நூற்றாண்டு காணாத பெருந்தொற்றை சந்தித்து மீண்டு வர தொடங்கியிருக்கிறோம். அதற்கான முக்கிய காரணம், முன்களப் பணியாளர்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அத்தனை பேரும் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக போராடியிருக்கின்றனர். அவர்களின் பிரதிநிதி போல ஒருவர் ஈரானிலிருந்து கிளம்பி வந்து டோக்கியோவில் தங்கம் வென்றிருக்கிறார்.
ஜாவத் ஃபரூகி. 41 வயதாகும் இவர் ஈரானை சேர்ந்த செவிலியர். ஈரானில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிக்கொண்டே துப்பாக்கிச்சுடுதல் பயிற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
சிரியாவுக்கு ஈரான் படைகள் சென்றபோது அதன் மருத்துவக் குழுவில் இடம்பெற்று போர்ச்சூழலிலும் பணியாற்றியிருக்கிறார். கொரோனா தொற்று பரவல் உலகமெங்கும் வேகமெடுத்தபோது, மருத்துவமனையின் ஐ.சி.யு-வில் நோயாளிகளுக்கு சேவை செய்திருக்கிறார். பல நேரங்களில் மருத்துவமனையின் அடித்தளத்திலுள்ள பயிற்சியரங்கிலேயே துப்பாக்கிச் சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
கொரோனா கால செவிலிய பணியின் போது இரண்டு முறை தொற்றுக்கு ஆளாகியும் மீண்டு வந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.10மீ ஏர் பிஸ்டல் பிரிவை சேர்ந்த இவர், ஒலிம்பிக்கிற்கு முன்பாக நடைபெற்ற குரோஷியா, டெல்லி உலகக்கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். டோக்கியோவில் நேற்று 10மீ ஏர் பிஸ்டல் போட்டி தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் சௌரப் சௌத்ரியும், அபிஷேக் வெர்மாவும் பங்கேற்றிருந்தனர். தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் சௌரப் சௌத்ரி முதல் இடம் பிடிக்க, ஃபரூகி ஐந்தாவது இடமே பிடித்திருந்தார்.
சவால்மிக்க இறுதிப்போட்டியில் 244.8 புள்ளிகளோடு ஒலிம்பிக் ரெக்கார்டையும் செட் செய்து, தங்கப்பதக்கம் வென்றார் ஃபரூகி.
தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்த சௌரப் சௌத்ரி, பீஜிங்கில் தங்கம் வென்ற சீனாவை சேர்ந்த பேங் வே என வீழ்த்துவதற்கு கடினமான வீரர்களை தாண்டி வென்றிருந்தார் ஃபரூகி.
ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதலில் ஈரானுக்கு தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர், ஈரானுக்கு பதக்கம் வென்று கொடுத்த வயதான வீரர் என பல பெருமைகளையும் பெற்றார்.
ஃபரூகிக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதால் துப்பாக்கிச்சுடுதலில் எல்லாம் கொஞ்சம் கவனமாகவே ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டியே வென்றிருக்கிறார் ஃபரூகி.
பதக்கத்தை வென்ற பிறகும் ஒரு முன்களப்பணியாளராகவே பேசியிருக்கிறார்
அவரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த முன்களப்பணியாளர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் போன்றே கருதப்படுகிறது.
source https://sports.vikatan.com/olympics/javad-foroughi-a-front-line-health-worker-from-iran-won-a-gold-in-olympics-shooting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக