Ad

சனி, 24 ஜூலை, 2021

பி.வி.சிந்து : சில்வர் சிந்து தங்கம் வெல்வரா... முதல் சுற்றில் அதிரடி அட்டகாச வெற்றி!

ஆகஸ்ட் 19, 2016... அன்றைய இரவு பரபரப்பான வீதிகள் அனைத்தும் ஆழ்ந்த நிசப்தத்தில் இருந்ததது. மக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கின்றனர். எங்கள் வீட்டிலும் அப்படியே. பெரிதாக விளையாட்டுகளை விரும்பாத அப்பாவும் டிவி முன் அமர்ந்திருந்தார். ஒரு த்ரில்லர் படத்தின் உச்சபட்ச பரபரப்பு மிக்க க்ளைமாக்ஸ் காட்சியை பார்ப்பது போல மொத்த குடும்பமும் நகத்தை கடித்துக்கொண்டிருந்தது.

கடைசியாக இதே மாதிரியான ஒரு காட்சியை 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போதே பார்க்க முடிந்திருந்தது. அதை மீண்டும் நடத்திக்காட்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே நேரத்தில் வரவேற்பறைக்குள் அடைத்த பெருமை பி.வி.சிந்துவையே சேரும்.

பி.வி.சிந்து

ஒலிம்பிக்கின் அந்த இறுதிப்போட்டியில் சிந்து தோற்றிருந்தாலும் தேசத்தின் பெருமையாக இந்தியாவின் மகளாக உயர்ந்திருந்தார். இன்றைய தேதிக்கு பி.வி சிந்துவிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போதே இந்தியாவின் இண்டு இடுக்குகளில் எல்லாம் சென்று சேர்ந்துவிட்டார் சிந்து. ஆனால், அவர் கடந்து வந்த பாதையை விளக்காமல் அவரின் இன்றைய உயரத்தை மட்டுமே கொண்டாடுவது அவரது உழைப்பிற்கு செய்யும் அநீதி.

26 வயதாகும் பி.வி.சிந்து ஹைதராபாத்தில் பிறந்தவர். வாலிபால் குடும்பம் என அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு இவரது குடும்பத்தில் அத்தனை வாலிபால் வீரர்கள். பெற்றோர் இருவரும் வாலிபாலில் சீனியர் லெவலில் ஆடியவர்கள். சகோதரியும் வாலிபால் வீராங்கனை. இந்த குடும்பத்தை பொறுத்தவரைக்கும் பேட்மிண்டனுக்கு சிந்து ஒரு முதல் தலைமுறை வீராங்கனை.

6 வயதில் ரேக்கட்டை கையில் எடுத்தவர் இன்னமும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். சிந்து சிறுவயதில் போட்ட அடித்தளம் அவ்வளவு ஸ்ட்ராங்க்.

செகந்திராபாத்தில் உள்ள மெகபூப் அலியின் பயிற்சி மையத்தில் ஆரம்பக்கட்ட பயிற்சிகளை தொடங்கியவர், சீக்கிரமே கோபி சந்தின் அகாடெமியில் அடுத்தக்கட்ட பயிற்சிகளுக்காக சேர்ந்தார். தினமும் 50 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து அகாடெமிக்கு செல்ல வேண்டும். சிறுமியான சிந்துவிற்கு இது பெரும் அயர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மாறாக இதையெல்லாம் விரும்பி ரசித்து செய்தார் சிந்து. அவருக்கு அவர் அடையப்போகும் இலக்கின் மீது கவனம் இருந்தது. இடைப்பட்ட பயணத்தில் ஏற்படும் தடைகளையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

பி.வி.சிந்து

2009 ல் தேசிய அளவிலான சப் ஜுனியர் போட்டியில் வென்றதன் மூலம் தனது பதக்க வேட்டையை தொடங்கினார் சிந்து.  2012-க்குப் பிறகு சீனியர் லெவல் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய சிந்து பல சூப்பர் சீரிஸ்களையும் கிராண்ட் பிரிக்ஸ்களையும் வென்றார்.

இந்த காலக்கட்டத்தில் ஆசிய போட்டிகள், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டிகள் என அனைத்து பெரிய தொடர்களிலும் வெண்கலம் வென்றிருந்தார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதிப்பெற்றார்.

கவனமும் வெளிச்சமும் முழுக்க முழுக்க சாய்னா நேவால் மீதே இருந்தது. ஆனால், அவரோ முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றினார். கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரே சொதப்பிவிட்டதால் பேட்மின்டன் மீதான எதிர்பார்ப்பே குறைந்துப் போனது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி என எல்லாவற்றிலும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து இறுதிப்போட்டியில் கால் வைத்தார் சிந்து. இதன்பிறகே மொத்த இந்தியாவும் நடப்பதை உணர்ந்தது. சிந்து என்கிற பெயரை உச்சரிக்க தொடங்கியது. கரோலினா மரினுடனான இறுதி யுத்தத்தில் கடைசி வரை போராடி வீழ்ந்தார் சிந்து.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் போராடி வெல்பவர்களை வெற்றியாளரை விட ஒரு படி மேலே வைத்தே இந்திய சமூகம் கொண்டாடும். வெள்ளிப்பதக்கத்தோடு தோல்வியின் விரக்தியிலிருந்த சிந்துவை வாரியணைத்து ஆர்ப்பரித்து கொண்டாடியது இந்தியா.

ஒலிம்பிக்கின் பெண்களுக்கான தனிப்பிரிவில் வெள்ளி வென்ற முதல் பெண் என்கிற பெருமையை பெற்றார் சிந்து. ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றுவிட்டு வந்தவருக்கு மற்ற தொடர்களெல்லாம் ஒரு மடு போலவே தெரிந்தது. கலந்துகொள்ளும் பெரிய தொடர்களிலெல்லாம் பதக்கத்தை அள்ளினார். ஆனால், வெள்ளியும் வெண்கலமாகவும் மட்டுமே இருந்தன. முக்கியமான போட்டியில் சென்று சொதப்பும் கிரிக்கெட் அணியை போன்றே சிந்துவும் ஆடினார். இதனால் சில்வர் சிந்து என கிண்டல் தொனியிலான விமர்சனங்கள் வட்டமடிக்கத் தொடங்கின.

உலகின் நம்பர் 1 வீரராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் மெஸ்ஸிக்கே தன்னுடைய நாட்டிற்கு ஒரு கோப்பையை வென்று கொடுக்க 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.

மெஸ்ஸி மீது வைக்கப்படாத விமர்சனங்களே கிடையாது. அத்தனையையும் கடந்து மீண்டும் மீண்டும் முயற்சித்தார். இப்போது கோபா அமெரிக்கா கோப்பை மெஸ்ஸியின் கையில்! இதையேத்தான் சிந்துவும் செய்தார்.
பி.வி.சிந்து

சில்வர் சிந்து விமர்சனங்களுக்கு செவி கொடுக்காமல் தன்னுடைய இலக்கை நோக்கி மட்டுமே முன்னேறிக்கொண்டிருந்தார். சிறுமியாக இருக்கும்போது சிந்துவிடமிருந்த அதே உற்சாகத்தோடு!

விளைவு, 2018 காமென்வெல்த் போட்டியில் தங்கம், 2019 பாசெல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் என சில்வர் சிந்து தங்கமகளாக ஜொலிக்க தொடங்கினார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக சிந்துவின் மீதிருந்த நம்பிக்கை இன்னும் பல மடங்கு உயர்ந்தது.
சமீபத்தில் சிந்துவுடைய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் டோக்கியோவில் அவருடைய அனுபவம் அவருக்கு கைக்கொடுக்கும். மேலும், கடந்த முறை சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்ற கரோலினா மரின் இந்த முறை காயம் காரணமாக ஒலிம்பிக்கிற்கு வரவில்லை. இதெல்லாம் சிந்துவிற்கான சாதகமான அம்சமாக இருக்கிறது. அதற்கேற்ப டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் சுற்றில் இஸ்ரேலிய வீரங்கனை Ksenia Polikarpova-வை 21-7, 21-10 என நேர்செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சிந்து.

ஒரு சாமானிய இந்தியர் சிந்துவிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். ஆகஸ்ட் 19, 2016 இரவு நேர காட்சிகள் மீண்டும் அரங்கேற வேண்டும். தெருக்கள் நிசப்தமாக... குடும்பம் குடும்பமாக வரவேற்பறையில் கூட....செய்வீர்களா சிந்து?



source https://sports.vikatan.com/olympics/pvsindhu-starts-with-straight-set-win-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக