் சொல்லி பிரேக்அப் செய்யப்பட்டவருக்கு `சியர்ஸ்’ சொல்லும் பெண்ணைக் கண்டால் பிடித்துப் போகும். ஆனால், இதை நம்பி ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்தால் அதன் ஆயுளும் குறைவாகவே இருக்கும். இந்த `Rebound relationship’ வேண்டாம். உங்களது பலமிழந்த மனநிலையைப் பயன்படுத்தி `டாக்ஸிக்’ நபர்கள் உங்களை அடைய முயற்சி செய்யலாம். அதற்கும் இடம் தராதீர்கள்.
ஒரு பிரேக்அப் நிகழ்ந்த கொஞ்ச காலத்திலே இன்னொரு ரிலேஷன்ஷிப் என்பது உங்களுக்கே உங்கள் மீது அவநம்பிக்கை தரலாம். அதனால், அந்த ரிலேஷன்ஷிப்பை சீக்ரெட் ஆக வைக்க முயற்சி செய்யலாம். இது உங்கள் புது பார்ட்னர்க்கு பிரச்னையாகலாம்.
எந்த அவசரமும் இல்லை. அதனால், கடந்த ரிலேஷன்ஷிப்பில் உங்கள் தவறு என்ன, பார்ட்னரின் தவறு என்ன, எதைச் சரி செய்திருந்தால் ரிலேஷன்ஷிப்பைக் காப்பாற்றியிருக்கலாம் என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. இவற்றையெல்லாம் பிரேக் அப்புக்கு முன்னால் யோசிக்கலாம். இப்போது தேவையில்லை. அனைத்து பிராசஸிங் ஐடியாக்களையும் மூட்டை கட்டி ஓரமாக வைக்கவும். தேவைப்பட்டால், நடந்தவற்றை வெறும் சம்பவங்களாகப் பார்க்கும் மனம் வாய்க்கும்போது இவற்றைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம்.
முக்கியமாக, `அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல' மாதிரியான பாடல்களை முற்றிலுமாகத் தவிர்க்கவும். உங்களுக்கென பிரத்யேக ப்ளேலிஸ்ட்டை உருவாக்கிக் கொள்ளவும். அதுதான் நமக்கு பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம்.
பிரேக்அப் தரும் கொடூரமான விஷயங்களில் முக்கியமானது நம்பிக்கையைத் தகர்ப்பது. யாரோ ஒருவர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்பதால் உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் நம்பாமல் இருப்பது நல்லதல்ல. நம்பிக்கை மட்டுமல்ல; பிரேக்அப் ஆன ரிலேஷன்ஷிப் தந்த ஹேங்ஓவருடன் யாரையும், எந்தச் சூழலையும் அணுகாதீர்கள்.
உங்களிடம் இருக்கும் ஏதோ சில கெட்ட விஷயங்கள் தான் பிரேக்அப்புக்கான காரணம் என நீங்கள் நினைத்தால் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். உங்கள் பார்ட்னருக்காக இல்லை. உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுவது என்பது உங்களுக்காக் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Also Read: பிரேக்அப் செய்வது என முடிவெடுத்துவிட்டீர்களா? அதை இப்படிச் செய்யுங்கள்! #AllAboutLove - 20
செய்ய வேண்டியவை:
முதலில், நீங்கள் பிரேக்அப் வேண்டுமென கேட்டிருந்தால் அது சரியென்பதை நம்புங்கள். அந்தப் பிரச்னைகளோடு தொடர்ந்திருந்தால் பிரேக்அப் தரும் வலியைவிட அதிகமான வலியை இருவரும் சந்தித்திருக்க வேண்டுமென்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு மனச்சுமை என்றாலும் பரவாயில்லை. குழந்தைகளிடம் சொல்வார்களே… ``நீயேதான விழுந்த… அப்புறம் ஏன் அழற?” குழந்தை அதுவாக விழுந்தாலும், அடிபட்டால் வலிக்கத்தானே செய்யும்? அது போலத்தான்.
உங்களால் முடிந்தால் ஒரு நீண்ட பயணம் செல்லுங்கள். அது இமயமலைக்காக இருக்கலாம். அல்லது கொல்லி மலையாக இருக்கலாம். ஒரு வாரக்காலம் எங்கேனும் பயணம் செய்யுங்கள். பல மனிதர்களைச் சந்தியுங்கள். உங்கள் எனர்ஜியை எல்லாம் இதுவரை ஒருவருக்காக மட்டுமே அதிகம் செலவழித்திருப்பீர்கள். அதைப் பலரோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
பிரேக்அப் நம்மை நார்மலாக இருக்க விடாது. ஒரு நொடி வெடித்துச் சிரிக்கத் தோன்றும்; அடுத்த நொடி வெடிகுண்டை வீசத் தோன்றும். எதுவாக இருந்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். கட்டுப்படுத்தாதீர்கள். இதைப் புரிந்துகொள்ளக்கூடிய ஆட்களுடன் அந்த நேரத்தைச் செலவழியுங்கள்.
அப்படியெல்லாம் யாருமில்லை; இருந்தாலும் பேச விரும்பவில்லை என்பவர்கள் எழுதுங்கள். டைரியோ, ஃபேஸ்புக்கோ மனதில் தோன்றுவதை எழுதுங்கள். தேவைப்பட்டால் ஒரு ஃபேக் ஐடி தொடங்கி அதில் எழுதுங்கள்.
எழுதத் தெரியாதவர்கள் கிளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் சேருங்கள். அங்கே பிரேக்அப் ஆனவர்களுக்கென தனி ரூம்கள் உண்டு. அங்கே சென்று மனதில் தோன்றுவதையெல்லாம் பேசுங்கள். அதே மனநிலையிலிருக்கும் பிறர் பேசுவதையும் கேளுங்கள். கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்.
மாற்றம்தான் பிரேக்அப்புக்கு நல்ல தீர்வு. வீட்டிலிருக்கும் பொருள்களை மாற்றி வையுங்கள். முடிந்தால் வீட்டையே மாற்றுங்கள். உங்கள் ரிலேஷன்ஷிப்பை நினைவுபடுத்தும் அனைத்தையும் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நீண்டகாலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள் தங்களுக்குப் பிடித்த பல விஷயங்களைப் பார்ட்னருக்காகச் செய்யாமல் இருந்திருக்கலாம். உதாரணமாக, சைனஸ் காரணமாக மலைவாசஸ்தலங்களுக்குச் செல்ல உங்கள் பார்ட்னர் தயங்கியிருக்கலாம். அவருக்காக நீங்களும் போகாமல் இருந்திருக்கலாம். பிரேக்அப்புக்குப் பிறகு, அது போன்ற விஷயங்களைச் செய்யுங்கள். இதன் மூலம் அவரை மிஸ் செய்வதும் நடக்காது; உங்களுக்குப் பிடித்த விஷயங்களை நீண்டகாலம் கழித்துச் செய்வதால் புத்துணர்வாய் நீங்களும் உணரலாம்.
பழைய நண்பர்கள் யாருடன் எல்லாம் நீண்டகாலமாகப் பேசாமல் விட்டீர்களோ... அவர்களில் மனதுக்கு நெருக்கமானவர்களைத் தேடிப் போய் பேசுங்கள்.
இந்த நேரத்தில் உங்கள் மீது உங்களுக்கே லவ் வர வேண்டும். அப்படியொரு நிலையில் நீங்கள் இருக்க வேண்டும். ஜிம்முக்குப் போவது, பிடித்த உடைகளை வாங்கி அணிவது, வேலையில் `குட் பாய்' எனப் பெயர் வாங்குவது என உங்கள் எனர்ஜியை அதில் செலவிடுங்கள்.
பிறருக்கு உதவுவது என்பது நம் மனதை அமைதியாக்கும் நல்வழி. நேரமோ, பணமோ, அறிவுரையோ... உங்களால் ஆனதைத் தேவையானவருக்குக் கொடுங்கள். அந்தச் செயலே உங்கள் மனதை ஆற்றுப்படுத்தும். உங்கள் மீது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.
Also Read: `திருக்குறள்' முதல் `தப்பட்' வரை; ரிலேஷன்ஷிப்பில் பிரேக்அப் எப்போது தேவைப்படுகிறது?#AllAboutLove 19
என்ன சொன்னாலும், பிரேக்அப்புக்கு அருமருந்து காலம்தான். அதுதான் உங்களை ஆற்றும்; தேற்றும். முடிவே இல்லாத ஒன்றென இந்த உலகில் ஏதுமில்லை. அது காதலுக்கும் பொருந்தும்; பிரேக்அப்க்கும் பொருந்தும். காதலைப் போல பிரேக்அப்பையும் கொண்டாட்டமாக மாற்றிக்கொள்ளலாம். அது உங்கள் கையில்தான் உள்ளது. அதற்கு நடந்ததை ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும். அது இல்லையேல், பிரேக்அப் உங்களை `Rebel’ ஆக மாற்றிவிடும். அது உங்களை மோசமான மனிதராகத்தான் மாற்றும்.
அர்ஜூன் ரெட்டி படத்தில் பாட்டி சொல்வாரே… `Suffering is very personal. Let him suffer’ அது உண்மைதான். கடந்து வாருங்கள். உங்களுக்காக உலகம் காத்திருக்கிறது.
source https://www.vikatan.com/lifestyle/relationship/what-arjun-reddy-granny-told-about-breakup-is-true-but
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக