Ad

வியாழன், 24 ஜூன், 2021

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின் பாதை ஆய்வாளர்! - சீரமைப்பு பணியின் போது சோகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் காற்று அதிகமாக வீசுவதால், காற்றில் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுகிறது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது. மின் பாதைகளில் விழுந்திருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்ட பிறகே மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான், பல இடங்களில் மின்வாரிய பணியாளர்கள் பகல் இரவு என்று பாராமல் தங்களது உயிரைப் பணயம் வைத்து மின் பாதைகளைச் சீரமைத்து வருகின்றனர். அந்த வகையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையைச் சேர்ந்த மின் பாதை ஆய்வாளர் கருப்பையா, வல்லத்திராக்கோட்டை அருகே கத்தக்குறிச்சியில் பலத்த காற்றால் விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

உயிரைப் பணயம் வைக்கும் மின்வாரிய ஊழியர்களின் பணி

அப்போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கி கருப்பையா தூக்கி அடிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மின் ஊழியர் மின்சாரம் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, ``கருப்பையா டியூட்டின்னு வந்திட்டா, ரொம்ப சின்சியராக இருப்பாரு. வேலையில் இரவு, பகல்னு பார்க்கமாட்டாரு. எந்த நேரமா இருந்தாலும் அந்த வேலையை முடிச்சிட்டு தான் வருவாரு. இன்னைக்கு மின்சாரம் தாக்கியே உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருச்சு. மின்வாரியத்தில் மின் பாதை பழுது நீக்கும் ஊழியராக பணிபுரியும் எல்லாருமே உயிருக்கு ஆபத்தான நிலையில தான் பணிபுரிஞ்சிக்கிட்டு வர்றோம். கஜா புயல் நேரத்துல நமக்கு உதவுகிறதுக்காகப் பக்கத்து மாநிலமான கேரளாவுல இருந்து எல்லாம் மின்வாரிய ஊழியர்கள் வந்திருந்தாங்க.

அவங்க எல்லாருமே உயிரைப் பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் வச்சிருந்தாங்க. அதை பயன்படுத்திக் கொண்டு தான் வேலையே பார்த்தாங்க. தமிழக அரசு மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கணும். இறந்த கருப்பையாவின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்வதோடு, அவரின் குடும்பத்தினரில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/accident/electrical-track-alignment-work-electric-shock-killede-lectrical-track-inspector

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக