மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ``கழக ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் உட்கட்சி தேர்தலை அறிவிக்க உள்ளனர். கிளை கழங்கள் வாரியாக ஜனநாயக வழியில் தேர்தலை நாம் நடத்த வேண்டும். கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
நம் இயக்கத்தின் பொன்விழாவை காண உள்ளோம். அமைப்பு ரீதியாக நம் இயக்கம் 77 மாவட்டங்களாக உள்ளது. உட்கட்சி தேர்தலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சிறப்பாக நடத்தி காட்டி பாராட்டு பெறவேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றது மட்டுமல்லாமல், ரத்து செய்ய வழி தெரியும், அந்த ரகசியத்தை சொல்ல மாட்டோம் என்று பேசி, மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க-வினர் ஏமாற்றிவிட்டனர்
ஆனால், தற்போது கமிட்டியை மட்டும் அமைத்துள்ளனர். நீட் தேர்வை மாணவர்கள் சந்திக்க வேண்டும் என்று முரண்பட்ட கருத்துகளை அமைச்சர் கூறி வருகிறார்.
Also Read: `தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை!' - கருத்துக் கணிப்பில் 87% பேர் கருத்து
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்ற வீராங்கனை பங்கேற்கிறார். ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் பங்கேற்பது குறித்து தி.மு.க பெருமையாக பேசுகிறது.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அம்மா ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டதன் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை. ஆனால், அம்மா அரசு கட்டிய கட்டடத்திற்கு தி.மு.க ரிப்பன் வெட்டுகிறது.
அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ரெய்டை சந்திக்கவேண்டி உள்ளது. அம்மா கொடுத்த பணிகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்படுத்தினார். அவர் துடிப்பு மிக்க இளைஞராக வலம் வந்தவர். போக்குவரத்துத் துறையை முன் மாதிரியாக மாற்ற பாடுபட்டார்.
புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் உள்ள நிலையில் அதை கவனிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க மீது சேற்றை வாரி இரைக்கும் நிகழ்வாகத்தான் இந்த ரெய்டை மக்கள் பார்ப்பார்கள்.
அ.தி.மு.க-வில் செந்தில்பாலாஜி இருந்தபோது அவர் மீது தி.மு.க குற்றம் சாட்டியது. இப்போது அமைச்சர் பதவி கொடுத்துள்ளது. செந்தில் பாலாஜி மீது தி.மு.க சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன ஆனது என்று மக்கள் கேட்கிறார்கள்.
எதிர்க்கட்சி இருக்கக்கூடாது என்று, சோதனை என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசு கையாண்டு வருகிறது. இதற்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்ட இந்த வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். " என்றார்.
source https://www.vikatan.com/news/politics/ex-minister-rb-udhayakumar-speech-in-madurai-event
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக