Ad

வெள்ளி, 25 ஜூன், 2021

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 23 | 1,300 ஆண்டுப் பழைமை, அஞ்சனாதேவிக்கு சந்நிதி... ஆனையூர் திருக்கோயில்!

கோயிலின் பழைமையை எப்படிக் கணக்கிடுவோம்? அந்தக் கட்டுமானத்தின் பழைமையைக் கொண்டா... அல்லது அங்கு அருள்பாலிக்கும் இறைவன் எழுந்தருளிய காலத்தைக் கணக்கிட்டா... புராண காலத்திலேயே சுயம்புவாக எழுந்தருளிய ஈசனின் திருமேனிகளின் வயதை யார்தான் கண்டுசொல்லமுடியும்... விருட்சங்களின் அடியில் குளக்கரையில் ஆற்றுப்படுகைகளில் என்று இறைவன் எழுந்தருளியிருக்கப் பிற்காலத்தில் அங்கு மக்களும் ஆட்சியாளர்களும் சேர்ந்து கட்டுமானம் எழுப்பியிருப்பார்கள்.

அப்படிப்பட்ட பல ஆயிரம் ஆண்டுப் பழைமைவாய்ந்த ஆலயங்கள் மதுரையில் அநேகம். சில கோயில்கள் இன்று வழிபாடுகள் முறையாக நடைபெற்றுப் பராமரிக்கப்பட்டாலும் மிகுந்த கவனம் பெறாமல் இருக்கும் கோயில்களின் பல. அப்படிப் புராண காலத்தில் எழுந்தருளிய ஈசனின் ஆலயம் ஒன்று மதுரை அருகே இருக்கும் ஆனையூரில் உள்ளது.
சூரியன் தொழும் ஐராவதீஸ்வரர்

துர்வாச முனிவர் இந்திரனுக்கு அம்பிகையின் அருட்பிரசாதமான மாலை ஒன்றைக் கொடுத்தார். அதை இந்திரன் அலட்சியமாக ஐராவதத்தின் மீது வைத்தான். ஐராவதமோ அதை எடுத்துக் கீழே போட்டுத் தன் கால்களால் மிதித்தது. இதைக் கண்ட துர்வாசகர், இந்திரனின் இந்திரப் பதவி நீங்குமாறும் ஐராவதம் தேவலோகம் விட்டு பூலோகம் வந்து காட்டு யானையாக அலையவேண்டும் என்று சாபம் கொடுத்தார். ஐராவதம் பூலோகம் வந்து கற்றாழைக் காடாக இருந்த பகுதியில் சுற்றிவந்தது. அதன் நல்வினையால் அதற்கு அங்கு ஈசன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடத்தைக் கண்டடைந்தது. பின் தினமும் அந்த இறைவனுக்கு பூசைகள் செய்யத் தொடங்கியது. தொடர்ந்து அங்கே வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றதாகப் புராணம் சொல்கிறது.

ஒருநாள் அந்தக் காட்டுவழியாக வந்த மக்கள் சிலர் வெள்ளையானை ஒன்று குளத்தில் இறங்கித் தாமரை மலர்களைப் பறிப்பதையும் பின் அதைத் தன் தும்பிக்கையில் சுமந்து காட்டுக்குள் சென்று வருவதையும் கண்டனர். இந்தச் செய்தியை தம் மன்னனிடம் தெரிவித்தனர் மக்கள். அதை அறிந்த மன்னன் அந்தக் கற்றாழைக் காட்டுக்குள் நுழைந்து என்ன இருக்கிறது என்பதை அறிய உத்தரவிட்டான். அதன்படி வீரர்கள் அந்தக் காட்டை சுத்தம் செய்து உள்நுழைந்தபோது அங்கே சுயம்புவாக லிங்க மூர்த்தம் இருப்பதையும் அதற்குதான் யானை பூஜை செய்ததையும் கண்டறிந்து மன்னனிடம் சொல்லினர். ஐராவதம் தனக்கு சாப விமோசனம் தந்த கருணாமூர்த்தியான அந்த இறைவனை மக்களுக்கு அடையாளம் காட்டிச் செல்லவே மக்களின் கண்களில் பட்டிருக்க வேண்டும் என்று மக்கள் அறிந்துகொண்டு அங்கே வழிபாடுகள் செய்யத் தொடங்கினர்

ஆதியில் இந்தத் தலத்துக்கு, 'திருக்குறுமுல்லூர்' என்றும், சுயம்பு மூர்த்தியான இங்குள்ள மூலவருக்கு, 'ஸ்ரீஅக்னீஸ்வரமுடையார்' என்றும் ‘ஐராவதீஸ்வரர்’ என்பதும் திருநாமம். ஐராவதம் என்னும் யானை வழிபாடு செய்தவூர் என்பதால் ஊருக்கும் ஆனையூர் என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது. பாண்டிய மன்னர்கள், சோழ அரசர்களான ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் நாயக்க அரசர்கள் என்று பலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளதாகக் கல் வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மீனாட்சி அம்பிகை
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் - திருக்கார்த்திகை
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் நந்தி
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மீனாட்சி அம்மன்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
சேகர்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் - அஞ்சனா தேவி
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் இரட்டை பிள்ளையார்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் பைரவர்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் முருகப்பெருமான்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
மேற்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோயில். இதன் தெற்கே குளமும், வடக்கில் கண்மாய் ஒன்றும் அமைந்துள்ளன. கோயிலுக்குள் நுழைகிறோம். முன்மண்டபம் தாண்டியதும் கருவறை வாசலின் இருபுறமும் துவார பாலகர்கள். தவிர, விநாயகர் மற்றும் முருகன். கருவறைக்குள் சுயம்பு லிங்கத் திருமேனியராக திருவருள் புரிகிறார் ஸ்ரீஐராவதீஸ்வரர். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே, அழகே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமீனாட்சியம்மன்.

பரிவார தெய்வங்களாக பைரவர், இரட்டை விநாயகர்கள், சண்டிகேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நந்திதேவர், ஜேஷ்டாதேவி மற்றும் அஞ்சனா தேவி- ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

கௌதம முனிவருக்கும் அகலிகைக்கும் பிறந்தவள் அஞ்சனாதேவி. இவளை, 'கேசரி' என்ற வானர வீரனுக்கு மணம் செய்து வைத்தனர். இல்லறம் இனிதே கழிந்தது. ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் வாய்க்காததால் கவலையுற்றாள் அஞ்சனாதேவி. பராக்கிரமசாலியான மைந்தன் வேண்டும் என்று வேண்டி, கடும் தவத்தில் ஆழந்தாள். தவத்தின் பலனாகவும், வாயுதேவனின் அருளாலும் அஞ்சனாதேவிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டியது. மும்மூர்த்திகளும் அஞ்சனாதேவிக்கு சுகப்பிரசவம் நடக்க ஆசீர்வதித்தனர். அஞ்சனாதேவியை தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தனர். விஸ்வகர்மா சிற்ப சாஸ்திரத்தில் மட்டுமல்ல மருத்துவ சாஸ்திரத்திலும் தேர்ந்தவர்.

பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில் அஞ்சனை வயிற்றில் இருந்த குழந்தையிடம் விஸ்வகர்மா பேசினார்.

''குழந்தாய், உன் தாயாரின் கர்ப்பத்தில் இன்னும் ஏன் சிறைப்பட்டிருக்கிறாய்? பராக்கிரமனாகத் திகழப் போகும் நீ, இந்த உலகுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது. ஆகவே, தாயாருக்குத் துன்பம் எதுவும் தராமல் வெளியே வா!''

இதைக் கேட்ட குழந்தை கர்ப்பப்பையில் இருந்தபடியே பேசியது

''தேவலோக சிற்பியே! பருமனான என் உடல் சுகமாக வெளியே வரத் தடையாக உள்ளது. எனவே என் உடலை சிறுகச் செய்து, என் அன்னைக்கு சிறிதும் துன்பம் நேராதவாறு எளிதில் நான் வெளியேறத் தாங்கள் அருள வேண்டும். மேலும், எனக்கு பொற் கோவணம், பொன் பூணூல் மற்றும் குண்டலம் ஆகியவற்றை வழங்கி உதவுங்கள்'' என்று கேட்டதாம். விஸ்வகர்மாவும் அதற்கு அருள் செய்து சுகப் பிரசவமாக அனுமன் பிறக்க உதவியதாக இத்தல புராணம் கூறுகிறது. அதனால் இந்தத் தலத்தில் ஆஞ்சநேயருக்கும் அஞ்சனாதேவிக்கும் விஸ்வகர்மாவுக்கும் விக்ரகம் உள்ளது.

பல காலம் வழிபாட்டில் இல்லாமல் இருந்த இந்தக் கோயில். 2001-ம் ஆண்டு பிரதோஷ கமிட்டி அமைக்கப்பட்டு அதன்பின் பராமரிப்புப் பணிகளும் பிரதோஷ வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது இந்தக் கோயில். மன்னர் மன்னர்கள் பராமரித்து வழிபாடுகள் சிறந்து விளங்கிய இந்தக் கோயில் தற்போது நலிவடைந்த கோயில்கள் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெறும் கோயிலாக மாறியிருக்கிறது. இந்தக் கோயிலில் பூஜை செய்துவரும் பூசாரி சேகரிடம் பேசினோம்.

“ ஆரம்பத்தில் பிரதோஷ நாளில் மட்டுமே வழிபாடுகள் நடந்தன. தற்போது தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று, ஸ்ரீஐராவதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தின் முதல் வாரத்திலும் ஆடி மாதம் கடைசி வாரத்திலும் பிரதோஷ வழிபாட்டின்போது சூரியக் கதிர்கள், ஸ்ரீஐராவதீஸ்வரர் மீது விழுந்து பூஜிப்பது, கண்கொள்ளாக் காட்சி. புராணப் பெருமைவாய்ந்த இந்தக் கோயிலிலிருந்து மண் எடுத்துச் சென்றுதான் மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டினார்கள் என்கிறது தலவரலாறு. அப்படியானால் இதுதான் ஆதி மீனாட்சி அம்மன் கோயில். இங்கு வேண்டிக்கொள்ளும் யாவும் நிறைவேறுகிறது என்பது கண்கூடாக நான் பார்க்கும் அதிசயம். குறிப்பாக காரணம் தெரியாமல் தொடர் துன்பங்களை அனுபவித்துவருபவர்கள் இந்த ஐராவதீஸ்வரரை வணங்கி வழிபட்டால் தொல்லைகள் தீரும். திருமண வரம் வேண்டுபவர்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கிறது. இந்தக் கோயிலின் பெருமையை அனைவரும் அறிந்து வந்து வணங்கிப் பயன்பெற வேண்டும்” என்றார்.

பூசாரி சேகருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதை விசாரித்து அறிந்துகொண்டோம். ஆனாலும் அவர் பக்தியோடு ஐராவதீஸ்வரரைக் கொண்டாடி வருகிறார். அவரால் முடிந்த அளவுக்குப் பூஜைகளையும் பண்டிகைகளையும் சிறப்பாக நடத்தி வருகிறார். அற்புதம் வாய்ந்த இந்தத் தலத்துக்கு வாய்ப்புள்ளவர்கள் சென்று வழிபாடு செய்து ஐராவதீஸ்வரரின் அருள் பெறலாம்.

எப்படிச் செல்வது?

மதுரை - உசிலம்பட்டி சாலையில் பொட்டுலுப்பட்டி கிராமத்துக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனையூர்.



source https://www.vikatan.com/spiritual/temples/madurai-temples-some-facts-and-history-about-anaiyur-airavateswarar-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக