திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வேதாச்சலம் (26). பட்டப்படிப்பை முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, வேதாச்சலம் தற்செயலாக முகநூல் பக்கம் ஒன்றில் சென்னை - கே.கே.நகர், இ.எஸ்ஐ மருத்துவமனையில் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தினை பார்த்திருக்கிறார். வேதாச்சலம், Home Health Care என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது மறுமுனையில் பேசிய, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி (36) என்ற நபர் இ.எஸ்ஐ மருத்துவமனையில் Guest Relationship Executive பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், வேலைக்குச் சேர 60,000 ரூபாய் செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அதனை நம்பிய இளைஞர் வேதாச்சலம், பாலாஜி கூறியபடி சிறுக, சிறுக ரூபாய் 54,350 ரூபாயினை கூகுள் பே மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்கிறார். அதனையடுத்து, பணத்தைப் பெற்றுக்கொண்ட பாலாஜி வேதாச்சலத்தின் தொலைபேசிக்கு மின்னஞ்சல் மூலம் இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கான பணி ஆணை ஒன்றினை அனுப்பியிருக்கிறார். இ.எஸ்.ஐ மருத்துவமனையின் பேரில் வந்திருந்த அந்த பணி ஆணையினை எடுத்துக்கொண்டு, வேதாச்சலம் திருத்தணியிலிருந்து வேலையில் சேர்வதற்கான ஆவணங்களுடன் சென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
அங்கு, வரவேற்பறையிலிருந்த ஊழியர்களிடம் பணி ஆணையைக் காட்டி வேதாச்சலம் விசாரித்திருக்கிறார். அதை வாங்கி பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அது போலி என்று தெரியவரவே, உடனடியாக மருத்துவமனை உயரதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். அதனையடுத்து, வேதாச்சலத்தை விசாரித்த மருத்துவமனை ஊழியர்கள் பணி ஆணை போலியானதென்று கூறி திருப்பி அனுப்பியிருக்கின்றனர். அதனால், அதிர்ச்சியடைந்து போன வேதாச்சலம் முகநூல் நபரால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 22-ம் தேதி விவரத்தைக் கூறி புகார் அளித்திருக்கிறார்.
வேதாச்சலத்தின் புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அதை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு அனுப்பி விசாரிக்குமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மோசடி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லில்லி அவர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினார். குற்றம்சாட்டப்பட்ட பாலாஜியின் தொலைபேசி எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், மேடவாக்கம் பகுதியில் பாலாஜியை அவரது வீட்டில் வைத்து சில நாள்களுக்கு முன்பு அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், பாலாஜியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் பேரில் தயாரிக்கப்பட்ட போலி முத்திரைகள், பணி ஆணைகள் மற்றும் மோசடிக்காகப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகளையும் போலீஸார் கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் அழைத்துச் செல்லப்பட்டு பாலாஜியிடம் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், பாலாஜி கடந்த சில வருடங்களாக அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. வேதாச்சலத்திடம் இ.எஸ்.இ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதை போலவே, பாலாஜி மேலும் 54 பேரிடம் இ.எஸ்.இ மருத்துவமனையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், தென்னக ரயில்வே-யில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 பேரிடம் பாலாஜி தன் கைவரிசையைக் காட்டி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, பாலாஜியைத் திருவள்ளூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பள்ளிப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read: “பிரமாண்ட இமேஜ்... கோடிகளில் மோசடி!” - சிக்கலில் கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்
கைது செய்யப்பட்ட நபர், முகநூல் விளம்பரம் மூலம் படித்து விட்டு வேலை தேடித் கொண்டிருக்கும் இளைஞர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு வேலை என்றவுடன் ஏற்படும் ஆசையையும், ஆவலையும் தங்களின் மோசடிகளுக்கு மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு லட்சங்களைச் சுருட்டி விடும், டிப்-டாப் ஆசாமிகளிடம் உஷாராக இருக்க வேண்டும் என்கிறார்கள் காவல்துறையினர்.
source https://www.vikatan.com/news/crime/tiruvallur-cyber-crime-police-arrested-person-who-cheated-youngsters-by-giving-fake-govt-job-orders
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக