Ad

வெள்ளி, 23 ஜூலை, 2021

ஒலிம்பிக் ஹாக்கி : நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா… ஹர்மன்ப்ரீத் இரட்டை கோல் அடித்தார்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது இந்தியா. ஆட்டத்தை தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே இந்தியாவுக்கு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, ஹர்மன்ப்ரீத்தின் பேட்டுக்குப் பந்து போனது. பெனால்ட்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட்டான ஹர்மன்ப்ரீத் இந்த வாய்ப்பைத் தவறவிட்டார்.

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து நியூசிலாந்து முன்னிலைப் பெற்றது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. நியூசிலாந்து தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டம் ஆட இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ரூபிந்தர் பால் இந்த வாய்ப்பை கோலாக்கி 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தார்.

26வது நிமிடத்தில் இந்தியாவுக்கு இன்னொரு பெனால்ட்டி வாய்ப்பு. இந்தமுறை ரூபிந்தர் பந்தை ஹர்மன்ப்ரீத்துக்குத் தட்டிவிட ஹர்மன் அதை கோலாக்கினார். இரண்டாவது பாதியில் மீண்டும் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்ப்ரீத் கோலாக்க 3-1 என முன்னிலைப் பெற்றது இந்தியா. ஆட்டத்தின் 43 வது நிமிடத்தில் மீண்டும் நியூசிலாந்து ஒரு கோல் அடித்து 3-2 என ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது.

ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் நியூசிலாந்துக்கு பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இந்த வாய்ப்புகளை இந்தியாவின் கோல்கீப்பர் ஶ்ரீஜிஷ் அற்புதமாகத் தடுத்து இந்தியாவுக்கு 3-2 என வெற்றியைத் தேடித்தந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கை வெற்றியோடு தொடங்கியிருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.



source https://sports.vikatan.com/olympics/india-wins-the-first-match-against-new-zealand-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக